திங்கள், 10 ஜனவரி, 2011

சில மாடுகளும்... சில மனிதர்களும்...

ஜல்லிக்கட்டுக்காக சில மாடுகள் வளர்க்கப் படுகின்றன. உழவுக்காகவும் சில மாடுகள் வளர்க்கப் படுகின்றன. பார வண்டி இழுப்பதற்கும் சில மாடுகள் வளர்க்கப் படுகின்றன. இளமையும் வலிமையும் இருக்கும் வரை அம்மாடுகளுக்கு நல்ல மவுசு, நல்ல விலை. நான், நீ என்று போட்டி போட்டு விலை கேட்பதற்கு ஆட்கள் பலர். ஆனால் அம்மாடுகள் இளமையைக் கடந்து, வலிமையை இழந்து விட்டாலோ அதை விலை கேட்பதற்கு ஆளில்லை. விதிவிலக்காக சில மாடுகளைத் தவிர, மற்றவை அடிமாடுகளாக்கப் படுகின்றன.


இந்த மாடுகளின் நிலைமைதான் இப்போது நம் கிரிக்கெட் ஸ்டார்களுக்கும். பெங்களூருவில் நேற்று நட ந்து முடி ந்த I.P.L. கிரிக்கெட் 4வது சீசனுக்கான ஏலத்தில் இ ந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி விலை போகவில்லை என்ற செய்தி ஏனோ நம் மனதைக் கனமாக்குகிறது. ஜெயசூர்யா, லாரா உட்பட ஒரு காலத்தில் கிரிக்கெட் வானில் நட்சத்திரங்களாகச் ஜொலித்த பலரையும் யாரும் ஏலம் எடுக்கவில்லை. இளம் வீரர்களை ஏலத்தில் எடுக்கவே அதிக போட்டி நிலவியதாகவும் கூறப் படுகிறது. இன்று ஏலச்சந்தைக்கு விடப்படாமல் அவரது உரிமையாளரான மும்பை இண்டியன்ஸ் அணி நிர்வாகத்தால் தக்க வைத்துக் கொள்ளப் பட்டுள்ள சச்சினும் கூட ஒரு நாள் இப்படி விலை போகாமல் போகலாம்.


இ ந்த வீரர்களின் அபாரமான தனித்திறமைகளுக்காக ஒருபக்கம் ரசிகர்கள் கடவுளைப் போல் இவர்களைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். மறுபக்கம் பணம் படைத்த முதலைகள் இவ்வீரர்களை மாடுகளைப் போல் சந்தையில் ஏலம் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். சில வீரர்களை ஏலம் எடுக்காமல் விலை போகாத வீரர்கள் என்று அவமானப் படுத்தவும் செய்கிறார்கள். தான் நல்ல விலைக்குப் போவது பற்றியோ, விலை கேட்பாரின்றி அடிமாடாக்கப் படுவது பற்றியோ மாடுகள் எப்போதும் கவலைப் படுவதில்லை. ஆனால் கிரிக்கெட் வீரர்கள் மனிதர்களாயிற்றே. மானம், அவமானம். வெட்கம், துக்கம் இவை போன்ற உணர்ச்சியுள்ள மனிதர்களாயிற்றே. அவர்களைத் தனித்திறன் பெற்ற "மனிதர்"களாகப் பார்க்கும் நம்மாலேயே அவர்களுக்கு நேரும் இந்த அவமானத்தைச் சகிக்க முடியவில்லையே. அவர்கள் எப்படி இதைச் சகித்துக் கொண்டிருக்கிறார்கள்? வாழ்க்கையில் அனைத்து வசதிகள் இருந்தும் தன்மானத்தை இழந்து தன்னை ஏலப்பொருளாக்க ஏன் இவர்கள் சம்மதிக்கிறார்கள்? பணம்... அதுவும் கோடிகளில். தன் கையில் பணம் இருக்கிறது என்ற திமிரில் எந்த மனிதனுடைய தன் மானத்தையும் விலைக்கு வாங்கத் தயாராக இருக்கும் பணக்காரர்கள். தனது தன்மானத்திற்கு ஒரு நல்ல விலை கிடைக்கும் என்றால் அதையும் விற்கத்தயாராக இருக்கும் வீரர்கள்.

பணம்தான் எல்லாம், பணத்திற்காக - எதையும் செய்யலாம் - எதையும் விற்கலாம் - எதையும் இழக்கலாம் என்று இருக்கும் இந்த சமூகம் மாறாத வரை எந்த வகையான திறமையுள்ள எந்த மனிதரும் அவரது திறமைக்காக விலை போகும் மாடுகளே. மனிதர்களை மாடுகளாகப் பார்க்கும் இந்த சமூகம் சரியாகத்தான் இருக்கிறது என்று சொல்ல முடியவில்லையே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முகப்பு

புதிய பதிவுகள்