வெள்ளி, 25 பிப்ரவரி, 2011

கடாஃபியின் கையைவிட்டு நழுவுகிறது லிபியா: உள்நாட்டுப் போர் மூளும் சூழல்

டுனீசியா, எகிப்துக்கு அடுத்தபடியாக லிபியாவில் சர்வாதிகார ஆட்சி ஒழியப் போவது நிச்சயமாகிவிட்டது.அதிபர் மம்மர் கடாஃபியின் 41 ஆண்டுக்கால ஆட்சியின் வீழ்ச்சி தொடங்கிவிட்டது.லிபிய நாட்டின் கிழக்குப் பகுதி எதிர்ப்பாளர்கள் வசமாகிவிட்டது.ராணுவத் தளபதிகளே கடாஃபியின் ஆட்சி பிடிக்காமல் மக்களோடு சேர்ந்துகொண்டுவிட்டனர்.லிபியாவின் தூதரக அதிகாரிகள் ஒவ்வொருவராக பதவி விலக ஆரம்பித்துவிட்டனர்.மம்மர் கடாஃபியின் ஆட்சிக்கு முடிவு கட்டும் நேரம் வந்துவிட்டது என்று அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் முடிவு செய்துவிட்டன. அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்படுவதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க முடியாது என்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலர் பான் கி மூனும் அறிவித்துவிட்டார்.தடைகள் விதிக்கப்படும்: முதல் கட்டமாக லிபியா மீது ராணுவ, பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என்றும் அதன் பிறகும் நிலைமை சீரடையவில்லை என்றால் பன்னாட்டுப் படைகள் மூலம் லிபிய ஆட்சியாளர்கள் விரட்டப்படுவார்கள் என்றும் தெரிகிறது.கடாஃபிக்கு விசுவாசமாக இருக்கும் ராணுவத்தினரும் கூலிப்படையினரும் தலைநகர் திரிபோலியில் மக்களைக் கொடூரமாக அடக்கி ஒடுக்குகின்றனர்.மேற்கிலும் பரவியது கலகம்: அதிபர் கடாஃபிக்கு எதிரான கலகம் லிபிய நாட்டின் மேற்குப் பகுதிக்கும் பரவியது. மக்களுக்கு ஆதரவாகக் களத்தில் இருந்து செயல்படுவோம், கடாஃபி கட்டளை இட்டாலும் மக்களைச் சுடமாட்டோம் என்று ராணுவ அதிகாரிகள் அறிவித்தனர்.மிசுராடாவில் ராணுவம் சுட்டது: அதே சமயம் திரிபோலிக்கு 210 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மிசுராடா என்ற ஊரில் கடாஃபிக்கு விசுவாசமாக இருக்கும் ராணுவத்தினர் கண்மூடித்தனமாகச் சுட்டதில் ஏராளமானோர் உயிரிழந்தனர், பலர் காயம் அடைந்தனர் என்று பி.பி.சி. தெரிவிக்கிறது.விலகிய அமைச்சர் கடத்தப்பட்டார்? கடாஃபியின் சர்வாதிகார ஆட்சியின் அடக்குமுறை பிடிக்காமல் பதவியை ராஜிநாமா செய்வதாக உள்துறை அமைச்சர் அப்துல் ஃபதா யூனஸ் அல் அபிதி அறிவித்திருந்தார். அவரைத் தனக்கு விசுவாசமான ராணுவத்தார் மூலம் அதிபர் கடாஃபி எங்கோ கடத்திச் சென்றுவிட்டார் என்பது வியாழக்கிழமைதான் தெரிந்தது. அவர் உயிரோடு இருக்கிறாரா, சித்திரவதை செய்யப்படுகிறாரா அல்லது சுட்டுக்கொன்றுவிட்டார்களா என்று எதுவுமே தெரியவில்லை.மேஜர் ஜெனரல் மக்களுடன் சேர்ந்தார்: டொப்ருக் என்ற நகரில் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் சுலைமான் மெஹ்மூத் என்பவர் கடாஃபியின் பக்கமிருந்து விலகி மக்கள் பக்கம் சேர்ந்துகொண்டுவிட்டார். கடந்த காலத்தில் அவருக்கு விசுவாசமாக இருந்தோம், இப்போது நிலைமை மாறிவிட்டது, கடாஃபி இரக்கமற்ற சர்வாதிகாரி என்று கூறினார் சுலைமான் மெஹ்மூத்.திரிபோலியில் ராணுவம் ரோந்து: தலைநகர் திரிபோலியில் கடாஃபிக்கு விசுவாசமான ராணுவ வீரர்களும் கூலிப்படையினரும் அச்சமூட்டும் வகையில் நகரில் ரோந்து சுற்றி வருகின்றனர். எவராவது வீதியில் என்ன நடக்கிறது என்று வீட்டிலிருந்தபடி எட்டிப்பார்த்தால்கூட அழைத்துச் செல்கின்றனர். வீட்டில் இருப்பவர்கள் கெஞ்சினாலும் அடித்து இழுத்துச் செல்கின்றனர். நீ அதிபருக்கு விசுவாசியா, துரோகியா என்று கேட்கின்றனர்.