சனி, 26 பிப்ரவரி, 2011

மாதவராஜ் மற்றும் ஆனந்த விகடனுக்கு நன்றிகள்

இயக்கம் ஆரம்பித்து சிலமாதங்களே ஆகியுள்ளன அனால் இது பரவலாக சென்றடைந்து உள்ளது எங்களுக்கு மிகவும் உற்சாகம் அளிக்ககூடிய விசயமாகும். சிறந்த எழுத்தாளரான மாதவராஜ்  அவர்கள் தனது மாதவராஜ் பக்கங்களில் இயக்கத்திற்கு நல்ல அறிமுகம் தந்தார் , மிகப்பெரிய வாசகர் வட்டத்தை தன்னகத்தே கொண்டுள்ள ஆனந்த விகடன் போன்ற வெகுஜன இதழ் இயக்கத்தை பற்றி நல்ல அறிமுகம் செய்துள்ளது இயக்கத்திற்கு எல்லையில்லா உற்சாகத்தை தரும் செய்தியாகும். மாதவராஜ் மற்றும் ஆனந்த விகடனுக்கு இயக்கத்தின் சார்பில் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். இதனால் இயக்கத்தின் பொறுப்புணர்வு அதிகரித்து உள்ளது.அது உழைக்கும் வர்க்கத்திற்கு அதனால் ஆனா கடமையை ஆற்றும்.

என்றும் உண்மையுடன்

இயக்கம் ஆசிரியர் குழு

பிப்ரவரி 27 இந்திய மண்ணின் விடுதலைக்காக இன்னுயிர் ஈந்த தியாகி சந்திர சேகர் ஆசாத்தின் நினைவு நாள்


அவரது உன்னத வாழ்க்கையை நினைவு கூர்கிறது  மாற்றுக்கருத்து

இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் தங்களது அளப்பரிய தியாகங்களால் மின்னும் நட்சத்திரங்களாக விளங்கியவர் பலர் இருந்தனர். அவர்களில் சிலரது தியாகங்கள் யாராலும் மறைக்கவியலாதவாறு பிரபலம் பெற்றன. ஏகாதிபத்திய ஆட்சியாளர்களின் தூக்கிலிடுதல் போன்ற கொடூர நடவடிக்கைகளால் அத்தகைய பிரபலத் தன்மை அவர்களது வரலாற்றிற்குக் கிட்டியது. அந்த ஒளிப் பிரவாகத்தில் கூசிப் போன கண்களுக்கு அதையொத்த  பல தியாக வரலாறுகள் அவ்வளவு தூரம் புலப்படாது போய்விட்டன. அத்தகைய மகத்தான மறைக்கப்பட்ட தியாக வரலாறுகளில் ஒன்றுதான் தியாகி சந்திர சேகர் ஆசாத்தின் வரலாறாகும்.

பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோர் செயல்பட்ட ஹிந்துஸ்தான் சோ­லிஸ்ட் ரிபப்ளிக்கன் ஆர்மி என்ற அமைப்பின் இராணுவப் பிரிவின் தலைவராக விளங்கியவர் சந்திர சேகர் ஆசாத் ஆவார். தனது 15,ஆவது வயதில் அதாவது பள்ளிப் பருவத்திலேயே ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்டமைக்காகக் கைது செய்யப்பட்ட சந்திர சேகர் சீத்தாராம் திவாரி,  நீதிமன்ற விசாரணையின் போது தனது இயற்பெயரைத் துறந்து தனக்குத் தானே ஆசாத் என்ற பெயரைச்  சூட்டிக்கொண்டார். விடுதலை என்ற பொருள் கொண்ட அப்பெயரை உச்சரித்ததற்காக வெள்ளை நீதிமன்றம் அவருக்கு விதித்த 15 சவுக்கடிகள் என்ற தண்டனையை ஒவ்வொரு அடி அவர் மேல் விழுந்த போதும் பாரத அன்னை வாழ்க! என்ற முழக்கத்துடன் அதனை எதிர் கொண்டார். ஒத்துழையாமை இயக்கம் காந்தியடிகளால் இடையில் நிறுத்தப்பட்டது விடுதலைப் போரில் மிகுந்த நம்பிக்கையுடன் களமிறங்கிய பலரைப் பயங்கரவாத நடவடிக்கைகள் பக்கம் தள்ளியது. அவ்வாறு தள்ளப்பட்டவரில் ஆசாத்தும் ஒருவர்.

தங்களது துணிச்சலான நடவடிக்கைகளின் மூலம் சோர்வுற்றிருந்த இளைஞர் சமூகத்தைத் தட்டியெழுப்ப விரும்பிய ஆசாத் போன்றவர்களை வெள்ளை அரசு மிகக் கடுமையான அடக்கு முறைகள் மூலம் வேட்டையாடியது. அடக்கு முறைகளைத் துச்சமெனக் கருதி தங்களது நடவடிக்கைகளைத் தொடர்ந்த நிலையிலும் அவர்களுக்குக் கிடைத்த அனுபவம் புகட்டிய படிப்பினையை அவர்கள் ஏற்றுக் கொள்ளத் தயங்கவில்லை. அப்படிப்பினை வரலாற்றின் ஒரு விதியினை, அதாவது ஏகாதிபத்தியத் தளையிலிருந்தான இந்திய மண்ணின் உண்மை விடுதலை விவசாயிகள் மற்றும் தொழிலாளர் பங்கேற்பின்றிச் சாதிக்கப்பட முடியாது என்ற படிப்பினையை அவர்கள் மனதில் ஆழப்பதித்தது. அது மட்டுமின்றி வெள்ளையரிடமிருந்து பெறும் நமது விடுதலை சுதேசி முதலாளிக் கொள்ளையரின் கைகளில் சென்று சேர்ந்து விடக்கூடாது என்றும் அவர்கள் கருதினர். அதன் காரணமாகவே அவர்கள் தாங்கள் உருவாக்கிய அமைப்பிற்கு சமூகத்தின் அடிப்படை மாற்றத்தை வலியுறுத்தும் முகமாக ஹிந்துஸ்தான் சோ­சலிஸ்ட் ரிபப்ளிக்கன் ஆர்மி என்ற பெயரினைச் சூட்டினர்.
செயல்பாட்டிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்த அவர்கள் சரியான புரிதலின்றி மேலோட்டமாக உணர்ச்சி வசப்பட்டு அறிவித்ததே அவர்களது சோ­லிஸக் கண்ணோட்டம் என்பதே அக்கால கட்டத்தில் அவ்விளைஞர்கள் குறித்த பலரது புரிதலாக இருந்தது. அத்தகைய புரிதலின் அடிப்படையில் காந்தி இர்வின் பேச்சுவார்த்தைகளின் போது அரசியல் கைதிகளுக்கான பொது மன்னிப்பைத் தங்களை ஒத்தவர்களுக்கும் வலியுறுத்திக் கோருவதற்காக பண்டித ஜவஹர்லால் நேருவைச் சந்திக்கச் சென்ற சந்திர சேகர் ஆசாத்திடம் நேரு வினவினாராம் நீங்கள் கொண்டுவர விரும்பும் சோ­லிசம் எத்தகையது என்று. எவ்விதத் தயக்கமுமின்றி ஆசாத் நேருவிடம் கூறினாராம். நாங்கள் கொண்டுவர விரும்புவது விஞ்ஞான சோசலிசம்; அதனால் தான் கார்ல் மார்க்ஸின் கருத்துக்களை ஏற்றுக் கொள்வதை எங்கள் அமைப்பில் சேர்வதற்கான முன் நிபந்தனையாகத் நாங்கள் வைத்திருக்கிறோம் என்று.

