ஞாயிறு, 27 மே, 2012

மேதின உறுதியேற்போம்


உழைக்கும் வர்க்கம் ஒருநாளில் 18 மணி நேரம் வரை வேலை செய்ய நேர்ந்த சூழ்நிலை அதனைப் போராட்டப் பாதைக்குத் தள்ளியது. அதன் விளைவாகத் தோன்றிய போராட்டப் பேரலைகள் 8 மணி நேர வேலை நாளை உறுதி செய்தன. எதிர்ப்பேதுமின்றி உழைக்கும் வர்க்கம் அதனைச் சாதித்துவிட வில்லை. கடுமையான அடக்கு முறைகளை எதிர்கொண்டு எண்ணிறந்த தொழிலாளரின் உயிர்த் தியாகத்தின் விளைவாகவே அது சாதிக்கப்பட்டது.  அதன்மூலம் அடக்குமுறைகளால் உழைக்கும் வர்க்கத்தை நிரந்தரமாக ஒடுக்கிவிட முடியாது என்பது வரலாற்றின் படிப்பினையாகியது.


வேலை நேரம், சம்பள உயர்வு, வேலைச் சூழ்நிலையில் மேம்பாடு போன்றவற்றை வலியுறுத்தும் தொழிற்சங்க அமைப்புகள் முதலில் ஆலை ரீதியிலும் அதன் பின் துறை சார்ந்தும் தோன்றின. உலகெங்கும் பல்கிப் பெருகிய வர்க்கப் போராட்டங்கள் அறிவுத்துறையிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. சமூக செல்வமனைத்தையும் தங்களது உழைப்பால் உருவாக்கும் சமூகத்தின் மிகப் பெரும்பான்மையானதாக வளர்ந்த உழைக்கும் வர்க்கம் எதிர்கொண்ட பிரச்னைகளைத் தீர்ப்பதெப்படி என்ற கேள்விக்கு விடை தேடப்பட்டது. அதற்கானதொரு விடையாகக் கற்பனாவாத சோசலிசம் தோன்றியது. மேட்டுக்குடி மக்களின் உழைக்கும் வர்க்கத்தின் மீதான அனுதாபத்தையும், பரிவுணர்வையும் அடிப்படையாகக் கொண்டதாக அக்கண்ணோட்டம் இருந்தது.

உடைமை வர்க்கங்கள் உபதேசங்களினால் உற்பத்தி சாதனங்களைச் சமூகமயமாக்க முன்வராது என்பதை உணராதிருந்ததால் அது வெறும் கற்பனையாகவே போனது. அந்தப் பின்னணியில் ஐரோப்பிய நாடுகளில் தோன்றி வளர்ந்த இயக்கவியல் சிந்தனைப் போக்கு அறிவுத் துறையின் அடிப்படையினையே மாற்றியது. சமூக அமைப்பின் அடிப்படை முரண்பாடாக வடிவெடுத்துள்ள வர்க்க முரண்பாடு அளவு ரீதியாக வளர்ந்து ஒரு கட்டத்தில் குணாம்ச ரீதியான மாற்றத்தை அதாவது உழைக்கும் வர்க்கம் சமூகத்தில் ஆளும் சக்தியாக ஆகும் மாற்றத்தைச் சாதிக்கும் என்ற கண்ணோட்டம் உருவெடுத்தது. அதாவது சோசலிச ரீதியிலான சமூக மாற்றம் வரலாற்றில் தவிர்க்கவியலாத விதி; அந்த மாற்றத்தை செயல்படுத்தவல்ல வர்க்கம் உழைக்கும் வர்க்கமே என்ற இயக்கவியல் பொருள்முதல்வாதக் கண்ணோட்டம் தலைதூக்கியது.

தொழிற்சங்கங்களை வழிநடத்தும் கண்ணோட்டமாக அது ஆகி பாட்டாளி வர்க்கத்தின் முதலாளித்துவ நுகத்தடியிலிருந்தான விடுதலையைச் சாதிக்கவல்லதாக ஆகியது. அதன் வழிகாட்டுதலின் கீழ் உலகம் முழுவதும் உழைக்கும் வர்க்க இயக்கங்கள் வளர்ந்தன. முதல் சோசலிச நாடாக சோவியத் யூனியனும் உருவானது. அதனையயாட்டி உலகின் மூன்றில் ஒரு பங்கு நாடுகள் சோசலிச நாடுகளாக மாறி ஒரு சக்தி வாய்ந்த சோசலிச முகாம் உருவாகியது.

