வியாழன், 15 மார்ச், 2012

மனிதர்களின் பிறவித் தலைவர்கள் மிகச்சிலருள் ஒருவர் - இராபர்ட் ஓவன்



ஃபிரான்சில் புரட்சிச் சூறாவளி நாடெங்கும் சுழன்றடித்தபோது, இங்கிலாந்தில் அதைவிட அமைதியான, ஆனால் அதன் காரணமாக, பேராற்றலில் எந்த வகையிலும் குறைந்துவிடாத, ஒரு புரட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. நீராவியும், புதிய கருவித் தயாரிப்பு எந்திர சாதனங்களும் பட்டறைத் தொழிலை நவீனத் தொழில்துறையாக மாற்றிக் கொண்டிருந்தன. அதன்மூலம் முதலாளித்துவ சமுதாயத்தின் அடித்தளத்தையே அடியோடு புரட்சிகரமாக்கி வந்தன. பட்டறைத் தொழில் காலத்தில் மந்த கதியில் நடைபோட்டு வந்த வளர்ச்சி, உற்பத்தியில் மிகவும் கொந்தளிப்பான காலகட்டமாக மாறியது. சமுதாயம் பெரு முதலாளிகளாகவும் உடைமையற்ற பாட்டாளிகளாகவும் பிளவுறுவது, தொடர்ந்து அதிகரித்துச் செல்லும் வேகத்தில் நிகழ்ந்தது. இவ்விரு வர்க்கங்களுக்கும் இடையில், முன்பிருந்த நிலையான நடுத்தர வர்க்கத்துக்குப் பதிலாகக் கைவினைத் தொழிலாளர்கள், சிறு கடைக்காரர்கள் அடங்கிய ஒரு நிலையற்ற மக்கள் திரள் இடம்பெற்றது. மக்களில் மிகவும் ஊசலாட்டமான பகுதியினரான இவர்கள் ஒரு பாதுகாப்பற்ற வாழ்க்கை நடத்தினர்.


புதிய உற்பத்தி முறை அதன் ஏறுமுகத்தின் தொடக்க நிலையிலேதான் இன்னமும் இருந்தது. இப்போது அதுதான் இயல்பான, முறையான உற்பத்தி முறையாக இருந்தது. தற்போதைய நிலைமைகளில் சாத்தியமான ஒரேவொரு உற்பத்தி முறையாகவும் இருந்தது. எனினும், இந்த நிலையிலுங்கூட அது மிக மோசமான சமூகக் கேடுகளை உண்டாக்கி வந்தது. வசிக்க வீடில்லாத மக்கள் கூட்டம், பெரிய நகரங்களின் படுமோசமான குடியிருப்புகளில் மந்தைகளாக அடைபட்டுக் கிடந்தனர். மரபு வழியிலான அனைத்து ஒழுக்கநெறிக் கட்டுப்பாடுகளும், குடும்பத் தலைவருக்குக் கீழ்ப்படிதலும், குடும்பப் பிணைப்புகளும் தளர்ந்து போயின. மிகுதியான வேலைப்பளு, முக்கியமாகப் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் அச்சுறுத்தும் அளவுக்கு இருந்தது. தொழிலாளர் வர்க்கத்தினர், நாட்டுப்புறத்திலிருந்து நகரத்துக்கும், விவசாயத்திலிருந்து நவீனத் தொழில்துறைக்கும், நிலையான வாழ்க்கை நிலைமைகளிலிருந்து நாள்தோறும் மாறுகின்ற பாதுகாப்பற்ற வாழ்க்கை நிலைமைகளுக்குமாக, முற்றிலும் புதிய நிலைமைகளுக்குள் திடீரெனத் தூக்கியெறியப்பட்டு, முழுதும் நம்பிக்கை இழந்தோராயினர்.