சோசலிசக் கண்ணோட்டத்தினால் கவரப்பட்ட பின்பு பயங்கரவாத நடவடிக்கைகளில் அவர்களுக்கிருந்த நம்பிக்கை அகன்று விட்டது. அதே சமயத்தில் காந்தியடிகள் வலியுறுத்திய சாத்வீக வாதம் உண்மையான விடுதலையைச் சாதித்துத் தரும் என்று நம்பிக்கையும் அவர்களிடம் ஏற்படவில்லை. ஆளும் வர்க்கங்கங்களின் அடக்குமுறை நடவடிக்கைகள் சமூக ரீதியாகவே ஒரு பெரும் எழுச்சியை உருவாக்கும்; ஆளும் வர்க்க வன்முறைக்கு எதிரான எதிர் வன்முறையைக் கொண்டதாகவே அது இருக்கும் என்றே அவர்கள் கருதினர். உணர்ச்சியோடு சோசலிசக் கருத்துக்களைக் கற்றறியும் ஆர்வத்தைக் கொண்டவர்களாகவும் அவர்கள் விளங்கினர். அக்கருத்துக்களைக் கற்றறிவதற்குத் தேவையான அளவு ஆங்கில அறிவு பெறாதவராக இருந்த போதும் ஆசாத் அக்கருத்துக்களை பகத்சிங் போன்றவர்களை வாசித்து மொழி பெயர்த்துக் கூறச் சொல்லி அறியும் ஆவல் கொண்டவராக விளங்கினார். சித்தாந்தம் மட்டுமல்ல; அதனை நடைமுறைப் படுத்துவது குறித்த முதல்தர அறிவினைப் பெறுவதற்காக பிரித்வி சிங் என்ற தோழரை சோவியத் யூனியனுக்கு அனுப்பவும் ஆசாத் திட்டமிட்டார்.
அது குறித்து சுகதேவுடன் (இவர் பகத்சிங்குடன் தூக்கிலிடப்பட்ட சுகதேவ் அல்ல) அலகாபாத்தில் உள்ள ஆல்பெர்ட் பூங்காவில் பேசிக் கொண்டிருந்த போது தான் வெள்ளை அரசின் காவல்துறை அவரைச் சுற்றி வளைத்துச் சுட்டுக் கொன்றது.

கம்யூனிஸ சித்தாந்தத்தின் அரவணைப்பிற்குள் வந்ததால் தான் பல பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்களிடம் அவர்கள் கைகொண்ட ரகசிய நடவடிக்கைகளை மையமாகக் கொண்டு தோன்றிய எந்திரகதியிலான சிந்தனைப் போக்கும் அது அவர்களிடம் தோற்றுவித்திருந்த ஒருவகை பாசிஸ மனநிலையும்  சந்திர சேகர் ஆசாத் போன்றவர்களிடம் இல்லாதிருந்தது. பல சமயங்களில் இந்து மறுமலர்ச்சி வாதம் போன்ற மதவாதப் போக்குகள் தோற்றுவித்த குருட்டுத்தனமான நம்பிக்கையினை அடிப்படையாகக் கொண்ட மனப் போக்கே அத்தகைய எந்திர கதியிலான சிந்தனைப் போக்கை பல பயங்கரவாத அமைப்புப் பின்னணியைக் கொண்டிருந்தவர்களிடம் ஏற்படுத்தியது. அப்போக்கை அறவே களைய வேண்டும் என்பதற்காகவே ஆசாத் தலைமையில் இயங்கிய எச்.எஸ்.ஆர்.ஏ. அமைப்பைச் சேர்ந்தவர்களிடம் மத அடையாளங்கள் இல்லாதிருப்பது வற்புறுத்தப்பட்டது. பகத்சிங் தனது சீக்கிய மத அடையாளங்களிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டதும் அந்த அடிப்படையில் தான்.

அத்தகைய எந்திர கதியிலான சிந்தனைப் போக்கிலிருந்து ஆசாத் விடுபட்டிருந்ததே அவரைத் தாயன்பும், சகோதர பாசமும் மிக்க தலைவராகவும் மிளிரச் செய்தது. பகத்சிங்கை அவர் தனது சொந்த சகோதரன் போலவே பாவித்தார். பாராளுமன்றத்தில் குண்டு வீசுவதற்குப் பகத்சிங்கை அனுப்ப அவர் மிகவும் தயங்கினார். சாண்டர்ஸ் கொலை வழக்கில் அவர் சிக்கிக் கொள்வார் என அஞ்சினார். தனது உயிர் குறித்து எள்ளளவு கூடக் கவலைப் படாத அவரது உள்ளம் பகத்சிங்கின் இன்னுயிரைக் காக்கப் போராடியது. தான் தலைமறைவாக இருந்த ஒரு வீட்டில் பெண் பிள்ளை ஒருவரை மணமுடித்துக் கொடுக்கவியலாது அவ்வீட்டினர் அல்லலுற்ற நிலையைக் கண்ணுற்ற அவர், தன்தலைக்கு வெள்ளை அரசால் வைக்கப் பட்டிருந்த விலையினைப் பெற்றாவது அப்பெண் பிள்ளையின் திருமணத்தை முடியுங்கள் என அவர்களைக் கேட்டுக் கொண்டார்.
இத்தகைய மகத்தான நற்குணங்கள் கொண்டவராக இருந்த அந்த மாமனிதர்,தன் உடல், பொருள், ஆவி அனைத்தையும் தேச விடுதலைக்குத் தத்தம் செய்த தியாகி, வீர்பத்ர திவாரி என்ற போலீஸூக்குத் துப்புக் கொடுப்பவனால் காட்டிக் கொடுக்கப்பட்டு நாட் போவர் என்பனின் தலைமையிலான வெள்ளைப் போலீஸ் படையினால் சுற்றி வளைக்கப்பட்டு அலகாபாத்தின் ஆல்பெர்ட் பூங்காவில் அவர்களை எதிர்த்துப் போரிட்டு அவர்களில் பலரைப் படுகாயப் படுத்திய பின்னர் வீர மரணம் அடைந்தார். அந்தத் துயர சம்பவம் 1931ம் ஆண்டு பிப்ரவரி 27 ம் நாள் நடைபெற்றது. பல காலம் வெள்ளைப் போலீஸார் கைக்குச் சிக்காது அவர்களுக்குச் சிம்ம சொப்பனமாக விளங்கிய ஆசாத்தைக் கொன்றுவிட்ட  களிப்பில் வெள்ளைப் போலீஸார் திளைத்திருந்த வேளையில் அலகாபாத் நகர மக்கள் ஆசாத்தின் குருதியினால் தோய்ந்த அவர் சுடப்பட்ட இடத்தின் மண்ணைச் சேகரித்து அவரின் நினைவைப் போற்றிப் பாதுகாக்கும் உண்மையான திருப்பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டிருந்தனர். அவர் மீது மக்கள் கொண்டிருந்த அபிமானத்தைக் கண்டு பீதியுற்ற வெள்ளை அரசு யாருக்கும் தெரியாத வகையில் ரசூலாபாத் என்ற இடத்திற்கு அவரது உடலை எடுத்துச் சென்று தகனம் செய்தது. அன்றுதொட்டுத் தாக்குதலின் போது அவர் மறைந்து கொள்ள இடமளித்த மரம் மக்களின் வழிபாட்டுப் பொருளாக ஆனது. அதைக் காணச் சகிக்காத வெள்ளை அரசு அம்மரத்தை வெட்டிச் சாய்த்தது. அவ்விடத்தில் வேர்விட்டுத் தளைத்த மற்றொரு மரத்தடியில் ஆசாத்தின் வீரத் திருவுருவம் இப்போது சிலையாக நின்று கொண்டிருக்கிறது.