அத்தகைய மகத்தான சாதனைகளை மார்க்ஸ், எங்கெல்ஸ் ஆகிய மாமேதைகளின் வழியில் நின்று நிகழ்த்திக் காட்டிய லெனின், ஸ்டாலின் மறைவிற்குப் பின்பு பாட்டாளி வர்க்கத்தின் வழிகாட்டும் தத்துவத்தைச் செழுமைப் படுத்தும் போக்கிலும் சமூக நிகழ்வுகளை உன்னிப்பாகக் கவனித்து தோன்றும் மாற்றங்களுக்கு உகந்த வகையில் வழிமுறைகளை வகுப்பதிலும் கோளாறுகள் ஏற்பட்டன. அதன் விளைவாக வர்க்க சமரசப் போக்கும் நாடாளுமன்ற வாதமும் கம்யூனிஸ்ட் கட்சிகளில் தோன்றி படிப்படியாக அக்கட்சிகளின் அடிப்படையையே சீரழித்து அவற்றை வர்க்க சமரசப் பாதைக்கு இட்டுச் சென்றன. இந்தப் போக்கினை நன்கு பயன்படுத்திக் கொண்ட முதலாளித்துவ சக்திகள் தங்கள் நாடுகளில் உழைக்கும் வர்க்க இயக்கத்தை முடமாக்கியதோடு சோசலிச முகாமில் இருந்த நாடுகளிலும் எதிர்ப்புரட்சிப் போக்குகளை ஊக்குவித்தன. அதன் விளைவாக சோவியத் யூனியனிலும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் சோசலிசம் வீழ்ச்சி கண்டது. அந்தப் பின்னணியில் பாட்டாளி வர்க்கத்தின் மீதான முதலாளித்துவத்தின் கொடும் தாக்குதல் மறுபடியும் தலைதூக்கியது. வேலைக்கு அமர்த்து, சோர்வடையும் வரை சுரண்டு, தனக்குப் பயன்படாத சூழ்நிலையில் தூக்கியயறி என்ற கொள்கை முதலாளித்துவ நிறுவனங்களால் முழுவீச்சுடன் கடைப்பிடிக்கப்பட்டது. அதன் விளைவாகத் தொழிலாளி வர்க்கம் தனது போராட்டத்தால் சாதித்துப் பெற்ற அனைத்துப் பலன்களும் ஒன்றன்பின் ஒன்றாகப் பறிபோய்விட்டன. 8 மணி நேர வேலைநாள் என்ற நியதியும் வெகு வேகமாகப் பறிபோய்க் கொண்டுள்ளது.

இந்த எதிர்மறை வளர்ச்சிப் போக்குகள் உழைப்பாளர் மத்தியில் தோற்றுவித்துள்ள அவநம்பிக்கையும் மாற்று எதுவும் இல்லை என்ற மனப்போக்கும் பரந்த அளவில் தொழிலாளர் மத்தியிலும் முதலாளித்துவ சிந்தனைகளை ஊக்குவித்து வளர்த்து வருகின்றன. கலாச்சார அரங்கில் கம்யூனிஸ இயக்கம் ஆற்றத்தவறிய கடமைகளின் காரணமாக முதலாளித்துவ லாப நோக்கக் கலாச்சாரமே சமூகம் முழுவதற்குமான ஒரே கலாச்சாரம் என்று ஆகியுள்ள சூழ்நிலை இத்தகைய முதலாளித்துவ லாப நோக்கப் போக்குகள் தொழிலாளரிடையே தோன்றி வளர்வதைச் சாத்தியம் ஆக்கியுள்ளது. நமது நாட்டின் முதலாளித்துவ மத்திய, மாநில அரசுகள் இந்தப் பின்னணியில் இலவசத் திட்டங்களை அறிவித்து உழைக்கும் வர்க்கத்தை இலவசங்களுக்காக ஏங்கும் வர்க்கமாக தரம் தாழ்த்தியுள்ளன.

எத்தனை தகிடுதத்த வேலைகளை மேற்கொண்டாலும் அதனைத் தவிர்க்க முடியாமல் சூழ்ந்திருக்கும் நெருக்கடியிலிருந்து முதலாளித்துவம் தப்பிக்கவே முடியாது. முதலாளித்துவச் சந்தை நெருக்கடி முற்றிய நிலையில் அதிலிருந்து தப்பிப்பதற்காக அது உருவாக்கிய உலகமயம் உலகம் முழுவதிலும் முதலாளித்துவம் அதன் வரையறைக்குட்பட்டு எத்தகைய அதிகபட்ச வளர்ச்சியைக் கொண்டுவர முடியுமோ அதனைக் கொண்டுவந்துவிட்டது. இப்போது ஏறக்குறைய எந்தப் பின்தங்கிய நாட்டையும் பயன்படுத்தி முதலாளித்துவம் அதன் லாப வேட்கையை தணித்துக் கொள்ள முடியாது என்ற சூழ்நிலை தோன்றியுள்ளது. அதன் விளைவாகவே உலகம் முழுவதிலும் முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டப் பேரலைகள் பொங்கியயழுந்து கொண்டிருக்கின்றன. உலக அளவில் ஒட்டுமொத்த சமூக மாற்றத்திற்கான புறச் சூழ்நிலை கனிந்துள்ளது. ஆனால் அதனைச் செய்து முடிக்கத் தேவையான பாட்டாளி வர்க்கக் கட்சியின் வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள தேக்கம் முதலாளித்துவத்தின் வாழ்நாள் நீட்டிக்கப்படுவதற்கான வாய்ப்பினை வழங்கிக் கொண்டுள்ளது.

இச்சூழ்நிலைகளைக் கணக்கில் எடுத்துக் கொண்டு உண்மையான பாட்டாளி வர்க்க கட்சியைக் கட்டியமைக்கும் பாதையில் உழைக்கும் வர்க்கக் கலாச்சாரத்தை வளர்த்தெடுப்பதிலும் அயர்வின்றி வர்க்கப் போராட்டங்களை வலுப்படுத்துவதிலும் வளர்ந்துவரும் சூழ்நிலைகளுக்கு ஏற்ற வகையிலும் செழுமைப்படுத்தி அந்த வெளிச்சத்தில் உழைக்கும் வர்க்க இயக்க வழிமுறைகளை வடிவமைப்பதிலும் முனைப்புடன் உணர்வுபெற்ற உழைக்கும் வர்க்கம் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். அதனை முழு ஈடுபாட்டுடன் செய்ய முன்வருமாறு மேதினம் அனுஷ்டிக்கும் இவ்வேளையில் உழைக்கும் வர்க்க அணிகளை அறைகூவி அழைக்கிறோம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முகப்பு

புதிய பதிவுகள்