வெள்ளி, 20 மே, 2011

2ஜி ஊழல் வழக்கில் கனிமொழி கைது... திகார் சிறையில் அடைக்கப்படுகிறார்!


ஸ்பெக்ட்ரம் வழக்கில், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகளும், திமுக மாநிலங்களவை உறுப்பினரும், ராஜாவோடு ஸ்பெக்ட்ரம் ஊழல் செய்த கூட்டாளியுமான   கனிமொழிக்கு முன் ஜாமீன் வழங்க டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று மறுத்துவிட்டது.கனிமொழியை கைது செய்து நீதிமன்றக் காவலில் அடைக்க, டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி உத்தரவிட்டார்.இதையடுத்து, கனிமொழி கைது செய்யப்பட்டு, திகார் சிறையில் அடைக்கப்படுகிறார்.இதேபோல், கலைஞர் டிவி நிர்வாக இயக்குனர் சரத்குமாரின் ஜாமீன் மனுவும் நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவரும் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்படுகிறார்

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேட்டால் ரூ.1.76 லட்சம் கோடி நாட்டுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது குறித்து தொடரப்பட்டுள்ள வழக்கில், முக்கியப் பங்கு உள்ளது என சிபிஐ-யின் முதல் குற்றப்பத்திரிகையில் குற்றம்சாட்டப்பட்ட மத்திய தொலைத் தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் ஆ.ராசா நீதிமன்றக் காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.இந்த முறைகேட்டை அரங்கேற்றியத்தில் கனிமொழிக்கும் பங்கு உள்ளது என்ற சிபிஐ, அவரது பெயரை துணைக் குற்றப்பத்திரிகையில் சேர்த்தது. கூட்டு குற்றச்சதி செய்ததாக கனிமொழி மீது குற்றம்சாட்டப்பட்டது. கலைஞர் டிவியின் நிர்வாக இயக்குனர் சரத்குமாரின் பெயரும் அதில் சேர்க்கப்பட்டது.இதைத் தொடர்ந்து, இந்த வழக்கில் தங்களை நீதிமன்றக் காவலில் வைக்கக்கூடாது என கனிமொழியும் சரத்குமாரும் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்தனர்.

இதுகுறித்து மே 6-ம் தேதி நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில் கனிமொழி சார்பில் மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி ஆஜரானார்.2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விவகாரத்தில், ராஜாவிற்கு தான் இந்த ஊழலில் முழுப்பொறுப்பும்  உள்ளது   ,   கனிமொழிக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்றும், பெண் என்பதால் அவருக்கு முன்ஜாமீன் அளித்தாக வேண்டும் என்றும் ராம் ஜெத்மலானி வாதிட்டார்.அதேநேரத்தில், கலைஞர் டிவி நிர்வாகத்தில் துவக்கம் முதல் மூளையாக இருந்து செயல்பட்டவர் கனிமொழியே என்றும், அவருக்கு முன்ஜாமீன் வழங்கக்கூடாது என்றும் சிபிஐ தரப்பில் வாதிடப்பட்டுள்ளது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், முன் ஜாமீன் மனுக்கள் மீதான உத்தரவை மே 14-ம் தேதிக்கு ஒத்திவைத்தது. இதன் தொடர்ச்சியாக, சென்னை வருமான வரி அலுவலகத்தில் கடந்த 12, 13 ஆகிய தேதிகளில் நேரில் ஆஜரான பிறகு, கனிமொழியும் சரத்குமாரும் மே 13-ம் தேதி இரவு விமானம் மூலம் டெல்லி சென்றனர். கனிமொழி ஜாமீன் மனு மீதான தீர்ப்பு மே 14-ல் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி, மே 20-ம் தேதிக்கு தீர்ப்பை ஒத்திவைத்தார்.

தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகள் கனிமொழி, கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் மற்றும் நிர்வாக இயக்குனர் சரத்குமார் ஆகியோர் முறையே 20, 60 மற்றும் 20 சதவீத கலைஞர் டிவி நிறுவனத்தின் பங்குகளைக் கொண்டுள்ளனர். கலைஞர் டிவியின் செயல்பாடுகளின் பின்னணியில் கனிமொழி முக்கியப் பங்கு வகிக்கிறார் என்றும், 2009-ல் ஆ.ராசாவை தொலைத்தொடர்பு அமைச்சராக மீண்டும் நியமிப்பது தொடர்பாக திமுக தலைமையகம் மற்றும் இடைத்தரகர்களுடன் கனிமொழி தொடர்ந்து தொடர்புகொண்டு பேசிவந்துள்ளார் என்றும் சிபிஐ தனது குற்றப்பத்திரிகையில் தெரிவித்திருந்தது.

சினியுக் பிலிம்ஸ் மற்றும் குசேகாவ் ப்ரூட்ஸ் அண்ட் வெஜிடபிள்ஸ் ஆகிய நிறுவனத்தின் வழியாக கலைஞர் டிவி நிறுவனத்துக்கு 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் தொடர்புடைய ரூ.214 கோடி பணம் பால்வாவின் நிறுவனம் மூலம் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது என்பதே சிபிஐ-யின் குற்றச்சாட்டு. இந்த ஊழலில் கருணாநிதியின் குடும்பம் முழுவதற்கும் பங்கு உள்ளது. அத்தோடு காங்கிரசும், டாட்டா , அம்பானி போன்ற பெருமுதலாளிகளும் நேரடியாக இதில்
சம்பந்தப்பட்டுள்ளனர். ஆனால் காங்கிரசும், பெருமுதலாளிகளும் அதிக சேதாரம் இல்லாமல் தங்களுக்கு இருக்கும் அதிகாரத்தை வைத்து தப்பிவிட்டனர்.
ஊழலில்  மூழ்கி முத்தெடுத்த கருணாநிதிக்கு இதெல்லாம் சாதாரணம் தான்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முகப்பு

புதிய பதிவுகள்