அடிமைச் சவுக்கடியின் வேதனையை உள்ளார்ந்து உணர்ந்து அதற்கு எதிராகத் தனது அப்போதைய சிந்தனைகளுக்குகந்த விதத்தில் போராடத் தொடங்கி, அனுபவம் கற்றுக் கொடுத்த பாடத்தினை உதாசீனம் செய்யாது அதிலிருந்து படிப்பினை எடுத்துச் செயல்பட ஆரம்பித்து அதன் மூலம் சமூகத்தின் உண்மையான விடுதலை மார்க்சியக் கருத்தோட்டத்தின் அடிப்படையில் தான் சாதிக்கப்பட முடியும் என்றறிந்து அதனைச் செயல்படுத்த வல்ல அமைப்பிற்கு உருக்கொடுத்து சமூக விடுதலைக்கு அடித்தளமிட்டுத் தனது வீரத்தாலும் தியாகத்தாலும் இன்றும் நமது இளைஞர் சமூகத்தின் உத்வேகமாகவும் உன்னத எடுத்துக் காட்டாகவும் விளங்கும் தியாகி சந்திர சேகர் ஆசாத்தை மாற்றுக் கருத்து அவரது நினைவு தினத்தில் மனதார நினைவு கூர்கிறது. அவரது நினைவை அகற்ற நினைக்கும் ஆளும் வர்க்கச் சதியினை தனது எழுத்துக்கள் மூலம் முறியடித்து என்றென்றும் அவரது நினைவு மங்காது மக்களது மனதில் நீடித்து நிலைபெறத் தன்னாலியன்ற அனைத்தையும் செய்ய நமது இதழ் உறுதி ஏற்கிறது.

வாக்கு வங்கி இல்லாத வள்ளுவரும் தொல்காப்பியரும் இப்போது எதற்கு?


"விளம்பரங்கள் என்ற பெயரில் வள்ளுவரோடும் தொல்காப்பியரோடும் என்னை ஒப்பிடக் கூடாது. அவர்களுக்கு எந்த வகையிலும் நான் பொருத்தமானவன் அல்ல. என்னை வள்ளுவரே என்றும் தொல்காப்பியரே என்றும் சொல்லி என் மனதைப் புண்படுத்தாதீர்கள். ஒருவரைப் புகழ்வதற்கும் அளவு இருக்கிறது"

இப்படிச் சொல்லியிருப்பது யாரோ புகழ்ச்சியை விரும்பாத முற்றும் துறந்த ஞானி ஒருவர் என்று அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் வந்துவிட வேண்டாம். இவர் தமிழ்நாட்டில் சுயவிளம்பரக் கலாச்சாரம் எனும் விஷத்தைப் பரப்பிக் கொண்டிருக்கும் விஷவிருட்சம் போன்றதொரு இயக்கத்தின் தலைவர், எப்போதும் யாராவது ஒருவர் தன்னைப் புகழ்ந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதற்காக கூடவே காக்காக் கூட்டங்களை வைத்திருப்பவர். இக்காக்காக் கூட்டங்களுக்குத் தீனியாக அவ்வப்போது வாரியத் தலைவர், தேர்வுக்குழு உறுப்பினர் பதவிகள், துண்டுப்பிரசுரங்கள் வினியோகிப்பது போல் கலைமாமணி விருதுகள் என இரை தூவிக் கொண்டிருப்பவர்..... அட நம்ம முதல்வர் கருணாநிதிதாங்க அது! அமைச்சர் வேலுவின் இல்லத் திருமண விழாவில்தான் அவர் அப்படிப் பேசியுள்ளார் (தினமணி 24.02.11). என்ன இப்படிச் சொல்லாமல் கொள்ளாமல் திடீர்னு திருந்திட்டாரே என்று நினத்து விடாதீர்கள். சோழியன் குடுமி சும்மா ஆடுமா?

வாழும் வள்ளுவர், எங்க காலத் தொல்காப்பியர் என அவரது அல்லக் கைகள் (அதாங்க தொண்டர்கள்) அடிக்கடி ஃப்ளக்ஸ் வைப்பதும் செய்தித்தாள்களில் முழுப்பக்க விளம்பரங்கள் கொடுப்பதும் கடந்த பல ஆண்டுகளாக நடந்துவரும் வழக்கமான வேடிக்கைகள்தான். இப்படிவரும் விளம்பரங்களைப் பார்வையிட்டு எந்த வட்டம், மாவட்டம் அதிகமாக புகழ்ந்து தள்ளியிருக்கிறார் என்று பார்த்து 'தலைவரின்' கவன‌த்திற்குக் கொண்டு வருவதெற்கென்றே பதினோரு பேர் கொண்ட குழு இருப்பதாகவும் கேள்வி.

இப்படிப் புகழ்ச்சிக்காக ஏங்கும், யாரும் புகழாமல் விடுபட்டுப் போன தன்னிடமிருக்கும் அம்சங்களை (!!??) தானே கண்டு புகழும் தற்புகழ்ச்சிக்கும் தயங்காத இவர் இன்று புகழ்ச்சி தாங்காமல் கூச்சத்தில் நெளிவது போல் தெரிகிறதே. ஒருவேளை புகழ்ச்சி புளித்துச் சலித்துவிட்டதோ. கடைசிக் காலத்தில் புகழையே வெறுக்கும் யோகியாகி விட்டாரோ. அதுதான் இல்லை.  அவர் புகழ்ச்சியை வெறுக்கவில்லை. சட்டசபைத் தேர்தல் வரும் நேரத்தில் இதுபோன்ற திருமணவிழா விளம்பரங்களின் மூலம் வாக்குச் சேகரிக்கும் வாய்ப்புப் போச்சே என்ற ஆதங்கம்தான் அவருக்கு. தனக்கு வந்துவிட்ட தேர்தல் காய்ச்சல் அமைச்சர் வேலுவுக்கும் தொண்டர்களுக்கும் வரவில்லையே என்ற கோபம் வேறு.

