வெள்ளி, 21 ஜனவரி, 2011

தகவல் பலகை அமைத்து உழைக்கும் வர்க்கக் கருத்துக்களைக் கொண்டு செல்வோம் (CWP)சமுக முன்னேற்றத்தில் கருத்துக்கள் ஆற்றிய பங்கு அளவிடற்கரியது. அனைத்தையுமே அனுபவம் மூலம் அறிந்தே ஒரு மனிதன் தேவைப்படும் விதங்களில் தன்னை மாற்றிக் கொண்டிருந்த போக்கினை கருத்துகள் மாற்றின. அத்தகைய கருத்துக்கள் மூலமே மாபெரும் சமூக மாற்றங்களும் ஏற்பட்டன. சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் போன்ற கருத்துக்களின் உதயமே சமூகத்தின் ஜனநாயக ரீதியிலான மாற்றங்களுக்கு வழிவகுத்தது.


உண்மையான ஜனநாயகத்தை மக்களின் சமூக விஷயங்களின்  பாலான பங்கேற்பின் மூலமே நடைமுறைப்படுத்த முடியும். மக்களின் சமூக விஷயங்களின் பாலான பங்கேர்ப்பும் சரியான கருத்துகளின் அடிப்படையிலானதாக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட கருத்துகள் மக்களிடம் கொண்டு செல்லப்படுவது ஜனநாயகம் சரியாக செயல்படுவற்கு அத்தியாவசியமானதாகும்.

கருத்துகள் நடைமுறையில் பல்வேறு சாதாரணமாக மக்களிடையே கருத்துக்களையும் செய்திகளையும் கொண்டு செல்கின்றன.ஆனால் அவற்றால் கொண்டு செல்லப்படும் கருத்துகள் அனைத்தும் ஒட்டுமொத்த சமூக மேம்பாட்டற்குத் தேவையானவை தானா என்று எண்ணிப் பார்த்தால் அவ்வாறில்லை என்பதையே நமக்கு நமது நடைமுறை அனுபவம் தெளிவாக உணர்த்துகிறது.
கூர்ந்து நோக்கினால் ஊடகங்கள் மூலம் கொண்டு செல்லப்படும் கருத்துகள் பெருபாலானவை மக்களின் வாழ்க்கைப் பிரச்சனைகள் சார்ந்தவையாக இருப்பதில்லை. அதுமட்டுமல்ல அவை மக்கள் அன்றாடம் எதிர் கொள்ளும் பிரச்சனைகளிலிருந்து அவர்களது கவனத்தைத் திசை திருப்பக்கூடியாவையாகவும் உள்ளன . நாம் வாழும் தற்போதைய சமூக அமைப்பில் சாதாரண ஏழை, எளிய மக்கள் எதிர்கொள்ளும் அடிப்படைப் பிரச்சனைகளுக்குத் தீர்வு இல்லை என்பதால் அவை குறித்த ஆழமான சிந்தனைகள் மக்கள் மனதில் தோன்றி விடக்கூடாது என்பதில் அவை உறுதியாக உள்ளன. ஆதனால் மக்களின் கவனத்தை அற்பமான விஷயங்கள் பக்கம் திசை திருப்பும் வேலையை அவை செவ்வனே செய்கின்றன.

இதற்கான காரணம் என்னவென்று பார்த்தால் நாம் வாழும் இன்றைய சமூக அமைப்பில் மக்கள் அனைவரும் சமமான நிலையில் இல்லை. மிகப்பெரும் ஏற்றத்தாழ்வுகள் அதில் நிலவுகின்றன. கடுமையான உழைப்பில் ஈடுபட்டு சமூக செல்வம் அனைத்தையும் உருவாக்கும் உழைப்பாளி மக்கள் உண்ண உணவும் உடுக்க உடையுமின்றி துயர வாழ்க்கை வாழ்ந்து கொண்டுருக்கின்றனர். ஆனால் அவர்களின் உழைப்பினை சுரண்டி வாழும் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் சிறுபான்மையினராக இருக்கும் முதலாளி வர்க்கம் ஆடம்பர வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கிறது .

