ஒவ்வொரு முறை மாநில அளவில் ஆட்சிமாற்றம் ஏற்படும் போதும் ஆட்சிமாற்றம் ஏற்பட்ட உடனேயே உள்ளாட்சித் தேர்தல்கள் மற்றும் கூட்டுறவுத் தேர்தல்கள் நடத்தப்படுவது வழக்கமாகிவிட்டது. ஆட்சிமாற்றங்களுக்கு முன்பு உள்ளாட்சி அமைப்புகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிந்துவிட்டால் கூட பெரும்பாலும் தேர்தல்கள் நடத்தப்படுவதில்லை. அடுத்த ஆட்சிமாற்றம் நடந்த பின்னரே அவை நடத்தப்படுகின்றன.
இவ்வாறு அவை நடத்தப்படுவதற்கான காரணம் புதிதாக ஆட்சியதிகாரத்திற்கு வந்த கட்சியினர் மாநிலத்தின் அனைத்து அதிகார அமைப்புகளையும் தங்கள் வசம் வைத்திருக்க விரும்புவதனாலேயே ஆகும். இவ்வாறு அனைத்து அதிகாரங்களையும் கொண்டவர்களாக அவர்கள் விளங்க விரும்புவதற்குக் காரணம் முன்னைப்போல் அன்றி உள்ளாட்சி அமைப்புகளுக்காக சமீப காலங்களில் பஞ்சாயத்தி ராஜ் சட்டம் உலக வங்கியிலிருந்து பெறப்படும் கடன் ஆகியவற்றின் மூலமாக ஒதுக்கப்படும் நிதி கணிசமாக இருப்பதுதான். அதனால்தான் முன்பிருந்த ஆர்வத்தைக் காட்டிலும் மிக அதிக ஆர்வம் தற்போது அரசியல் கட்சிகளால் உள்ளாட்சி அமைப்புகளுக்குப் போட்டியிடுவதில் காட்டப்படுகிறது. பஞ்சாயதிராஜ், உலகவங்கிக் கடன் ஆகியவை மட்டுமின்றி அசுர வேகத்தில் வளர்ந்து வரும் நகர்மயமாகும் போக்கும் உள்ளாட்சி அமைப்புகளின் வருவாயைப் பெருமளவு அதிகரித்துள்ளது. வீடுகட்டும் வரைவுக்கு அனுமதி வழங்குவதில் தொடங்கி அதற்கு வரி விதிப்பது வரை உள்ளாட்சி அமைப்புகளுக்குக் கிடைக்கும் முறையான, முறைகேடான வருவாய்கள் ஏராளமாக உள்ளன. எனவேதான் பலாப் பழத்தில் ஈ மொய்ப்பது போல பஞ்சாயத்து அமைப்புகளுக்கு போட்டியிருவோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.
இப்போதெல்லாம் சாலை வசதி செய்துதர மக்களால் கோரிக்கை எழுப்பப்படும் வரை உள்ளாட்சி அமைப்புகள் காத்திருப்பதே இல்லை. இரண்டாண்டுக்கு ஒருமுறையேனும் சாலை போடும் பணி நடைபெறுகிறது. மக்களுக்கு வசதி செய்து தருவது என்பதைக் காட்டிலும் சாலை போடுவதற்கான ஒப்பந்தம் எடுத்துச் சம்பாதிப்பது என்பதற்கு அதிக முக்கியம் தரப்படுவதால் இவ்வாறு சாலை போடும் பணி அடிக்கடி நடைபெறுகிறது. ஆனால் போடப்படும் சாலைகளின் தரத்தை மட்டும் யாரும் பார்க்கக் கூடாது. அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் கட்டாயம் போட்டாக வேண்டும் என்பதற்காக அவை ஏனோதானோவென்று தரமின்றிப் போடப்படுகின்றன. இப்போக்குகள் வளர்ந்துள்ள நிலையில் உள்ளாட்சி உறுப்பினர்களின் முறைகேடான வருவாய் பலமடங்கு அதிகரித்துள்ளது. எனவே சேவை என்ற கண்ணோட்டம் எள்ளளவும் இல்லாது பணம் சம்பாதிப்பதற்கான வழியும் வாய்ப்பும் என்பதாகவே உள்ளாட்சி அமைப்புகளின் உறுப்பினர் மற்றும் தலைவர் பதவிகள் ஆகிவிட்டன. அதனால் அதற்காக அவர்கள் செலவிடும் தொகையும் மிகக் கணிசமாக அதிகரித்துள்ளது.