வள்ளுவரே, தொல்காப்பியரே என்றால் யார் ஓட்டுப் போடுவார்கள்? வள்ளுவருக்கும் தொல்காப்பியருக்கும் எந்த ஜாதிச் செல்வாக்கும் இல்லையே. அதனால்தான் முதல்வர் கருணாநிதி அந்த விழாவிலேயே "என்மீது என்னதான் ஆசை இருந்தாலும் அன்பு இருந்தாலும் என்னைப் பாராட்ட வேண்டும் என்று கருதினால் ஏழைகளுக்குத் தோழர், ஆதிதிராவிடர்களுக்கு, அனாதைக் குழந்தைகளுக்கு, நோயுள்ள குழந்தைகளுக்கு இந்த அரசு ஆற்றும் பணிகளை ஒன்று திரட்டி அந்த வடிவத்தில் என்னைப் புகழுங்கள்" என்று தேர்தல் காலப் புகழுரைகளுக்கு அடியெடுத்துக் கொடுத்துள்ளார். கவனித்தீர்களா, புகழ வேண்டாம் என்று சொல்லவில்லை. தேர்தல் காலத்தில் எப்படிப் புகழ வேண்டும் என்று தான் சொல்கிறார். அதுமட்டுமல்ல. இந்த எச்சரிக்கையை திமுக தோழர்கள் பின்பற்ற வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார். ஆக இனி கழக உடன்பிறப்புகளின் இல்லத் திருமணவிழாக்களுக்கு வைக்கப்படும் விளம்பரங்களிலும் அரசின் சாதனைகளின் பட்டியலை நாம் காணலாம்.

வள்ளுவரும் தொல்காப்பியரும் தேர்தல் இல்லாக் காலங்களில் புகழ்வதற்கு இருப்பில் வைக்கப்பட வேண்டியவர்கள். இதுவோ தேர்தல் காலம். வாக்கு வங்கி இல்லாத வள்ளுவரும் தொல்காப்பியரும் இப்போது எதற்கு? 

எது எப்படி இருந்தாலும் வள்ளுவரும் தொல்காப்பியரும் இனிக் கொஞ்சகாலத்திற்கு நிம்மதியாக இருப்பார்கள் என்பதை நினைக்கும் போது மனதுக்குச் சற்று ஆறுதலாகத்தான் இருக்கிறது. தேர்தலுக்கு நன்றி!