இந்த நிலை ஏன், இதனை மாற்ற வழியே இல்லையா என்ற எண்ணம் சாதாரண மக்களிடையே ஏற்பட்டு விடக்கூடாது ; அந்த எண்ணம் ஏற்பட்டு விட்டால் அதை மாற்றுவதற்கான கருத்துகளையும், அமைப்புகளையும் மக்கள் தேடத்தொடங்கி விடுவர்; அவற்றின் வழிகாட்டுதலில் ஓன்று திரண்டு சமூகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளை மையமாகக் கொண்ட அதர்மத்தை அகற்ற உழைக்கும் மக்கள் அணிதிரண்டு விடுவர் என்ற அச்சம் ஆளும் முதலாளி வர்க்கத்தை ஆட்டிப் படைக்கிறது. அதனால் தான் முதலாளி வர்க்கத்தினரால் முதலாளி வர்க்க நலன்களுக்காக நடத்தப்படும் பத்திரிக்கைகளும் , காட்சி ஊடகங்களும் மக்களுக்குத் தேவையான கருத்துக்களையும் செய்திகளையும் மூடிமறைத்து , அவர்கள் நிலவும் சுரண்டளைக் கண்டு கொள்ள முடியாமல் இருக்கும் வகையிலான கருத்துகளையும், செய்திகளையும் பரப்புகின்றன.

எங்கும் விரவிக் கிடக்கும் பகாசுரச் சக்தி வாய்ந்த இந்த ஊடக வலிமைக்கு அடிபணிந்து, அவர்கள் முன் வைப்பவை மட்டுமே செய்திகள் அல்லது கருத்துகள் என்ற நிலை மக்களிடம் நிலைபெற்று விட உழைக்கும் வர்க்க சக்திகள் அல்லது கருத்துகள் என்ற நிலைப்பெற்று விட உழைக்கும் வர்க்க சக்திகள் அனுமதிக்கக் கூடாது. உண்மையான கருத்துக்களையும் சமூகமாற்ற சிந்தனைகளையும் எந்த வகையிலாவது உழைக்கும் மக்களிடையே கொண்டு சென்று அவர்கள் எதிர் கொண்டிருக்கும் பிரச்சனைகளுக்கான காரணங்களை  எடுத்துரைத்து , அவற்றிலிருந்தான தீர்வு நிச்சயம் உண்டு  என்பதை வலியுறுத்தி, அந்தத் தீர்வை நோக்கிய பாதையில் முட்டுக்கட்டையாக இருப்பது எது என்பதையும் அம்பலப்படுத்தி சமூக மாற்றத்திற்கு வழிகோல வேண்டியது உழைக்கும் வர்க்க அமைப்புகளின் தலையாயப் பணியாகும்.
மிகப்பெரிதாகத் தோற்றமளிக்கும் முதலாளித்துவ ஊடங்கங்களின் வலிமையோடு ஒப்பிடும் போது, உண்மையை மக்களிடம் தயக்கமின்றி உறுதியுடன் எடுத்துச்செல்லும் உழைக்கும் வர்க்க சாதனைகள் எத்தனை எளிமையானவையாக இருந்தாலும், அவற்றால் கொண்டு செல்லப்படும் கருத்துக்கள் அனுதினமும் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை அடிப்படையாகக் கொண்டவையாக இருப்பதால் மக்கள் மனதில் இன்றில்லாவிட்டால் நாளை படிப்படியாக நிச்சயம் ஈர்க்கவே செய்யும்.

பொந்திடை வைக்கப்பட்ட அக்னி குஞ்சுகள் எவ்வாறு காட்டுத் தீயையே உருவாக்க வல்லனவோ, அந்த வகையில் எழுச்சியினை உருவாக்கும் அக்கினிக்குஞ்சுகளாக உழைக்கும் வர்க்க நலன் பேணும் சமூக மாற்றக் கருத்துக்களை மக்களிடையே கொண்டு செல்வதற்காக நாம் ஒரு செய்திப் பலகையினை தேனி நகரின் பங்களா மேடு பகுதியில் நிறுவ முடிவு செய்துள்ளோம்.நமது இந்த முயற்சிக்குத் கரத்தாலும் , கருத்தாலும் பாடுபடும் இவ்வட்டார உழைக்கும் மக்களின் ஆதரவினை வேண்டுகிறோம்.  
கொடியேற்று விழாவும் தகவல் பலகைத்திறப்பு  விழாவும்

நாள் : 30.01.2011           
இடம் : பங்களாமேடு - தேனி , மாலை 5 மணி
தலைமை : தோழர் ஜே.மாரிச்செல்வம், சி.டபிள்யு.பி.
கொடியேற்றி சிறப்புரை வழங்குவர் : தோழர்.ஆனந்தன், தென்னிந்திய பொதுசெயலாளர், சி.டபிள்யு.பி.
தகவல் பலகைத்திறப்பாளர் : தோழர் .த .சிவகுமார் , ஆசிரியர் , மாற்றுக்கருத்து
நன்றியுரை : தோழர்.சி .ஜெயராமன், சி.டபிள்யு. பி.

தொடர்ப்பிற்கு: தோழர். சி .ஜெயராமன்அலைபேசி : 8124718441


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முகப்பு

புதிய பதிவுகள்