தமிழாக்கம்: மு.சிவலிங்கம்
[கம்யூனிஸ்ட் லீக்குக்காக 1847-இல் ஏங்கெல்ஸ் இரண்டு வரைவுத் திட்டங்களை (Draft Programmes) கேள்வி-பதில் வடிவில் தயாரித்தார். முதலாவதை, ஜூன் மாதத்தில், “Draft of a Communist Confession of Faith” என்ற பெயரிலும், இரண்டாவதை, அக்டோபர்-நவம்பர் மாதத்தில், “Principles of Communism” என்ற பெயரிலும் எழுதினார். இவற்றுள் முதல் வரைவு 1968-ஆம் ஆண்டில்தான் முதன்முதலாகக் கண்டறியப்பட்டு, 1969-இல் ஹம்பர்க்கில் வெளியிடப்பட்டது. இரண்டாவது வரைவான இந்த நூல் முதன்முதலாக 1914-இல் ஜெர்மனியில் ஜெர்மன் சமூக ஜனநாயகக் கட்சி இதழில் வெளியிடப்பட்டது. இதன் ஆங்கில மூலம் 1969-இல் மாஸ்கோவில் முன்னேற்றப் பதிப்பகம் வெளியிட்ட மார்க்ஸ்-ஏங்கெல்ஸ் தேர்வு நூல்கள் முதல் தொகுதியில் 81-97 பக்கங்களில் இடம்பெற்றுள்ளது. ஆங்கில மொழியாக்கம் செய்தவர் பால் ஸ்வீஸி என்பவர். இரண்டு வரைவுகளையும் ஒப்பிட்டு நோக்கினால், “கம்யூனிசத்தின் கோட்பாடுகள்” என்னும் இந்த இரண்டாவது வரைவு, முதலாவது வரைவின் திருத்தப்பட்ட வடிவமாகத் தோன்றுகிறது. கம்யூனிஸ்ட் லீக்கின் இரண்டாவது மாநாட்டில் (1847, நவம்பர் 29 - டிசம்பர் 8) மார்க்ஸும் ஏங்கெல்ஸும் இரண்டாவது வரைவில் காணப்படும் கம்யூனிசத்தின் விஞ்ஞான அடிப்படையிலான கோட்பாடுகளை வலியுறுத்திப் பேசினர். கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கையைத் தயாரிக்கும் பொறுப்பை மாநாடு இருவருக்கும் வழங்கியது. மார்க்ஸ், எங்கெல்ஸ் இருவரும் சேர்ந்து “கம்யூனிஸ்ட் அறிக்கையை” (Communist Manifesto) உருவாக்கும்போது, “கம்யூனிசத்தின் கோட்பாடுகள்” என்னும் இந்த வரைவு அறிக்கையில் காணப்படும் கருத்துருக்களை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டனர்.]