வெள்ளி, 25 பிப்ரவரி, 2011

கடாஃபியின் கையைவிட்டு நழுவுகிறது லிபியா: உள்நாட்டுப் போர் மூளும் சூழல்

டுனீசியா, எகிப்துக்கு அடுத்தபடியாக லிபியாவில் சர்வாதிகார ஆட்சி ஒழியப் போவது நிச்சயமாகிவிட்டது.அதிபர் மம்மர் கடாஃபியின் 41 ஆண்டுக்கால ஆட்சியின் வீழ்ச்சி தொடங்கிவிட்டது.லிபிய நாட்டின் கிழக்குப் பகுதி எதிர்ப்பாளர்கள் வசமாகிவிட்டது.ராணுவத் தளபதிகளே கடாஃபியின் ஆட்சி பிடிக்காமல் மக்களோடு சேர்ந்துகொண்டுவிட்டனர்.லிபியாவின் தூதரக அதிகாரிகள் ஒவ்வொருவராக பதவி விலக ஆரம்பித்துவிட்டனர்.மம்மர் கடாஃபியின் ஆட்சிக்கு முடிவு கட்டும் நேரம் வந்துவிட்டது என்று அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் முடிவு செய்துவிட்டன. அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்படுவதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க முடியாது என்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலர் பான் கி மூனும் அறிவித்துவிட்டார்.தடைகள் விதிக்கப்படும்: முதல் கட்டமாக லிபியா மீது ராணுவ, பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என்றும் அதன் பிறகும் நிலைமை சீரடையவில்லை என்றால் பன்னாட்டுப் படைகள் மூலம் லிபிய ஆட்சியாளர்கள் விரட்டப்படுவார்கள் என்றும் தெரிகிறது.கடாஃபிக்கு விசுவாசமாக இருக்கும் ராணுவத்தினரும் கூலிப்படையினரும் தலைநகர் திரிபோலியில் மக்களைக் கொடூரமாக அடக்கி ஒடுக்குகின்றனர்.மேற்கிலும் பரவியது கலகம்: அதிபர் கடாஃபிக்கு எதிரான கலகம் லிபிய நாட்டின் மேற்குப் பகுதிக்கும் பரவியது. மக்களுக்கு ஆதரவாகக் களத்தில் இருந்து செயல்படுவோம், கடாஃபி கட்டளை இட்டாலும் மக்களைச் சுடமாட்டோம் என்று ராணுவ அதிகாரிகள் அறிவித்தனர்.மிசுராடாவில் ராணுவம் சுட்டது: அதே சமயம் திரிபோலிக்கு 210 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மிசுராடா என்ற ஊரில் கடாஃபிக்கு விசுவாசமாக இருக்கும் ராணுவத்தினர் கண்மூடித்தனமாகச் சுட்டதில் ஏராளமானோர் உயிரிழந்தனர், பலர் காயம் அடைந்தனர் என்று பி.பி.சி. தெரிவிக்கிறது.விலகிய அமைச்சர் கடத்தப்பட்டார்? கடாஃபியின் சர்வாதிகார ஆட்சியின் அடக்குமுறை பிடிக்காமல் பதவியை ராஜிநாமா செய்வதாக உள்துறை அமைச்சர் அப்துல் ஃபதா யூனஸ் அல் அபிதி அறிவித்திருந்தார். அவரைத் தனக்கு விசுவாசமான ராணுவத்தார் மூலம் அதிபர் கடாஃபி எங்கோ கடத்திச் சென்றுவிட்டார் என்பது வியாழக்கிழமைதான் தெரிந்தது. அவர் உயிரோடு இருக்கிறாரா, சித்திரவதை செய்யப்படுகிறாரா அல்லது சுட்டுக்கொன்றுவிட்டார்களா என்று எதுவுமே தெரியவில்லை.மேஜர் ஜெனரல் மக்களுடன் சேர்ந்தார்: டொப்ருக் என்ற நகரில் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் சுலைமான் மெஹ்மூத் என்பவர் கடாஃபியின் பக்கமிருந்து விலகி மக்கள் பக்கம் சேர்ந்துகொண்டுவிட்டார். கடந்த காலத்தில் அவருக்கு விசுவாசமாக இருந்தோம், இப்போது நிலைமை மாறிவிட்டது, கடாஃபி இரக்கமற்ற சர்வாதிகாரி என்று கூறினார் சுலைமான் மெஹ்மூத்.திரிபோலியில் ராணுவம் ரோந்து: தலைநகர் திரிபோலியில் கடாஃபிக்கு விசுவாசமான ராணுவ வீரர்களும் கூலிப்படையினரும் அச்சமூட்டும் வகையில் நகரில் ரோந்து சுற்றி வருகின்றனர். எவராவது வீதியில் என்ன நடக்கிறது என்று வீட்டிலிருந்தபடி எட்டிப்பார்த்தால்கூட அழைத்துச் செல்கின்றனர். வீட்டில் இருப்பவர்கள் கெஞ்சினாலும் அடித்து இழுத்துச் செல்கின்றனர். நீ அதிபருக்கு விசுவாசியா, துரோகியா என்று கேட்கின்றனர்.தகவல் தொடர்பு துண்டிப்பு: லிபிய மக்கள் வெளிநாடுகளில் உள்ள தங்களுடைய உறவினர்களுடன்கூட பேச முடியாதபடிக்கு தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டிருக்கிறது. தொலைபேசி, கைபேசி, இணையதளம் உள்ளிட்ட அனைத்து தகவல் தொடர்புகளும் துண்டிக்கப்பட்டுவிட்டன. இதனால் லிபியாவில் இருக்கும் தங்களுடைய உறவினர்களும் நண்பர்களும் என்ன ஆனார்கள் என்றுகூட தெரியாமல் மற்றவர்கள் பரிதவிக்கும் நிலைமை ஏற்பட்டிருக்கிறது.விமான நிலையங்களில் மக்கள் வெள்ளம்: நிலைமை மேலும் மோசமாவதற்குள் லிபியாவைவிட்டு வெளியேறிவிட வேண்டும் என்று ஆயிரக்கணக்கான வெளிநாட்டவர்கள் ஒரே சமயத்தில் புறப்பட்டுவிட்டனர். இதனால் விமான நிலையங்களில் விமானங்கள் வருவதும் புறப்படுவதுமாகவே இருக்கின்றன. ஏராளமான நாடுகள் தங்கள் நாட்டவரை அழைத்து வர விமானங்களையும் கப்பல்களையும் ஒரே சமயத்தில் பயன்படுத்த ஆரம்பித்துள்ளன.ரஷியா, பிரான்ஸ், பிரிட்டன் ஆகியவை தங்கள் நாட்டவர்களை வெளியேற்றத் தொடங்கிவிட்டன. இந்தியாவும் சீனாவும் பெரிய அளவில் ஏற்பாடுகளைச் செய்து வருகின்றன. ஐரோப்பிய யூனியன், தென் கொரியா, அமெரிக்கா ஆகியவையும் இதைத் தொடங்கிவிட்டன.1,000 பேர் சாவு: கடந்த 10 நாள்களாக நடைபெற்றுவரும் கிளர்ச்சியில் 300 பேர் இறந்திருப்பதாக லிபிய உள்துறை அமைச்சகம் தெரிவிக்கிறது. ஆனால் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுவிட்டனர் என்று இத்தாலி நாட்டு வெளியுறவு அமைச்சர் பிராங்கோ பிராட்டினி கூறுகிறார்.பெங்காசியிலிருந்து பரவியது: கடாஃபியை எதிர்ப்பவர்களின் கிளர்ச்சி பெங்காசி நகரில்தான் முதலில் தீவிரமாகத் தொடங்கியது. இப்போது அது அதைவிட தீவிரமாக பிற ஊர்களுக்கும் பரவி வருகிறது. தொலைபேசி, கைபேசி, இணையதள தொடர்புகள் அற்றுப்போயிருந்தாலும் அரசை எதிர்ப்பவர்கள் தங்களுக்குள் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டு ஊர் ஊராகச் சென்று மக்களை அரசுக்கு எதிராகப் போரிடுமாறு அறைகூவல் விடுக்கின்றனர். பெங்காசி, டொப்ருக் நகரங்களில் அரசு எதிர்ப்பாளர்கள் கடாஃபிக்கு கடைசி காலம் வந்துவிட்டது என்று கூறி பட்டாசு வெடித்து தேசியக் கொடிகளைக் கையில் வைத்துக்கொண்டு உற்சாகக் கூத்தாடுகின்றனர். பாட்டுப்பாடி நடனம் ஆடுகின்றனர்.ஒபாமா தீவிர ஆலோசனை: கடாஃபி தானாகப் பதவி விலகட்டும் என்று காத்திராமல் ஆயிரக்கணக்கான உயிர்ப் பலிகளைத் தடுத்து நிறுத்துவது சர்வதேசக் கடமை என்று கருதுகிறார் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா. இது தொடர்பாக முதலில் அமெரிக்க அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்திவருகிறார். பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, ஐரோப்பிய யூனியன் போன்ற தோழமை நாடுகளின் தலைவர்களுடைய கருத்துகளையும் அவர் கேட்டு வருகிறார்.கடாஃபியின் அடக்குமுறை ஆட்சியை வன்மையாகக் கண்டித்துள்ள அவர், சுமுகமாக ஆட்சி மாற்றம் நடைபெற உரிய நடவடிக்கைகளை எடுக்கத் தவறினால் விளைவுகள் கடுமையாக இருக்கும் என்றும் எச்சரித்திருக்கிறார்.அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் வரும் திங்கள்கிழமை ஜெனீவா நகருக்குச் செல்கிறார். அங்கு மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்க பல்வேறு வெளிநாடுகளின் அமைச்சர்கள் வருகின்றனர். அங்கு லிபிய நிலைமை குறித்துத்தான் முக்கியமாக விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.கடாஃபி மகள் பதவி பறிப்பு: ஐக்கிய நாடுகள் சபையின் வளர்ச்சி திட்டப் பிரிவின் நல்லெண்ணத் தூதராக கடாஃபியின் மகள் ஆயிஷா அல் கடாஃபி நியமிக்கப்பட்டிருந்தார். சமீபத்திய நடவடிக்கைகளுக்குப் பிறகு அவரை அப்பதவியிலிருந்து நீக்கிவிட்டது ஐ.நா. மன்றம்.

வியாழன், 24 பிப்ரவரி, 2011

அமெரிக்கன் கல்லூரி நிர்வாக குளறுபடிகளினால் மாணவர்கள் தவிப்பு !

கடந்த ஆண்டு  மதுரை அமெரிக்கன் மாணவர்களின் கடும் போராட்டங்களினால் அக்கல்லூரியில் தான்தோன்றி தனமாக கோலோச்சி கொண்டிருந்த பிஷப்பின் அதிகாரம் அடக்கப்பட்டது. உயர் நீதி மன்ற தீர்ப்பின்படி கல்லூரியில் இயல்பான நடைமுறை திரும்பியது. தற்போது திரும்பவும்  பிஷப்பிற்கும்  , முதல்வருக்குமான பணிப்போரினால்  கல்லூரியின் இயல்பான நடைமுறை  பாதிக்கப்பட்டு மாணவர்களின் கல்வி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில், அரசு உடனடியாக தலையிட்டு கல்லூரி நிர்வாகத்தை தனது பொறுப்பில் எடுத்து மாணவர்களின் தடையில்லாத கல்விக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும்.