இந்தச் சூழ்நிலையில் 29 வயதான ஓர் ஆலையதிபர் சீர்திருத்தவாதியாக முன்னணிக்கு வந்தார். ஏறத்தாழ குழந்தையைப் போன்ற எளிய உன்னதப் பண்புகள் கொண்ட ஒரு மனிதர். அதேவேளையில், மனிதர்களின் பிறவித் தலைவர்கள் மிகச்சிலருள் ஒருவர். இராபர்ட் ஓவன் பொருள்முதல்வாதத் தத்துவ அறிஞர்களின் போதனையை ஏற்றுக் கொண்டவர். அதாவது, மனிதனின் பண்பியல்பு, ஒருபுறம் மரபுவழியிலும், மறுபுறம் அத்தனிநபரின் ஆயுள்காலத்தில் அதிலும் முக்கியமாக அவனுடைய வளர்ச்சிக் கட்டத்தில் நிலவுகின்ற சூழ்நிலையாலும் உருவாக்கப்படுகின்றது. அவர்சார்ந்த வர்க்கத்தினரில் மிகப்பலர் தொழில்புரட்சியில் குளறுபடியையும், குழப்பத்தையும், குழம்பிய குட்டையில் மீன்பிடித்து, குறுகிய காலத்தில் பெருஞ்செல்வம் திரட்டுவதற்கான வாய்ப்பையுமே கண்ணுற்றனர். ஓவனோ தன்னுடைய மிகவிருப்பமான கொள்கையை நடைமுறைப்படுத்தி, அதன்மூலம் குளறுபடியிலிருந்து ஒழுங்கை நிலைநாட்ட, இந்தத் தொழில்புரட்சியில் நல்வாய்ப்பு இருப்பதைக் கண்டார். ஏற்கெனவே மான்செஸ்டர் ஆலை ஒன்றில் ஐந்நூறுக்கு மேற்பட்டோரின் மேலாளராக இருந்தபோது, அவருடைய கொள்கையை வெற்றிகரமாகப் பரிசோதித்துப் பார்த்துள்ளார். [அதன்பின்] 1800-லிருந்து 1829 வரையில், ஸ்காட்லாந்தில் நியூ லானார்க் என்னும் நகரில் அமைந்த மாபெரும் பஞ்சாலையின் மேலாண்மைக் கூட்டாளியாக இருந்துகொண்டு, அதே வழிமுறைகளில், ஆனால் மேலும் அதிக சுதந்திரத்துடன் அப்பஞ்சாலையை வழிநடத்தி வெற்றி கண்டார். அவ்வெற்றி ஐரோப்பிய அளவில் அவருக்கு நன்மதிப்பைப் பெற்றுத் தந்தது. தொடக்கத்தில், மிகவும் மாறுபட்ட தன்மை கொண்ட, பெரும்பகுதியும் நம்பிக்கையற்றுப் போன மனிதர்களைக் கொண்ட ஒரு மக்கள் தொகுதியை, படிப்படியாக 2,500 பேராக வளர்ச்சி பெற்ற ஒரு மக்கள் தொகுதியை, ஓவன் ஒரு முன்மாதிரியான குடியிருப்பாக மாற்றிக் காட்டினார். அந்தக் குடியிருப்பு, குடிப்பழக்கம், போலீஸ், நீதிபதிகள், வழக்குகள், ஏழ்மையர் சட்டங்கள், அறக்கட்டளை இவைபற்றி அறிந்ததில்லை. மனிதர்கள் வாழ்வதற்கு உகந்த நிலைமைகளில் மக்களை வைத்திருப்பதன் மூலமும், இன்னும் முக்கியமாக வளர்ந்துவரும் தலைமுறையைக் கவனமாக வளர்த்து ஆளாக்குவதன் மூலமும் ஓவன் இதனைச் சாதித்தார். அவர்தான் குழந்தைப் பள்ளிகளைத் தோற்றுவித்த முன்னோடி. முதன்முதலாக நியூ லானார்க்கில் அவற்றை அறிமுகப்படுத்தினார். இரண்டு வயதில் குழந்தைகள் பள்ளிக்கு வந்தனர். மீண்டும் வீட்டுக்குத் திரும்பிச் செல்ல மனம் வராதபடி, அந்த அளவுக்கு அங்கே அவர்கள் ஆனந்தமாக இருந்தனர். ஓவனின் போட்டியாளர்கள் தங்கள் தொழிலாளர்களிடம் ஒரு நாளைக்கு 13, 14 மணிநேரம் வேலை வாங்கியபோது, நியூ லானார்க்கில் வேலைநாள் பத்தரை மணிநேரம் கொண்டதாகவே இருந்தது. ஒருமுறை பருத்திப் பற்றாக்குறையால் நான்கு மாத காலம் பஞ்சாலையில் வேலை நிறுத்தப்பட்டபோது, ஓவனின் தொழிலாளர்கள் எல்லாக் காலத்துக்கும் முழுச் சம்பளம் பெற்றனர். இவ்வளவும் இருந்தபோதும், ஆலையின் வணிக மதிப்பு இரு மடங்குக்கும் அதிகமாகப் பெருகியது. இறுதிவரை ஆலையின் உடைமையாளர்களுக்கு மிகுந்த இலாபத்தை அளித்து வந்தது.