இந்தப் போக்கை எதிர்க்கும் மனநிலை மக்கள் மத்தியில் அரசியல் கட்சிகளால் வளர்க்கப்படாத சூழ்நிலையில் இந்தச் சீரழிவு எந்த அளவிற்கு வளர்ந்து நிலை பெற்றுவிட்டது என்றால் பல இடங்களில் உள்ளாட்சித் தலைவர் பதவிகள் ஏலம் விடப்படும் நிலைக்கு வளர்ந்து முற்றிப் புரையோடி விட்டது. அது மறைக்கப்பட முடியாத விதத்தில் பத்திரிக்கைகளிலும் ஒளிவுமறைவின்றி வருவதை நாம் பார்க்கிறோம்.
எனவே இப்போதெல்லாம் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவோர் நான் அதைச் செய்வேன் இதைச் செய்வேன் என்று வாக்குறுதி கொடுப்பதும் இல்லை; மக்கள் அத்தகைய வாக்குறுதிகளை அவர்களிடமிருந்து எதிர்பார்ப்பதுமில்லை. சம்பாதிப்பதற்காகத் தான் இவர்கள் தேர்தலில் போட்டியிடுகிறார்கள் என்பது மக்களைப் பொறுத்தவரையில் முடிவுகட்டப் பட்டுவிட்ட வியமாகிவிட்டது. அதனால் தான் தேர்தல் அறிவிப்பு வந்த நாளிலிருந்து அவர்கள் செய்யும் செலவுகளையும் வைக்கும் விருந்துகளையும் எவ்வளவு அதிகபட்சமாக்கி அனுபவிக்க முடியுமோ அவ்வளவு அதிகபட்சமாக்கி அனுபவிக்கும் அவலம் வாக்காளர்கள் மத்தியிலும் தலைதூக்கியுள்ளது. எப்படியாவது வெற்றி பெற்று சட்டமன்றங்களைக் கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் கட்சிகளுடன் உடன்பாடு வைத்துக்கொள்ளத் துடிக்கும் ஆளும் கட்சியாக வர வாய்ப்புள்ள கட்சிகள் உள்ளாட்சித் தேர்தல் வந்தவுடன் எந்தவிதத் தயக்கமும் இன்றி கூட்டணிக் கட்சிகளை புறந்தள்ளித் தான் மட்டும் தனியே செல்லவும் தயங்குவதில்லை.
இதற்கு எடுத்துக்காட்டு தமிழ்நாட்டின் ஆளும் கட்சி மட்டுமல்ல; எதிர்க்கட்சியான தி.மு.க.வும் அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கட்சியை உள்ளாட்சித் தேர்தலில் கழற்றி விட்டுள்ளதிலிருந்தே பார்க்க முடியும். அதுமட்டுமின்றி நகரவைத் தலைவர், மாநகர மேயர், பேரூராட்சி மன்றத் தலைவர் போன்ற பதவிகளுக்கு போட்டியிடுவோர் பெரும் பணம் செலவிடத் தயாராக இருப்பவராக இருக்க வேண்டும் என்ற அடிப்படையிலேயே சீட்டுகள் வழங்கப்படுகின்றன. பதவி என்பது சம்பாதிக்கவே என்ற எண்ணம் வேரூன்றிவிட்ட நிலையில் வசதி படைத்த பிற கட்சிகளைச் சேர்ந்தவர்கள் கூட பிரதான கட்சிகளில் தற்காலிகமாக இணைந்து தேர்தலில் போட்டியிடும் போக்கு தோன்றி வளர்ந்து வருகிறது.