சுமங்கலி திட்டம் என்னும் கொத்தடிமை கொடுமை

ஈரோடு, மதுரை ,விருதுநகர், தாராபுரம், திருப்பூர்,கரூர் போன்ற பகுதியில் உள்ள தொழிற்சாலை முதலாளிகள் கொள்ளை லாபம் குவிப்பதற்கு முக்கிய காரணமாக இருப்பது சுமங்கலி திட்டத்தின் கீழ் வேலை செய்யும் நமது இளம் தலைமுறை பெண்கள் தான். 12 முதல் திருமணம் ஆகும் வரை இருக்கும் பெண்களை  இந்த திட்டத்திற்கு தரகர்கள் மூலம் கிராமப்புரங்களில்  இருந்து தெரிவு செய்து அவர்களை கொத்தடிமைகளாக தொழிற்சாலைகளிலே தங்க வைத்து சுரண்டும் கொடுமை இங்கெல்லாம் நடந்து கொண்டிருக்கிறது. மிகக்குறைந்த தொகைக்கு 4 வருடகாலம் வரையிலும் ஒப்பந்தம் போடும் முதலாளிகள், அந்த ஒப்பந்த காலத்திற்கு முன்பே அவர்களை எதாவது ஒரு காரணம் சொல்லி வெளியேற்றும் சதியை திட்டமிட்டு அரங்கேற்றுகின்றன.  அதை வெளிக்கொண்டுவந்து மக்கள் முன் அம்பலப்படுத்தி அரசை நெருக்கடிக்குள்ளாக்க வேண்டிய பொறுப்புணர்வுள்ள தொழிற் சங்கங்கள் முதலாளிகளிடம் கமிசன் வாங்கிகொண்டு தூங்கி கொண்டுள்ளது.

தொழிலாளர் கட்சி என்று சொல்லி கொண்டுள்ள CPI , CPI (M ) போன்றவை ஜெயலலிதாவுடன் தேர்தல் பேரம் பேசிக்கொண்டுள்ளன. படிக்க வேண்டிய இளம் பிஞ்சுகள் இவ்வாறு சொல்லென  துன்பங்களை தாங்கி கொண்டு வேலை செய்வது நமது அறிவி ஜீவிகளின் காதுகளுக்கு எட்டவே எட்டாது .  சுமங்கலி திட்டத்தின் கொடுமைகளை அம்பலப்படுத்துவதும் , அதில் மாட்டிக்கொண்டுள்ள தொழிலாளிகளை மீட்டெடுப்பதும்  ,உரிய இழப்பீடுகளை அவர்களுக்கு வாங்கி கொடுப்பதும் நமது கடமையாகும்.

வீட்டு வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு நியாயமான பணிப்பாதுகாப்பு வேண்டும்

பெருநகரங்களில் தங்கி வீட்டு வேலை செய்யும் பெண்கள் பெரும்பாலனவர்கள் திருமணமாகாத 12 வயது முதல் 25 வயது வரை உள்ளவர்களே. அவர்களுக்கு வேலை நேரம் என்பது காலை 4 மணி முதல் இரவு 12 மணிவரை என எந்த ஈவு இரக்கமும் இன்றி சுரண்டப்படுகின்றனர். அதற்கு அவர்களுக்கு சம்பளமாக ரூ.2 ,000 /-ற்கு  குறைவாகவே வழங்கப்படுகிறது. அவர்களுக்கு சரியான உணவு தரப்படுவதில்லை மீதம் இருக்கும் உணவோ அல்லது பழையதோ தான் அவர்களுக்கு உணவாக தரப்படுகிறது. அவர்கள் வரைமுறை இல்லாமல் மாட்டை விட அதிகமாக வேலை வாங்குகின்றனர். திருட்டு பட்டம் எளிதில் அவர்கள் மேல் சுமத்தப்படுகிறது,அதுமட்டுமில்லாமல் அவர்கள் பெரும்பாலனவர்கள் இளம் பெண்கள் என்பதால் அவர்கள் உரிமையாளர்களால் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்படுவதும், அதை எதிர்ப்பவர்களை திருட்டு குற்றம் சுமத்தி அடித்து வெளியேற்றுவதும் நடைபெறுகிறது .இது போல் பணியாற்றும் பெண்கள் அனைவருமே கல்வியறிவு இல்லாத  குக்கிராமங்களை சேர்ந்தவர்கள் , அவர்களுக்கு சட்டப்படி பணிப்பாதுகாப்பு தரவேண்டியது அரசின் கடமை ஆகும் , அனால் அரசு ஏழைகளின் குரலுக்கா மதிப்பு கொடுக்கும். இது போல பாதிக்கப்படும் அபலை பெண்களின் பணிப்பாதுகாப்புக்கும்   , உயிர் பாதுகாப்புக்கும் உத்தரவாதம் கொடுக்க நாம் ஓன்று பட்டு குரல் எழுப்ப வேண்டும். அந்த உழைக்கும் மகளிரின் உரிமைக்கு கரம் கொடுப்போம். அவர்களின் மீது காட்டுமிராண்டி தனமாக கட்டவிழ்த்து விடப்படும் கொடுமைகளை இரும்பு கரம் கொண்டு எதிர்த்து போராடுவோம்.

புதன், 23 பிப்ரவரி, 2011

தமிழக மீனவர்கள் சுடப்படுவதற்கு காரணம் டி.ஆர்.பாலு போன்ற விசை படகு பெருமுதலாளிகளே

தமிழக மீனவர்களை ஒவ்வொரு  நாளும் இலக்கு வைத்து மீன்பிடிக்க சொல்லி விசை படகு முதலாளிகள் கட்டாயப்படுத்துவதால்  தான் இந்திய கடல் எல்லையை தாண்டி சென்று மீன் பிடிக்க வேண்டி உள்ளது, இலங்கை கடற்படையின் கடும் தாக்குதலுக்கு உள்ளாகி அப்பாவி மீனவர்கள் மரணமடைய நேர்கிறது , என்று தமிழக  மீனவர்கள் தெரிவித்து உள்ளனர். கடல் எல்லையை வகுப்பதில் மீனவர்களுக்கு எந்த விதமான உதவியையும் இந்திய கடற்படை செய்வதில்லை. மீனவர்களின்  உயிரை துச்சமாக மதிக்கும் இலங்கை கடற்படை காக்கை, குருவிகளை போல் சுட்டு தள்ளுகிறது, இந்திய அரசும் , தமிழக அரசும் வேடிக்கை பார்கின்றன. இந்த போக்குகளை கடுமையாக கண்டிப்போம். தமிழக மீனவர்களுக்கு ஆதரவாக அணி திரள்வோம்

தமிழகத்தை சேர்ந்த முருகையா லிபிய படைகளால் கொல்லப்பட்டார் - மற்ற தமிழர்களின் நிலையும் அபாயகரமாகவே உள்ளது

