திங்கள், 17 அக்டோபர், 2011

'வால் ஸ்ட்ரீட் ஐ கைப்பற்றுவோம்' - போராட்டம் பல நாடுகளுக்கு பரவுகிறது , ஆட்டம் காணுகின்றன முதலாளித்தவ அரசுகள்


லண்டன் , ரோம் ,ஜெர்மனி, ஸ்பெயின்,போர்ச்சுகல் உட்பட 82 நாடுகளிலுள்ள 1500  நகரங்களில் போராட்டம் வெடித்தது

எந்த முதலாளித்துவம் உலக அளவில் வலுவான சக்தி என்று டாம்பிகத்தொடு வளம் வந்ததோ, அதே முதலாளித்துவம் தான் வறுமையையும், வேலை இல்ல திண்டாட்டத்தையும், உண்டாக்கி உழைக்கும் மக்களை இன்று தெருவில் நிருத்தியிருக்கிறது. எந்த முதலாளித்தும் தொழிலாளர்களை நிருவனப்படுத்தியதோ, எந்த முதலாளித்துவம் தொழிலாளர்களை சுரண்டியதோ , அந்நிய நாடுகளை சொந்த நலன்களுக்காக ஆக்கிரமித்ததோ , குறைவான கூலி கொடுத்து மக்களை அரை பட்டினியோடு வாழ நிர்பந்திததோ,  மக்களை அநியாயமாக கொன்று  குவித்ததோ,இயற்கை வளங்களை அதீதமாக சுரண்டி கொளுத்ததோ , சமூகத்தில் நிலவும் அத்தனை சீர்கேடுகளுக்கும் (கலாச்சார சீர்கேடுகள் உட்பட )  காரணமாக உள்ளதோ அந்த முதலாளித்துவத்தை எதிர்த்து உலகம் முழுவதும் போராட்டங்கள் பெருகி வருகின்றன.

அமெரிக்காவில் , 'வால் ஸ்ட்ரீட் ஐ கைப்பற்றுவோம்' என்ற கோசத்தோடு ஆளும் முதலாளித்துவ அரசுக்கு எதிராக போராட்டம் நடந்து வருகிறது. இந்த போராட்டம் அமெரிக்காவில் உள்ள அனைத்து மாகாணங்களிலும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது . இந்த போராட்டத்திற்கு ஆதரவாக உலக அளவில் அனைத்து நாடுகளிலும் அக்டோபர் 15 அன்று போராட்டம் நடத்த வேண்டும் என்று 'வால்  ஸ்ட்ரீட் ஐ கைப்பற்றுவோம்' போராட்ட குழு அழைப்பு விடுத்திருந்தது. அதன்படி 82 நாடுகளில் உள்ள சுமார் 1500 நகரங்களில் மக்கள் போராட்டத்தை நடத்தினார்கள் .முதலாளித்துவத நிறுவனங்களுக்கு எதிராகவும், முதலாளித்துவ அரசுகளுக்கு எதிராகவும் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோசம் எழுப்பினார்கள்.தாங்கள் சுரண்டப்படுவதையும், முதலாளித்துவத்தின் கோர முகத்தையும் மக்கள் இனம் கண்டு கொண்டு விட்டனர் .உலகம் முழுவதும் வளர்ந்து வரும் உழைக்கும் மக்கள் போராட்டம் கண்டிப்பாக முதலாளித்தவ அரசுகளுக்கு மரண சாசனம் எழுதும் என்பது நிச்சயம் . 

7 கருத்துகள்:

 1. தோழர் இன்று ஒரு வலை பதிவில் பார்த்த விஷயம் என்னை நெருடிக் கொண்டே இருக்கிறது, வால் ஸ்ட்ரீட் போராட்டமும் கூடங்குளம் போராட்டமும் சித்தாந்த ரீதியாக எடுத்துச் செல்லப் படாமல் உணர்ச்சி பூர்வமாய் கொண்டு செல்லப் படுவதால் இது முதலாளித்துவத்தின் சுரண்டலுக்கான இடைவேளை என்று கூறியிருந்தார்... என் கேள்வி என்ன என்றால்.. இதை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? அப்படி அவர் சொல்வது சரி என்றால் அதை சித்தாந்த ரீதியாக எடுத்துச் செல்ல என்ன செய்ய வேண்டும் என்பதே

  பதிலளிநீக்கு
 2. தோழர் சூர்யா, உங்கள் ஆதங்கம் புரிந்து கொள்ளக்கூடியதே. //அரசியலற்ற போராட்டங்களின் விளைவு மக்களின் கோபத்திற்கான ஒரு வடிகால் தான்// என்று அக்னிப்பார்வை சொல்வது உண்மைதான். டுனீசியா, எகிப்து, கிரீஸ், லண்டன், நியூயார்க் என மக்களின் எழுச்சி இறுதித்தீர்வை நோக்கியதாக இல்லாமல் இருப்பதால் ஏதோ ஒரு தருணத்தில் முதலாளித்துவம் மக்களின் கோபத்தில் இருந்து தற்காலிகமாகத் தப்பித்துக் கொள்கிறது என்பதே யதார்த்தநிலைமை.

