ஞாயிறு, 6 மே, 2012

உலகம் முழுவதும் கூடுதல் உற்சாகத்துடன் மே தின ஊர்வலங்கள்
மே 1 தொழிலாளர் தினம் வழக்கத்தை விட இந்த ஆண்டு உற்சாகத்துடன் நடைபெற கூடுதல் காரணங்கள் உண்டு கடந்த சில ஆண்டுகளாகவே முதலாளித்துவ உலகம் ஆட்டம் காணத் தொடங்கிவிட்டது. முதலாளித்துவத்தின் சொர்க்கபுரி என்று நேற்றுவரை பீற்றிக் கொண்டு இருந்த அமேரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் பல முதலாளித்துவ நிறுவனங்களும்  , வங்கிகளும் திவாலாயின. அமெரிக்கா உலகிலையே அதிகம் கடன் வாங்கிய கடன்கார நாடாக ஆகிவிட்டது.


 கிரீஸ் உட்பட பல ஐரோப்பிய நாடுகளின் அரசுகள் திவாலாகும் நிலைக்கு தள்ளப்பட்டது. இந்த அனைத்து நாடுகளுமே தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் பென்சன் திட்டத்திலும் , கல்விமானியம்,  மருத்துவ காப்பீடுகளிலும் கை வைக்க துவங்கின.இந்தியாவில் ஏற்கனவே பழைய பென்சன் முறை மாற்றப்பட்டுவிட்டது.  இந்த நாட்டின் வேலைவாய்ப்புகள் இந்தியா ,பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளுக்கு அவுட் சோர்சிங் முறையின் மூலம் வழங்கப்பட்டு வருவதால் வேலையில்லாத் திண்டாட்டம் அங்கு  பெருகி வந்தது. 

தங்கள் நிராதரவற்ற நிலையில் விடப்பட்டு இருப்பதை உணர்ந்த உழைக்கும் மக்கள் தெருக்களில் இறங்கி கடந்த ஆண்டுகளில் போராட துவங்கினர். வால் ஸ்ட்ரீட் போராட்டம் , லண்டன், கிரீஸ் , பிரான்ஸ் போன்ற ஐரோப்பிய நாடுகளில் நடைபெற்ற போராட்டம் ,ரசியாவில் ஊழல் மன்னன் புதினுக்கு எதிராக நடந்த போராட்டம் ஆகியவை உலக தொழிலாளர் வர்க்கத்தை கம்யூனிசத்தின் பக்கம் வரும்படி செய்தது. அதனால் பல நாடுகளில் கடந்த ஆண்டுகளில் பெயரளவிற்கு நடைபெற்று வந்த மே தின ஊர்வலங்கள் கூட இந்த ஆண்டு கூடுதல் உற்சாகத்தோடு முதலாளித்துவ அரசுகளின் தடைகளை மீறி நடைபெற்றது.  

இஸ்லாமிய மத வெறியை தூண்டி விட்டு அதன் மூலம் உழைக்கும் மக்களை சுரண்டி வந்த அரபு நாடுகளிலும் மே தின ஊர்வலங்கள் நடத்தப்பட்டன. ஈரானில் சனன்டஜ் நகரில் அடிப்படைமதவாதிகள் ,அரசு ஆகியவற்றின் எதிர்ப்பை மீறி மிகப்பெரிய பேரணி நடத்தி ,இஸ்லாமிய அடிப்படை வாதத்திற்கு மரண அடி கொடுத்துள்ளனர் ஈரானிய உழைக்கும் மக்கள் . துருக்கி இஸ்தான்புல்லில் மாபெரும் மே தின ஊர்வலம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. அதை சகிக்க முடியாத காவல் துறை கூட்டத்தில் புகுந்து வன்முறைக்கு வித்திட்டது. உலகிலையே அதி உன்னத ஜனநாயக நாடு என்று தன்னை பற்றி பெருமைப்பட்டு கொள்ளும் அமெரிக்காவில் மே தின பேரணிக்கு பல நகரங்களில் தடை விதிக்கப்பட்டது. தடையை மீறி ஊர்வலம் செல்ல முயன்றவர்களை அடித்து நொறுக்கி கைது செய்தது அமெரிக்காவின் காவல் துறை. ஆனாலும் தடையை மீறி பல நகரங்களில் வெற்றிகரமாக ஊர்வலங்கள் நடத்தப்பட்டது. தேர்தல் முறைகேடுகள் , புதினின் ஊழல் ஆகியவற்றிற்கு   எதிராக கடந்த வருடங்களில் திரண்ட ரசியாவின் உழைக்கும் வர்க்கம் இந்த மே தினத்தில் லெனின் , ஸ்டாலின் படங்களை ஏந்தியவாறு மிகப்பெரிய ஊர்வலத்தை மாஸ்கோவில் நடத்தினர். முதலாளித்துவ மாயையிலிருந்து வெளிவந்திருந்த கனடாவின் உழைக்கும் மக்கள் பெருந்திரளாக ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.பங்களாதேஷிலும் அதிக அளவில் பெண் தொழிலாளர்கள் பங்கேற்ற மிகப்பெரிய ஊர்வலம் டாக்காவில் நடத்தப்பட்டது.  இவ்வாறு உலகம் முழுவதும் மே தின ஊர்வலங்கள் கூடுதல் உற்சாகத்தோடு நடத்தப்பட்டது.

உழைக்கும் மக்களால் தான் இந்த உலகம் இயக்கப்பட்டு கொண்டிருக்கிறது. ஆனால் 99 % மக்களின் உழைப்பினை சுரண்டி 1 % கூட்டம் உண்டு மகிழ்ந்து அதிகாரம் செய்து வருகிறது. உழைக்கும் மக்கள் உணராத வகையில் அவர்களிடையே பிரிவினையை வளர்த்தும் ,கலாச்சார ரீதியாக அவர்களை சீரழித்தும்,  தனிநபர் வாத சிந்தனைகளை அவர்களுக்கு ஊட்டியும் , தனக்கு எதிராக அவர்கள் திரண்டெழாத வகையில் பல தடைகளை உருவாக்கி தனது சுரண்டலை வெற்றிகரமாக செய்து வருகிறது முதலாளித்துவம். ஆனால் அந்த முதலாளித்துவமே இன்று மீளா முடியாத நெருக்கடியில் சிக்கி தனது வாழ்நாளை எண்ணிக்  கொண்டுள்ளது. அதன் கொடிய கோர முகத்தை உலகம் முழுவதும் உள்ள தொழிலாளி வர்க்கம் படிப்படியாக உணர்ந்து வருகிறது. 

உலகம் முழுவதுமுள்ள உழைக்கும் மக்கள் முதலாளித்துவத்திற்கு மரண அடி கொடுக்க தயாராகி வருவதையே இந்த மே தின ஊர்வலங்கள் பறை சாற்றுகின்றன. உழைக்கும் மக்களுக்கான விடியல் வெகுதொலைவில் இல்லை என்பது உறுதி. ஓங்குக தொழிலாளர் ஒற்றுமை. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முகப்பு

புதிய பதிவுகள்