திருநெல்வேலி மாவட்டம் தலைவன்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த முருகையா  லிபிய நாட்டில் கடாபியின் ஏவுதலால் ராணுவம்  நடத்திய  காட்டுமிராண்டி தனமான  தாக்குதலில் உயிர் இழந்து உள்ளார்.முருகையா உள்ளிட்ட 26 இந்தியத் தொழிலாளர்களை, தென் கொரியாவைச் சேர்ந்த ஹூண்டாய் நிறுவனம், லிபிய நாட்டில் மின்கம்பங்கள் அமைக்கும் பணிக்காக அமர்த்தி உள்ளது.அவர்கள் ஏற்கனவே அங்கு அபாயகரமான் சூழ்நிலையில் பனி செய்து வருகின்றனர். தற்போது கடாபியின் கொடுகோல் ஆட்சியை எதிர்த்து மக்கள் போராடி வருகின்றனர், கடாபியும் கொடூரமான தாக்குதலை கட்டவிழ்த்து விட்டுள்ளான் .  பிப்ரவரி 22 ஆம் நாள் லிபிய அரசுப் படைகள் தொழிலாளர்கள் தங்கிய இடத்தில் இருந்து உடனடியாக வெளியேறுமாறு கட்டாயப்படுத்தி உள்ளனர். தொழிலாளர்கள் வெளியேற முயன்றபோது, திடீரென ராணுவம் துப்பாக்கியால் சுட்டதில் முருகையா உயிர் இழந்தார், அசோக்குமார் என்பவர் காயம் அடைந்து உள்ளார். 

இந்தத் தகவலை, லிபியாவில் இருந்து தொழிலாளர்கள் இந்தியாவில் உள்ள தங்கள் உறவினர்களிடம் தெரிவித்து உள்ளனர்.ஆனால் லிபிய அரசு இந்த உண்மையை மறைத்து முருகையா விபத்தில் இறந்தார் என்று கூறி உள்ளது. இந்திய வெளியுறவுத்துறையும் அதை ஏற்றுக்கொண்டு, முருகையா விபத்தில் இறந்ததாகவே கடாபியின் வாசகத்திற்கு ஒத்து ஊதுகிறது.முருகையாவின் உடல் இந்தியாவிற்கு கொண்டு வர மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மற்ற தமிழர்களும் பத்திரமாக மீட்க்கபடவேண்டும்.

மக்கள் போராட்டத்திற்கு ஆதரவு - லிபிய உள்துறை அமைச்சர் பதவி விலகினார்

மக்கள் போராட்டங்களுக்கு  ஆதரவு தெரிவித்து லிபிய உள்துறை அமைச்சர் அப்துல் ஃபத்தா யூனிஸ் அல் அபிதி பதவிவிலகினார்.லிபிய தலைவர் முவாம்மர் கடாபி பதவிவிலக வலியுறுத்தி பொதுமக்கள் போராடி  வருகின்றனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதல்களில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.லிபியாவின் பெங்காஸி நகரில் ராணுவத்தால் பொதுமக்கள்  300-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக கிடைத்த தகவலையடுத்து உள்துறை அமைச்சர் பதவி விலகினார்.பெங்காஸியில் பொதுமக்கள் மீது விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக கடாபி என்னிடம் கூறினார். அவ்வாறு நடத்தினால் ஆயிரக்கணக்கானோர் உயிரிழப்பர் என அவரிடம் கூறியிருந்தேன் என அபிதி தெரிவித்தார்.அமைச்சர் பதவியில் இருந்து விலகிய அபிதி, மக்களின் புரட்சிக்கு ஆதரவாக செயல்பட இருப்பதாக தெரிவித்தார்.கடாபி பிடிவாதமானவர். அவர் பதவியில் இருந்து விலகமாட்டார். ஒன்று அவர் தற்கொலை செய்துகொள்ள வேண்டும் அல்லது கொல்லப்பட வேண்டும் என அபிதி கூறினார். மக்களின் எழுச்சியில் பங்கேற்குமாறு லிபிய பாதுகாப்புப் படைகளுக்கும் அபிதி அழைப்பு விடுத்துள்ளார். கடும் அடக்குமுறையை  கடாபி ஏவி விட்டாலும் போராட்டத்திற்கு மக்கள் ஆதரவு நாளுக்கு நாள் பெருகி வருகிறது.

செவ்வாய், 22 பிப்ரவரி, 2011

இப்ராஹீம் ஹளிபுல்லா - ஜம்மு காஷ்மீர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகிறார்


சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள சிறந்த நீதிபதிகளில் இப்ராஹீம் ஹலிபுல்லா முதன்மையானவர். இரண்டாவது தலைமுறை நீதிபதியான இவர் தனது சொந்த திறமை மூலமே நீதிபதியானார் என்றால் அது மிகை அல்ல. பல சிறப்பான வழக்குகளில் மிகவும் நேர்மையாகவும், அரசுக்கு எதிராக தையிரியமாகவும் தீர்ப்பு சொன்னவர். 19 ,பிப்ரவரி 2009ல் வழக்கறிஞர்களும்  , நீதிபதிகளும் , நீதிமன்றங்களும் தாக்கப்பட்ட வழக்கில் தாக்குதலுக்கு காரணமான காவல் துறை  உயரதிகாரிகளை பணி நீக்க பரிந்துரை செய்தவர். இவ்வாறு பல சிறப்புகளை பெற்ற இப்ராஹீம் ஹளிபுல்லா ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் தலைமை நீதிபதியாக பதவி ஏற்க உள்ளார். ஜம்முகாஷ்மிரில் ராணுவத்தின் ஆட்சி நடந்து வருகிறது. ராணுவம் அங்குள்ள மக்களை வாட்டி வதைக்கிறது. இது போன்ற நேர்மையான நீதிபதி அங்கு தலைமை நீதிபதியாக இருந்தாலாவது அந்த மக்களின் துயரங்களை நீதிமன்றங்களில் முறையிட அம்மக்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புவோம்.