  ஆனால் //ஐ சி யு யுனிட்டில் இருந்து அதை காப்பாற்ற அதனால் சுரண்டபட்ட மக்களே மறைமுகமாக உதவுவது தான் கொடுமையானது// என்றும் //எதோ நடக்க போகிறது என்ற மாயை காட்டுவது இந்த அரசியலற்ற போராட்ட்ங்களின் நோக்கம்// என்றும் //சில நேரங்களில் அரசே இதை ஸ்பான்ஸர் வேற செய்கிறது. இந்திய அரசுக்கு அன்ன அசரே போல்.// என்றும் அக்னிப்பார்வை சொல்வதுபோல், அரசியலற்ற போராட்டங்கள் இவை என்பதற்காக - அதற்குத் தலைமை தாங்குபவர்களிடம் ஆயிரம் கோளாறுகள் இருக்கின்றன என்பதற்காக, அதில் ஈடுபடும் மக்களை குறை சொல்வது ஆரோக்கியமான-முற்போக்கான சிந்தனை அல்ல. இந்த முதலாளித்துவச் சுரண்டல் அமைப்பினால் ஏதோஒரு வகையில் பாதிக்கப்பட்டிருக்கும் இந்த மக்களின் கோபம் நியாயமானது; இதற்குமுன் எதற்குமே போராட வராதவர்களாக இருந்தாலும் இப்போது இதற்காக அவர்கள் வீதியில் இறங்கிப் போராடுவது உண்மையானது. அதற்கு உள்நோக்கம் கற்பிப்பது நேர்மையான‌ செயல் அல்ல‌.

  தொடர்ச்சி.....

  பதிலளிநீக்கு
 3. தொடர்ச்சி.....

  கம்யூனிஸ்ட் கட்சிகள் என்று நூற்றுக்கணக்கான கட்சிகள் இருந்தும் அணிதிரட்ட ஆளில்லாத அநாதைகளாய் மக்கள் தாங்களே அணிதிரண்டு போராடவேண்டிய நிலையில் இருப்பதை எண்ணி கம்யூனிஸ்டுகள் என்று சொல்லிக் கொள்பவர்கள் வெட்கப்படவேண்டும். நாம் எங்கு இல்லையோ அங்கே நம் எதிரி இருப்பான். அதனால்தான் கம்யூனிஸ்டுகள் செய்ய வேண்டியதை என்.ஜி.ஓக்கள் செய்து கொண்டுள்ளனர்.

  தவறான புரிதலில் - தவறான தலைமையின்கீழ் ஒரு சரியான பிரச்னைக்காக மக்கள் வீதியில் இறங்கிப் போராடிக் கொண்டிருந்தால் கம்யூனிஸ்டு என்று சொல்லிக் கொள்பவர்கள் என்ன செய்ய வேண்டும்? அப்போராட்டத்தின் உள்ளடக்கம் முறையாகக் கொண்டுசென்றால் மக்களின் ஒற்றுமையை பிளவுபடுத்தாமல் முதலாளித்துவச் சுரண்டல் அமைப்பிற்கு எதிரானதாகச் செல்லக்கூடியது என்பதை உணர்ந்து, அப்போராட்டத்தை ஆதரித்து தனது முழுசக்தியையும் அதில் இறக்கிவிட்டு, அரசியலற்ற அப்போராட்டத்தை அரசியல்மயப்படுத்தி , போராட்டத்தை பாதியில் காட்டிக் கொடுத்துவிட்டுப் போகத்துடிக்கும் பலவீனமான தலைமையை அம்பலப்படுத்தி அப்போராட்டத்தின் தலைமையைக் கைப்பற்றி அப்போராட்டத்தை இறுதிவரை சமரசமின்றி நடத்திச் செல்லவேண்டும்; இதனூடாக புரட்சிகரக் கட்சியைப் பலப்படுத்த வேண்டும். ஆனால் இதைச் செய்யவேண்டுமானால் அக்கம்யூனிஸ்ட் கட்சி படித்த இளைஞர்களையும் கவரக்கூடிய முன்னேறிய சித்தாந்தத்தை உடைய‌ கட்சியாக இருக்கவேண்டும்.

  தொடர்ச்சி.....

  பதிலளிநீக்கு
 4. தொடர்ச்சி.....

  ஆனால் இங்கு கம்யூனிஸ்ட் கட்சி என்று சொல்லிக் கொள்பவர்கள் செய்வது என்ன? போராட்டம் என்றால் இப்படி இருக்க வேண்டும் என்று இவர்களாக ஒரு வரையறை வைத்துக் கொள்கிறார்கள்; இயந்திரகதியில் இப்போராட்டம் "புரட்சிகர" வரையறைக்குள் வரவில்லை; அதில் என்.ஜி.ஓ. தலைமை இருக்கிறது; நேற்று இல்லாத சமூக அக்கறை இன்று எப்படி திடீரென்று அவர்களுக்கு வந்தது; அதில் அந்தக் கோளாறு இருக்கிறது; இந்த பலவீனம் இருக்கிறது என அப்போராட்டம் பற்றி விமர்சனக் கட்டுரைகளும் ஆய்வுக் கட்டுரைகளும் எழுதிக் கொண்டுள்ளனர்.

  போராடும் மக்களோடு சேர்ந்து போராட வேண்டிய தார்மீகக் கடமையை மறந்துவிட்டு, திரைப்படத்தைப் பார்த்து விமர்சனம் செய்யும் திரை விமர்சனக் குழுவைப் போல், உலகில் தங்களுடைய முன்முயற்சி இன்றி தானாகவே நடந்து மக்களின் கவனத்தை ஈர்த்து அதன்மூலம் தங்களது செயலின்மையை நடைமுறைரீதியில் விமர்சிக்கும் மக்கள் போராட்டங்களை அலசி ஆராய்ந்து அதன் பலம் - பலவீனங்களை விமர்சனம் செய்யும் "போராட்ட விமர்சனக் குழு"வாக கம்யூனிஸ்டுக் கட்சிகள் தங்களைத் தரம் தாழ்த்திக் கொண்டுவிட்டன.

  தொடர்ச்சி.....

  பதிலளிநீக்கு
 5. தொடர்ச்சி.....

  எனவேதான் முதலாளித்துவச் சுரண்டல் அமைப்பினால் பாதிக்கப்படும் மக்கள் கொதித்தெழுந்து தாங்களாகவே வீதிக்கு வந்து போராடும்போதுகூட அப்போராட்டத்திற்கு சரியான சித்தாந்தத் தலைமையைக் கொடுக்கும் கம்யூனிஸ்டுக் கட்சி ஒன்று இல்லாமல் அப்போராட்டம் ஆளும் வர்க்கத்தின் ஏதோவொரு பிரிவினரால் பயன்படுத்திக் கொள்ளப்பட்டு மக்களின் கோபத்திற்கான தற்காலிக வடிகாலாக அது மாற்றப்படுவது தவிர்க்க முடியாததாக ஆகியுள்ளது.

  டுனீசியா, எகிப்து, கிரீஸ், லண்டன், நியூயார்க் என சமீபத்திய நிகழ்வுகள் அனைத்தும், வாழவே முடியாத அளவிற்கு எத்தனை கடும் நெருக்கடி மக்களுக்கு ஏற்பட்டாலும் - எத்தனை போர்க்குணமான போராட்டங்கள், எழுச்சிகள் நடந்தேறினாலும் அடிப்படையான சமூகமாற்றத்தை நோக்கி அப்போராட்டம் நகரவேண்டுமானால் பாட்டாளி வர்க்கத்தின் முன்னணிப் படையாகிய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்று அவசியம் இருக்க வேண்டும் என்ற முன்நிபந்தனையையே மீண்டும் மீண்டும் உணர்த்துகின்றன-வலியுறுத்துகின்றன.

  தொடர்ச்சி.....

  பதிலளிநீக்கு
 6. தொடர்ச்சி.....

  மேற்குலகைச் சூழ்ந்துள்ள இந்நெருக்கடிகள் இந்தியாவையும் சூழப்போகும் நாள் வெகுதொலைவில் இல்லை. அப்போது அந்நெருக்கடிகளில் இருந்துமீள இந்திய ஆளும் வர்க்கம் எடுக்கும் அனைத்து அடக்குமுறை நடவடிக்கைகளும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நிர்பந்தத்திற்கு அடிபணிந்தே இந்திய அரசு எடுத்துவருகிறது; நம் எதிரி அமெரிக்க ஏகாதிபத்தியமே என்று நம்ம ஊர் கம்யூனிஸ்ட் கட்சிகள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, மக்கள் இவர்களை நம்பிப் பயனில்லை என்பதை உணர்ந்து தாங்களாகவே இந்திய முதலாளிகளுக்கு எதிராகப் போராடக் கிளம்பிவிடுவார்கள். அப்போது அந்தப் போராட்டத்திற்கு சித்தாந்தரீதியில் வழிகாட்ட இன்று "போராட்ட விமர்சனக் குழு"வாகிவிட்ட இந்தக் கம்யூனிஸ்ட் கட்சிகளை நம்பிக் கொண்டிருக்க முடியாது. எனவே அதற்குள்ளாக ஒரு முன்னேறிய தத்துவத்தைக் கையில் வைத்திருக்கும் தகுதியான முன்னணிப் படையாகிய உண்மையான கம்யூனிஸ்ட் கட்சியை இந்திய மண்ணில் கட்டியமைக்க வேண்டும் என்பதே இன்று நம் முன் உள்ள வரலாற்றுக் கடமையாகும்.

  தோழரே, இந்தத் திசைவழியில் நாம் சிந்தித்தால் அவநம்பிக்கையோ கலக்கமோ இன்றி நம்மால் முன்னோக்கிச் செயல்பட முடியும் என்பது எங்களது கருத்து. மாற்றுக் கருத்து இருந்தால் கூறுங்கள் தோழரே நாம் தொடர்ந்து விவாதிப்போம்.

  பதிலளிநீக்கு

முகப்பு

புதிய பதிவுகள்