இத்தனைக்குப் பிறகும் ஓவன் மனநிறைவு அடையவில்லை. தன்னுடைய தொழிலாளர்களுக்கு அவர் பெற்றுத் தந்த வாழ்க்கை, அவர் பார்வையில், மனிதர்களுக்குத் தகுதியான வாழ்விலிருந்து வெகுதொலைவில் இருப்பதாகவே பட்டது. ”இம்மக்கள் என் தயவில் அடிமைகளாகவே இருந்தனர்.” தன்னுடைய தொழிலாளர்களுக்கு ஓவன் வழங்கியிருந்த வாழ்க்கை நிலைமைகள் ஒப்பீட்டளவில் அனுகூலமானவை என்றாலும், அவர்களின் பண்பியல்பும், அறிவுத்திறனும் அனைத்துத் திசைகளிலும் நியாயமான வளர்ச்சிபெற அனுமதிக்கும் நிலைக்கு இன்னமும் எட்டாத தொலைவிலேயே அவை இருந்தன. அவர்களுடைய வினையாற்றல்கள் அனைத்தையும் சுதந்திரமாகச் செயல்படுத்த மிகவும் குறைவான வாய்ப்புகளை வழங்கும் வாழ்க்கை நிலைமைகளே இருந்தன. ”இருந்த போதிலும், இந்த 2,500 பேரைக் கொண்ட மக்கள் தொகுதியின் உழைக்கும் பகுதி, சமுதாயத்துக்கு நாள்தோறும் உற்பத்தி செய்து வருகின்ற உண்மையான செல்வத்தின் அளவுக்கு, அரை நூற்றாண்டுக்கும் குறைவான காலத்துக்கு முன்பு உற்பத்தி செய்திட, 6,00,000 பேரைக் கொண்ட மக்கள் தொகுதியின் உழைக்கும் பகுதி தேவைப்பட்டிருக்கும். [இன்று] 2,500 பேர் நுகர்ந்த செல்வத்துக்கும், [அன்று] 6,00,000 பேர் நுகர்ந்திருக்கக்கூடிய செல்வத்துக்கும் இடையிலுள்ள வேறுபாடு, [அவ்வகையில் மீந்திருக்க வேண்டிய செல்வம்] என்ன ஆயிற்று என என்னை நானே கேட்டுக் கொண்டேன்” [என்று ஓவன் எழுதினார்].

விடை தெளிவானது. ஆலையின் உடைமையாளர்களுக்கு, அவர்கள் போட்ட மூலதனத்துக்கான 5 சதவீதத் தொகையையும், அதோடு சேர்த்து 3,00,000 பவுண்டுகளுக்கு மேற்பட்ட நிகர இலாபத்தையும் வழங்குவதற்காக இச்செல்வம் பயன்படுத்தப்பட்டுவிட்டது. நியூ லானார்க் ஆலைக்குக் கூறப்பட்ட இந்த உண்மை, இங்கிலாந்திலுள்ள அனைத்து ஆலைகளுக்கும் இன்னும் அதிக அளவுக்குப் பொருந்துவதாக இருந்தது.

”எந்திரச் சாதனங்கள், சீரற்ற முறையில் பயன்படுத்தப்பட்ட நிலையிலும், இந்தப் புதிய செல்வத்தைப் படைக்காமல் இருந்திருப்பின், நெப்போலியனுக்கு எதிராகவும், சமுதாயத்தின் பிரபுக்குலக் கோட்பாடுகளை ஆதரித்தும், ஐரோப்பாவில் நடத்தப்பட்ட யுத்ததங்களைத் தொடர்ந்து நடத்த முடிந்திருக்காது. என்றாலும், இந்தப் புதிய சக்தி உழைக்கும் வர்க்கங்களின் படைப்பாகும்.” [குறிப்பு 1.சி., பக்கம் 22]. எனவே, இந்தப் புதிய சக்தியின் பலன்கள் அவர்களுக்கே உரியனவாகும். புதிதாகத் தோற்றுவிக்கப்பட்ட பிரம்மாண்ட உற்பத்தி சக்திகள், இதுநாள்வரை தனிநபர்களைச் செழிப்பாக்கவும், சாதாரண மக்களை அடிமையாக்கவுமே பயன்படுத்தப்பட்டன. ஓவனுக்கோ அவை சமுதாயத்தின் மறுகட்டமைப்புக்கான அடித்தளங்களை நல்கின. அனைவரின் பொதுச் சொத்தாகவும், அனைவரின் பொது நன்மைக்காகச் செயல்படுத்தப்படப் போகிற சக்திகளாகவும் அமைந்தன.

ஓவனுடைய கம்யூனிசம் முற்றிலும் இந்தத் தொழில்முறை அடித்தளத்தை அடிப்படையாகக் கொண்டதாகும். வணிகக் கணக்கீட்டின் விளைவு எனக் கூறலாம். இறுதிவரை, இந்த நடைமுறை சார்ந்த தன்மையை அது தொடர்ந்து மெய்ப்பித்து வந்தது. இவ்வாறு, 1823-இல் ஓவன் அயர்லாந்தில் கம்யூனிசக் குடியிருப்புகள் மூலம், [மக்களின்] இன்னல் களைவதற்கான திட்டத்தைப் பரிந்துரைத்தார். இந்தக் குடியிருப்புகளை அமைப்பதற்கான செலவு, [பராமரிப்புக்கான] ஆண்டுச் செலவினங்கள், அனேகமாக [அதிலிருந்து பெறப்படும்] வருமானம் ஆகியவை அடங்கிய முழுமையான திட்ட மதிப்பீடுகளை வகுத்திட்டார். வருங்காலத்துக்கான அவருடைய வரையறுக்கப்பட்ட திட்டத்தில், விவரங்களின் நுட்பமான வரையறுப்புகள், அப்படியொரு நடைமுறை அனுபவ அறிவுடன் கையாளப்பட்டுள்ளன. அடித்தளத் திட்டம், முன்புறக் காட்சி, பக்கவாட்டுக் காட்சி, மேலிருந்து நோக்கும் பொதுவான காட்சி என அனைத்தும் சேர்க்கப்பட்டுள்ளன. சமூகச் சீர்திருத்தத்துக்கான ஓவனின் வழிமுறையை ஏற்றுக் கொண்டால், அவர் உள்ளபடியே முன்வைத்துள்ள விவரங்களின் ஒழுங்கமைப்புக்கு எதிராக, நடைமுறைக் கண்ணோட்டத்திலிருந்து சொல்வதற்கு ஏதுமில்லை.

கம்யூனிசத் திசைவழியில் ஓவனின் முன்னேற்றம் அவருடைய வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. வெறுமனே ஒரு கொடையாளியாக மட்டும் ஓவன் இருந்தவரை, அவருக்குச் செல்வமும், பாராட்டும், மதிப்பும், புகழுமே வந்து குவிந்தன. ஐரோப்பாவிலேயே மிகவும் செல்வாக்குப் பெற்ற மனிதராகத் திகழ்ந்தார். அவருடைய வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, அரசியல் வல்லுநர்களும், பிரபுக்களும் அவரின் கருத்துகளை ஆமோதித்து ஆங்கீகரித்தனர். ஆனால், அவர் தம்முடைய கம்யூனிசக் கொள்கைகளை முன்வைத்தபோது, நிலைமை முற்றிலும் வேறானது. முக்கியமாகச் சமூகச் சீர்திருத்தத்துக்கான பாதையைத் தடுக்கும் மூன்று பெரும் தடைகள் அவருக்குத் தென்பட்டன: தனியார் சொத்துடைமை, மதம், திருமணத்தின் தற்போதைய வடிவம். இவற்றின்மீது தாக்குதல் தொடுத்தால் தாம் எவற்றையெல்லாம் எதிர்கொள்ள நேரிடும் என ஓவன் அறிந்து வைத்திருந்தார். சட்டப் பாதுகாப்பின்மை, அதிகாரபூர்வ சமுதாயத்திலிருந்து ஒதுக்கப்படுதல், தம்முடைய முழுமையான சமூக அந்தஸ்தையே இழத்தல் ஆகியவற்றை அவர் எதிர்கொள்ள வேண்டும். ஆனால் விளைவுகள் பற்றிய அச்சமின்றி அவற்றின்மீது தாக்குதல் தொடுப்பதிலிருந்து இவற்றுள் எதுவும் அவரைத் தடுத்து நிறுத்திவிடவில்லை. [இவ்வாறுதான் நடக்குமென] அவர் முன்னறிந்தபடியே நிகழ்ந்தது. பத்திரிகைகளில் அவருக்கு எதிரான மௌனச் சதியுடன் கூடவே, அதிகாரபூர்வச் சமுதாயத்திலிருந்து விலக்கி வைக்கப்பட்டார். தம் செல்வம் அனைத்தையும் பலியிட்டு அமெரிக்காவில் அவர் நடத்திய வெற்றிபெறாத கம்யூனிசப் பரிசோதனைகளால் தம்முடைய செல்வத்தையெல்லாம் இழந்து நொடித்துப் போனார். நேரடியாகத் தொழிலாளி வர்க்கத்திடம் வந்து சேர்ந்தார். தொடர்ந்து 30 ஆண்டுகள் அவர்களிடையே பணியாற்றினார். [அக்காலகட்டத்தில்] இங்கிலாந்தில் தொழிலாளர்கள் சார்பிலான ஒவ்வொரு சமூக இயக்கமும், ஒவ்வொரு மெய்யான முன்னேற்றமும் இராபர்ட் ஓவனின் பெயருடன் தன்னை இணைத்துக் கொண்டுள்ளன. தொழில்கூடங்களில் பெண்கள், குழந்தைகளின் வேலைநேரத்துக்கு வரம்பு விதித்த முதலாவது சட்டத்தை[37], ஐந்து ஆண்டுகள் போராட்டத்துக்குப்பின், 1819-இல் நிர்ப்பந்தம் கொடுத்து. நிறைவேறச் செய்தார். இங்கிலாந்தின் அனைத்துத் தொழிற் சங்கங்களும் ஒரே மாபெரும் தொழிற்சங்க கூட்டமைப்பாக இணைந்து நடத்திய முதலாவது காங்கிரசின் தலைவராக இருந்தார்[38]. சமுதாயத்தின் முழுமையான கம்யூனிசவழி அமைப்புமுறைக்குரிய இடைக்கால நடவடிக்கைகளாக, ஒருபுறம் சில்லறை வணிகத்துக்கும் உற்பத்திக்குமாகக் கூட்டுறவுக் கழகங்களை ஓவன் அறிமுகப்படுத்தினார். அக்காலகட்டம் முதலாக, குறைந்தது அவை வியாபாரிகளும் ஆலையதிபர்களும் சமூக ரீதியாகச் சிறிதும் தேவையற்றவர்கள் என்பதற்கான நடைமுறை நிரூபணத்தை வழங்கின. மறுபுறம், தொழிலாளர்களின் உற்பத்திப் பொருள்களை உழைப்பு-நோட்டுகளுக்குப் பரிவர்த்தனை செய்துகொள்ள உழைப்புக் கடைவீதிகளை[39] அவர் அறிமுகப்படுத்தினார். இந்த உழைப்பு-நோட்டுகளின் அலகு ஒரு மணிநேர வேலை ஆகும். இந்த நிறுவனங்களின் தோல்வி நிச்சயமாகத் தவிர்க்கமுடியாத ஒன்று என்றாலும், மிகவும் பிந்தைய ஒரு காலகட்டத்தில் புரூதோனின் (Proudhon) பரிவர்த்தனை வங்கி[40] அமைக்கப்படுவதற்கு இவை முழு அளவில் முன்னோடியாக விளங்கின. [புரூதோனின் வங்கியைப்போல] இவை சமூகக் கேடுகள் அனைத்துக்கும் சஞ்சீவி மருந்தெனக் கூறிக் கொள்ளவில்லை. ஆனால் சமுதாயத்தை மேலும் தீவிரமாக மாற்றியமைப்பதற்கான முதலாவது முயற்சி மட்டுமே. அந்த வகையில், ஓவனின் நிறுவனங்கள் புரூதோனின் வங்கியிலிருந்து முற்றிலும் வேறுபட்டு விளங்கின.

அடிக்குறிப்புகள்  

[37] குழந்தைகளின் வேலைநேரம்: ஓவனின் முன்முயற்சியால் 1815 ஜூனில் நாடாளுமன்றத்தில் குழந்தைத் தொழிலாளர்கள் பற்றிய ஒரு மசோதா தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அது 1819 ஜூலையில்தான் வெட்டிக் குறுக்கப்பட்ட வடிவில் சட்டமாக நிறவேற்றப்பட்டது. பஞ்சாலைகளில் 9 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை வேலைக்கு வைத்துக் கொள்ள இச்சட்டம் தடை விதித்தது. 18 வயத்துக்கு உட்பட்டோரின் வேலை நேரம் ஒரு நாளைக்கு 12 மணி நேரம் என வரம்பு விதித்தது. காலை உணவுக்கும் மதிய உணவுக்கும் ஒன்றரை மணிநேரம் இரண்டு இடைவேளைகள் விடவேண்டும் என்றது.

[38] தொழிற்சங்கக் கூட்டமைப்பு: 1833 அக்டோபரில் லண்டனில், கூட்டுறவுக் கழகங்கள், தொழிற்சங்கங்களின் காங்கிரஸ் நடைபெற்றது. ஓவன் இதற்கு தலைமை வகித்தார். இதில், இங்கிலாந்து, அயர்லாந்து தேசியக் கூட்டுத் தொழிற்சங்கம் நிறுவப்பட்டது. இத் தொழிற்சங்கம் உற்பத்தி நிர்வாகத்தைத் தானே ஏற்றுச் சமாதான வழிகளில் சமுதாயத்தை முற்றிலும் மாற்றியமைக்க வேண்டுமென முடிவு செய்யப்பட்டது. முதலாளித்துவ சமூகமும் அரசும் கடுமையாக எதிர்த்ததால் 1834 ஆகஸ்டில் இந்த நிறுவனம் சிதைந்துவிட்டது.

[39] உழைப்புக் கடைவீதி: இங்கிலாந்தின் பல நகரங்களில் தொழிலாளர்களின் கூட்டுறவுக் கழகங்கள் ஏற்படுத்திய நியாய உழைப்புப் பரிவர்த்தனைச் சந்தைகளை (Equitable Labour Exchange Bazaars) ஏங்கெல்ஸ் இங்கு குறிப்பிடுகிறார். முதலாவது சந்தையை 1832-இல் ஓவன் நிறுவினார். முதலாளித்துவப் பண்டப் பொருளாதாரச் சூழ்நிலையில் பணம் இல்லாமல் பரிவர்த்தனை செய்துகொள்ளும் இம்முயற்சி வெகுவிரைவில் தோல்வியடைந்தது.

[40] பரிவர்த்தனை வங்கி: 1848 – 49 ஆண்டுகளில் நடைபெற்ற புரட்சியின்போது புரூதோன் பரிவர்த்தனை வங்கியை அமைக்க முயன்றார். அவருடைய மக்கள் வங்கி 1849 ஜனவரி 31-இல் பாரிசில் அமைக்கப்பட்டது. முறையாக செயல்படத் தொடங்கும் முன்னரே, அது தோல்வியடைந்து ஏப்ரல் தொடக்கத்திலேயே மூடப்பட்டது.


இந்த கட்டுரை 'கற்பனாவாத சோஷலிசமும் விஞ்ஞான சோஷலிசமும்'  (ஃபிரெடெரிக் ஏங்கெல்ஸ்) - நூலில் இருந்து எடுக்கப்பட்டது 
நன்றி :தமிழாக்கம்: மு.சிவலிங்கம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முகப்பு

புதிய பதிவுகள்