பொதுத் தேர்தலைக் காட்டிலும் உள்ளாட்சித் தேர்தல்களில் குறிப்பாக கிராமப்புறப் பகுதிகளில் ஜாதி ஒரு முக்கியப் பங்கினை வகிக்கிறது. இதன் பொருள் ஒரு பெரும்பான்மை ஜாதியைச் சேர்ந்த ஏழை அந்த வார்டில் போட்டியிட்டாலும் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டு விடுவார் என்பதல்ல. பணத்தோடு பெரும்பான்மை ஜாதியைச் சேர்ந்தவராகவும் ஒருவர் இருந்தால் அவர் சீட்டுப் பெறுவதற்கும் தேர்ந்தெடுக்கப் படுவதற்கும் வாய்ப்பினைப் பெற்றவராக ஆகிவிடுகிறார். இந்தக் போக்குகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைப் பொதுமக்கள் பார்ப்பதோ அவர்களிடம் தங்களது குறைகளைக் கூறுவதோ வழக்கொழிந்து போய்விட்டது. அது எந்த அளவிற்கு ஆகிவிட்டது என்றால் தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்டு உள்ளாட்சி நிர்வாகம் நடத்தப்படுகிறதா அல்லது அது சிறப்பு அதிகாரியால் நடத்தப்படுகிறதா என்பதே சாதாரண மக்களைப் பொறுத்தவரையில் கவனத்தில் இல்லாத விஷயமாகிவிட்டது. அதனால்தான் வாக்காளர்களைப் பொறுத்தவரையில் உள்ளாட்சித் தேர்தல்கள் குறித்த ஒரு ஆர்வமும் உற்சாகமும் அறவே இல்லாத நிலை நிலவுகிறது.
சீரழிவுப் போக்குகள் இந்த அளவு மலிந்து விட்டதால் இதனை ஒன்றுமே இனிமேல் செய்ய முடியாது என்ற எண்ணம் மக்களிடம் உருவாகி வளர வேண்டும் என்பது இந்த உள்ளாட்சி அமைப்புகளைப் பயன்படுத்திச் சம்பாதிக்க விரும்பும் உடமை வர்க்கத்தின் திண்ணமான எண்ணமாகும். நிலைமை எத்தனை மோசமானதாக இருந்தாலும் அது அறவே மாற்ற முடியாத ஒன்றாக ஒரு போதும் ஆகிவிடாது. ஆனால் அதற்காக திட்டமிட்ட அர்ப்பணிப்புடன் கூடிய செயல்பாடு மிகவும் அவசியம். வளர்ச்சிக்கென்று உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒதுக்கப்படும் தொகைகள் எவ்வாறு செலவிடப் படுகின்றன என்பது கண்டறிய முடியாத ஒரு வியமல்ல.
எங்களது நாட்டிலும் ஜனநாயகமும் வெளிப்படைத் தன்மையும் மிக அதிகமாகவே பராமரிக்கப் படுகின்றன என்று காட்டுவதற்காக தகவல் அறியும் உரிமைச் சட்டம் போன்ற சட்டங்கள் நமது ஆட்சியாளர்களால் பெயரளவிற்கேனும் இயற்றப்பட்டுள்ளன. அவற்றைப் பயன்படுத்தி ஒவ்வொரு வளர்ச்சிப் பணிக்கும் ஒதுக்கப்பட்ட தொகை என்ன என்பதை உரிய சிரத்தை எடுத்தால் நிச்சயம் அறிய முடியும். அதுமட்டுமின்றி முன்னைப்போல் அல்லாமல் தற்போது பொறியியல் கல்வி கற்றவர்கள் எண்ணிக்கை இந்தியாவிலேயே மிக அதிகமாகத் தமிழ்நாட்டில் உள்ளது. அவர்களின் தொழில்நுட்ப அறிவைப் பயன்படுத்தி ஒதுக்கப்பட்டத் தொகைகளைக் கொண்டு செய்து முடிக்கப்பட்ட சாலை வசதிகள் போன்ற பணிகள் எத்தனை தரத்துடன் செய்யப்பட்டுள்ளன என்பதைத் தெளிவாகவே அறிய முடியும். அதன்மூலம் எவ்வளவு பணம் முறைகேடாக ஒப்பந்தக்காரர், அரசு அதிகாரிகள், தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் போன்றவர்களால் கபளீகரம் செய்யப்பட்டுள்ளது என்பதை ஓரளவு துல்லியமாகவும் அறிய முடியும். ஆனால் இவற்றைத் தனிமனிதர்களாக ஒருசிலர் செய்வதைக் காட்டிலும் இவற்றைச் செய்வதற்கான அமைப்புகளை உருவாக்கி அவற்றின் மூலம் செய்தால் மக்களைச் சீரழிவிற்கும் முறைகேட்டிற்கும் எதிராக ஒருங்கு திரட்டவும் அதன்மூலம் படிப்படியாக உண்மையான மக்கள் பங்கேற்புடன் கூடிய மக்கள் அதிகாரத்தை பிரதிபலிக்கும் சரியான அமைப்புகளுக்கு உருக்கொடுக்கவும் முடியும். இப்படிப்பட்ட அமைப்பு ரீதியான செயல்பாடே ஜாதியப் பிடியிலிருந்தும் உள்ளாட்சி அமைப்புகளை விடுவிக்கும். அந்த அடிப்படையில் கண்காணிப்புக் குழுக்கள் அமைத்து நடக்கும் முறைகேடுகளைக் கண்டறியும், அம்பலப்படுத்தும் போக்கை எந்த அளவிற்கு உணர்வு பெற்ற மக்களால் செய்ய முடிகிறதோ அந்த அளவிற்கு உள்ளாட்சி அமைப்புகளில் புரையோடிப் போயிருக்கும் கோளாறுகளை அகற்றும் பாதையில் அடியயடுத்தும் வைக்க முடியும்.