பக்ரைனில் பொது வேலை நிறுத்தம் வெற்றி

ஒரு வார காலமாக மன்னராட்சிக்கு எதிராக கொந்தளிப்பில் இருந்து வரும் வளைகுடா நாடான பஹ்ரைனில் ஞாயிற்றுக்கிழமை பொது வேலைநிறுத்தம் நடைபெற்றது. இதற்கு நாடு முழுதும் நல்ல வரவேற்பு கிடைத்தது.  ஆப்பிரிக்க கண்டத்தின் வடபகுதியில் உள்ள துனீசியா, எகிப்து நாடுகளைத் தொடர்ந்து ஆட்சிமாற்றம் எனும் அலை அரேபிய வளைகுடாவின் கரையைத் தொட்டது. இதில் பாதிக்கப்பட்ட முதல் நாடு பஹ்ரைன். மன்னராட்சி நடந்து வரும் இங்கு கடந்த ஒரு வார காலமாக ஆளும் அரசை எதிர்த்து  நாடுதழுவிய மக்கள்  போராட்டம் நடந்துவருகிறது. இந்தப் போராட்டங்களில் இதுவரை 7 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.  ஞாயிற்றுக்கிழமை இங்கு முழு கதவடைப்பு நடத்த ஆட்சி எதிர்ப்பாளர்களும், தொழிலாளர் அமைப்புகளும் அழைப்பு விடுத்திருந்தன. இதற்கு அந்நாட்டில் அதிக அளவில் மக்கள் வரவேற்புள்ளது என்று காட்டும்விதமாக கிட்டத்தட்ட எல்லா பணிகளும் முடங்கியது.   பஹ்ரைனில் ஆட்சிபுரிந்துவரும் ராஜகுடும்பத்தினர் சொகுசாக வாழவும் மக்கள் கொடும் வறுமையில் வாடவுமான ஏற்றத்தாழ்வுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். மன்னராட்சி ஒழிய வேண்டும் மக்களாட்சி மலர வேண்டும் என்பது அம்மக்களின் கோரிக்கையாகும் . ஆனால் எந்த  பேச்சுவார்த்தைக்கும்  இன்னும் ராஜகுடும்பம் தயாராகவில்லை.  சர்வதேச அரசியல் ரீதியாக இந்தப் பிரதேசம் அமெரிக்காவுக்கு மிக முக்கியமானது. அண்டை நாடான ஈரான் முக்கியத்துவம் பெற்றுவருகிறது. அதனை சரிகட்ட இந்தப் பகுதியில் கப்பற்படை தளம் அமைத்துள்ளது அமெரிக்கா. அமெரிக்க கப்பற்படையின் ஐந்தாம் பிரிவின் தலைமையிடம் பஹ்ரைனில் அமைந்துள்ளது.  அந்த வகையில் முக்கிய பிராந்தியமான பக்ரைனில் பொது வேலை நிறுத்தம் வெற்றி பெற்றதை அடுத்து மக்கள் உற்சாகமாக போராட்டதிற்கு தயாராகி வருகின்றனர். அதை உலகில் உள்ள உழைக்கும் வர்க்கம் அனைத்தும் வரவேற்க தயாராகி வருகிறது.

லிபியாவில் ரத்த ஆறு - புரட்சியாளர்கள் இரும்பு கரம் கொண்டு ஒடுக்கப்படுகின்றனர்

எகிப்தில் மக்கள் புரட்சி வெடித்து கிளம்பியதை அடுத்து அதன் பக்கத்து நாடுகள் அனைத்தும் ஆட்டம் கண்டுவருகின்றன. லிபியாவின் சர்வாதிகாரி கடாபியின் கொடுகோன்மை ஆட்சியால் வேருப்படைந்திருந்த   மக்கள் கொதித்தெழுந்தனர்.  நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள அல்-பைதா, பெங்ஹசி ஆகிய நகரங்களை மக்கள் கைப்பற்றிவிட்டனர். இந்தப் போராட்டம் திங்கள்கிழமையன்று தலைநகர் திரிபோலிக்கும் பரவியது.அரசுக்குச் சொந்தமான அல்-ஜமாஹிரியா தொலைக்காட்சி, அல்-ஷபாபியா வானொலி நிறுவனக் கட்டடங்களை புரட்சியாளர்கள் அடித்து நொறுக்கினார். திரிபோலி தவிர, பைதா, டெர்னா, தோப்ரூக், மிஸ்ரதா போன்ற நகரங்களிலும் போராட்டம் தீவிரமடைந்து வருகின்றன.கடாபி தப்பியோடி விட்டதாக செய்தி வருகிறது ,ஆனாலும் அவரது மகன் சைஃப் அல்-இஸ்லாம் கடாஃபி , போராடும் மக்கள் மீது ராணுவத்தையும் , காவல் துறையும் ஏவிவிட்டு கடுமையாக மக்கள் போராட்டங்களை நசுக்க கடும் முயற்சி செய்கிறான். ஆனாலும் மக்கள் எழுச்சி அடக்கமுடியாத பேரலையாக எழுந்து வந்து கொண்டே இருக்கிறது. அது கடாபியை மட்டுமல்ல மன்மோகன் சிங்கையும் அது தூக்கி எறியும் என்பதற்கான அறிகுறிகள் தெரிகின்றன.

தமிழ் திரைவானில் விடாது கூவிய குயில் விடைபெற்றது


தமிழ் திரையுலகில்   1980 களில் நம் காதுகளில் நீங்காமல் ரீங்காரமிட்ட கனீர் குரலுக்கு  சொந்தமானவர் பாடகர்.மலேசிய வாசு தேவன் ஆவர். கொஞ்சமும் பிசிறில்லாமல் பாடக்கூடிய மூவரில் இவரும் ஒருவர் மற்ற இருவர்கள் எஸ்.பி.பாலசுப்ரமணியம், சௌந்தர்ராஜன் ஆவார்கள். கொஞ்ச காலமாகவே  பக்கவாதத்தால் பாதிக்கபட்டிருந்த    இவர் திடிரென மரணம் அடைந்தது நம் அனைவருக்கும் பெரும் இழப்பே ஆகும்.தமிழ் உள்ள வரை அவர் பாடிய நல்ல பாடல்கள் நம் காதுகளில் ஒலித்து கொண்டே இருக்கும்.

சனி, 19 பிப்ரவரி, 2011

பஸ் டே என்ற பெயரில் மாணவர்கள் அரங்கேற்றும் பாசிச கலாச்சாரம்

இன்று சென்னை கலை கல்லூரி மாணவர்கள் பஸ் டே என்று ஒரு பேருந்தை வாடகைக்கு அமர்த்தியோ அல்லது 
பஸ்ஸை வழிமறித்து  அதில் உள்ள பயணிகளை  இறக்கி விட்டு விட்டு அந்த பேருந்தை ஊர்வலமாக  அழைத்து  செல்கின்றனர்  அப்போது ஏற்கனவே கடும் போக்குவரத்து நேர்சலில் சிக்கி தவிக்கும்     சென்னை  மக்கள் இந்த வேண்டாத  செயலால் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். ஒரு முன்னேறிய சென்னை போன்ற பெரு நகரத்தில் இவ்வாறு பொது மக்கள் அவதிக்குலாக்கப்படுவது கண்டிக்கத்தக்கதாகும்.  
மாணவர்களுக்கு பணஉதவி போன்றவை ஆளும், எதிர் கட்சிகள் தரப்பில் தரப்படுகிறது. ஆளும் அரசும் இதை கண்டும் காணாமலும்  கண்ணை  மூடிக்கொண்டுள்ளது. அப்போது தெருவில் போகும் பெண்களை  கேலி செய்வது அந்த பெண்களை மானபங்கபடுத்தும் செயலையும் இந்த மாணவர்கள் அரகேற்றுகின்றனர். இது மாணவர்கள் மீது மக்களுக்கு வெறுப்பையே ஏற்படுத்தும். மாணவர்கள் பகத்சிங் போல இருக்க வேண்டுமே ஒழிய கருணாநிதி போல அல்ல.

முகப்பு

புதிய பதிவுகள்