தகவல் தொடர்பு துண்டிப்பு: லிபிய மக்கள் வெளிநாடுகளில் உள்ள தங்களுடைய உறவினர்களுடன்கூட பேச முடியாதபடிக்கு தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டிருக்கிறது. தொலைபேசி, கைபேசி, இணையதளம் உள்ளிட்ட அனைத்து தகவல் தொடர்புகளும் துண்டிக்கப்பட்டுவிட்டன. இதனால் லிபியாவில் இருக்கும் தங்களுடைய உறவினர்களும் நண்பர்களும் என்ன ஆனார்கள் என்றுகூட தெரியாமல் மற்றவர்கள் பரிதவிக்கும் நிலைமை ஏற்பட்டிருக்கிறது.விமான நிலையங்களில் மக்கள் வெள்ளம்: நிலைமை மேலும் மோசமாவதற்குள் லிபியாவைவிட்டு வெளியேறிவிட வேண்டும் என்று ஆயிரக்கணக்கான வெளிநாட்டவர்கள் ஒரே சமயத்தில் புறப்பட்டுவிட்டனர். இதனால் விமான நிலையங்களில் விமானங்கள் வருவதும் புறப்படுவதுமாகவே இருக்கின்றன. ஏராளமான நாடுகள் தங்கள் நாட்டவரை அழைத்து வர விமானங்களையும் கப்பல்களையும் ஒரே சமயத்தில் பயன்படுத்த ஆரம்பித்துள்ளன.ரஷியா, பிரான்ஸ், பிரிட்டன் ஆகியவை தங்கள் நாட்டவர்களை வெளியேற்றத் தொடங்கிவிட்டன. இந்தியாவும் சீனாவும் பெரிய அளவில் ஏற்பாடுகளைச் செய்து வருகின்றன. ஐரோப்பிய யூனியன், தென் கொரியா, அமெரிக்கா ஆகியவையும் இதைத் தொடங்கிவிட்டன.1,000 பேர் சாவு: கடந்த 10 நாள்களாக நடைபெற்றுவரும் கிளர்ச்சியில் 300 பேர் இறந்திருப்பதாக லிபிய உள்துறை அமைச்சகம் தெரிவிக்கிறது. ஆனால் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுவிட்டனர் என்று இத்தாலி நாட்டு வெளியுறவு அமைச்சர் பிராங்கோ பிராட்டினி கூறுகிறார்.பெங்காசியிலிருந்து பரவியது: கடாஃபியை எதிர்ப்பவர்களின் கிளர்ச்சி பெங்காசி நகரில்தான் முதலில் தீவிரமாகத் தொடங்கியது. இப்போது அது அதைவிட தீவிரமாக பிற ஊர்களுக்கும் பரவி வருகிறது. தொலைபேசி, கைபேசி, இணையதள தொடர்புகள் அற்றுப்போயிருந்தாலும் அரசை எதிர்ப்பவர்கள் தங்களுக்குள் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டு ஊர் ஊராகச் சென்று மக்களை அரசுக்கு எதிராகப் போரிடுமாறு அறைகூவல் விடுக்கின்றனர். பெங்காசி, டொப்ருக் நகரங்களில் அரசு எதிர்ப்பாளர்கள் கடாஃபிக்கு கடைசி காலம் வந்துவிட்டது என்று கூறி பட்டாசு வெடித்து தேசியக் கொடிகளைக் கையில் வைத்துக்கொண்டு உற்சாகக் கூத்தாடுகின்றனர். பாட்டுப்பாடி நடனம் ஆடுகின்றனர்.ஒபாமா தீவிர ஆலோசனை: கடாஃபி தானாகப் பதவி விலகட்டும் என்று காத்திராமல் ஆயிரக்கணக்கான உயிர்ப் பலிகளைத் தடுத்து நிறுத்துவது சர்வதேசக் கடமை என்று கருதுகிறார் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா. இது தொடர்பாக முதலில் அமெரிக்க அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்திவருகிறார். பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, ஐரோப்பிய யூனியன் போன்ற தோழமை நாடுகளின் தலைவர்களுடைய கருத்துகளையும் அவர் கேட்டு வருகிறார்.கடாஃபியின் அடக்குமுறை ஆட்சியை வன்மையாகக் கண்டித்துள்ள அவர், சுமுகமாக ஆட்சி மாற்றம் நடைபெற உரிய நடவடிக்கைகளை எடுக்கத் தவறினால் விளைவுகள் கடுமையாக இருக்கும் என்றும் எச்சரித்திருக்கிறார்.அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் வரும் திங்கள்கிழமை ஜெனீவா நகருக்குச் செல்கிறார். அங்கு மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்க பல்வேறு வெளிநாடுகளின் அமைச்சர்கள் வருகின்றனர். அங்கு லிபிய நிலைமை குறித்துத்தான் முக்கியமாக விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.கடாஃபி மகள் பதவி பறிப்பு: ஐக்கிய நாடுகள் சபையின் வளர்ச்சி திட்டப் பிரிவின் நல்லெண்ணத் தூதராக கடாஃபியின் மகள் ஆயிஷா அல் கடாஃபி நியமிக்கப்பட்டிருந்தார். சமீபத்திய நடவடிக்கைகளுக்குப் பிறகு அவரை அப்பதவியிலிருந்து நீக்கிவிட்டது ஐ.நா. மன்றம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முகப்பு

புதிய பதிவுகள்