உள்ளாட்சித் தேர்தல்கள் அறிவிக்கப்பட்டு இன்று அவை நடைபெறவுள்ள சூழ்நிலையில் உணர்வு பெற்ற உழைக்கும் வர்க்க மனநிலை கொண்டவர்கள் நிலவும் இந்த கேடுகெட்ட சூழ்நிலையைக் கண்டு மலைத்துப்போய் நின்றுவிடாமல் மக்களிடம் சென்று அவர்களது உள்ளாட்சி அமைப்புகளின் வரம்பிற்குள் வரக்கூடிய பிரச்னைகள் என்ன என்பதை அறிவித்து அவற்றைச் செய்து முடிக்கத் தயாராக உள்ளவர்களுக்கு மட்டுமே வாக்களிக்க வேண்டும் என்ற எண்ணப் போக்கையாவது ஏற்படுத்த முயல வேண்டும். அந்தப் பின்னணியில் வாய்ப்புள்ள அனைத்து இடங்களிலும் அதையயாட்டிக் கண்காணிப்புக் குழுக்கள் அமைப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். வெளிப்படையாகப் பார்க்கும் போது பெரிய அளவில் இதுபோன்ற பிரச்னைகளில் ஆர்வம் குன்றியவர்களாக காட்சியளித்தாலும் அத்தனை சிரத்தையற்றவர்களாக மக்கள் இல்லை. மிக சமீபத்தில் ஊழலுக்கு எதிரான லோக்பால் சட்டம் கொண்டுவருவதற்காக அன்னா ஹசாரே அவர்கள் தொடங்கிய இயக்கம் பெற்ற வரவேற்பு இதையே புலப்படுத்துகிறது. அதாவது மக்களிடம் நடக்கும் கொடுமைகளை சகித்துக் கொள்ளும் மனநிலை மண்டிமலிந்து மலடுதட்டிப் போனவர்களாக அவர்கள் ஆகிவிடவில்லை; அவர்களிடம் உள்ளார்ந்ததாக உள்ள நேர்மையான விஷயங்களுக்காக நிமிர்ந்து நின்று போராட வேண்டும் என்ற உணர்வை வெளிப்படுத்தும் அளவிற்கு நம்பிக்கை ஊட்டக்கூடிய போக்குகளும் அமைப்புகளும் இல்லாததாலேயே அவர்கள் இவ்வாறு உள்ளனர் என்ற வியத்தை அந்த இயக்கம் கோடிட்டுக் காட்டியது.
அத்தகைய நம்பிக்கையூட்டும் அமைப்பாக உருவாகும் விதத்தில் அமைப்பை வளர்த்தெடுத்து மக்களிடம் உள்ளாட்சி அமைப்புகளைச் சூழ்ந்துள்ள இந்த சீரழிந்த போக்குகளை அம்பலப்படுத்தவும், மக்கள் இயக்கங்கள் கட்டி அதனை எதிர்க்கவும் தயாராக உள்ள, உண்மையான மக்களின் பங்கேற்பினையும் அதனை மையமாகக் கொண்ட மக்கள் அதிகாரத்தைப் பிரதிபலிக்கும் அமைப்புகளையும் கண்காணிப்புக் குழுக்கள் மூலம் உருவாக்க முனைந்துள்ள எங்களுக்கு உங்களால் ஆன அனைத்து வகை ஆதரவினையும் வழங்கி இன்று நிலவும் இந்தக் கேடுகெட்ட சூழ்நிலையை அகற்றுவதற்கான உங்கள் பங்கினை ஆற்ற முன்வருமாறு அறைகூவி அழைக்கிறோம்.
கம்யூனிஸ்ட் ஒர்க்கர்ஸ் பிளாட்ஃபார்ம் (சி.டபிள்யு.பி), தமிழ்நாடு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக