வெள்ளி, 9 செப்டம்பர், 2011

தற்கொலை செய்து கொள்வது ஒரு கோழைத்தனம் - பகத்சிங்



விசாரணை என்ற பெயரில் பிரிட்டிஷ் அரசாங்கம் நடத்திய சிறப்பு நீதிமன்ற நாடகத்தில் விசாரணைக் காட்சிகள் முடிவடைந்தன.  புரட்சியாளர்கள் பகத்சிங்கும் அவரது தோழர்களும் தீர்ப்புக்காக காத்திருந்தனர்.  ஒரு நாள் தோழர்கள் சிறையில் ஒருவருக்கொருவர் சந்தித்துக் கொண்ட போது யார், யாருக்கு என்ன தண்டனை வழங்கப்படும் என்ற விவாதம் நடந்தது.  தனக்கு  ஆயுள் தண்டனை வழங்கப்படலாம் என்று சுகதேவ் எதிர்பார்த்தார்.  ஆனால் ஆயுள் தண்டனைக் கைதியாக 20 ஆண்டுகள் சிறையில் காலம் கழிப்பதை அவர் விரும்பவில்லை.  இது குறித்து அவர் சிறைக்குள் பகத்சிங்கிற்கு ஒரு கடிதம் எழுதினார்.  
சுகதேவ் தனது கடிதத்தில் தனக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டால் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக எழுதியிருந்தார்.  ஒன்று, தனக்கு தூக்குத்தண்டனை வழங்கப்பட வேண்டும் ; இல்லாவிட்டால் விடுதலை செய்யப்பட வேண்டும்.  இரண்டுக்கும் இடைப்பட்ட தண்டனை எதிலும் தனக்கு உடன்பாடில்லை என்று அவர் கூறியிருந்தார்.  

அக்கடிதத்திற்கு பகத்சிங் பின்வரும் பதில் கடிதம் எழுதினார். 
............................................................................................................................................


தற்கொலை பற்றி சுகதேவுக்கு பகத்சிங் கடிதம்

அன்புள்ள சகோதரனே,

உன்னுடைய கடிதத்தை மிகுந்த கவனத்துடன் பல முறை படித்து விட்டேன்.  மாறிய சூழ்நிலை நம்மை வெவ்வேறு விதத்தில் பாதித்துள்ளது என்பதை உணர்ந்து கொண்டேன்.  வெளியே இருக்கும் போது நீ வெறுத்து ஒதுக்கிய விஷயங்கள் இப்பொழுது உனக்கு அவசியமானவையாக மாறிவிட்டன.  அதே போன்று, வழக்கமாக நான் உறுதியுடன் ஆதரிக்கும் விஷயங்கள் எனக்கு எந்த முக்கியத்துவமும் அற்றதாய் ஆகிவிட்டன.  

உதாரணமாக, தனிப்பட்ட காதலில் நான் நம்பிக்கை வைத்திருந்தேன்.  ஆனால் இப்பொழுது அந்த உணர்வு எனது மனதிலும் நினைவிலும் குறிப்பான இடம் எதனையும் பெற்றிருக்கவில்லை.  வெளியில் இதனை நீ கடுமையாக எதிர்த்தாய்.  ஆனால் இன்று அதனைப் பற்றிய உனது கருத்தில் தலைகீழான தீவிர மாற்றம் வெளிப்படையாய் தெரிகிறது.  மனித வாழ்க்கையின் அதிமுக்கியத்துவம் வாய்ந்த பகுதியாய் அதனை நீ உணர்கிறாய்.  அந்த உணர்வில் தனியானதொரு வகை இன்பத்தையும் நீ காண்கிறாய்.
ஒரு நாள் தற்கொலையைப் பற்றி உன்னிடம் நான் விவாதித்தேன்.  அதனை இப்பொழுதும் கூட நினைவுபடுத்திப் பார்க்க முடியும்.  அப்போது நான், சில சூழ்நிலையில் தற்கொலை நியாயப்படுத்தப்படக் கூடியதாக இருக்கலாம் என்று கூறினேன்.  ஆனால் எனது கருத்திற்கு நீ எதிர்ப்புத் தெரிவித்தாய்.  நாம் பேசிக் கொண்டிருந்த இடமும் நேரமும் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது.  ஷாகன்ஷாஹி குடியாவில் ஒரு மாலைப் பொழுதில் இதனைப் பற்றி நாம் பேசிக் கொண்டிருந்தோம்.  அத்தகையதொரு கோழைத் தனமான செயலை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது என்று நீ இகழ்ந்து கூறினாய்.  இது போன்ற செயல்கள் கோரமானவை என்றும் கொடுமையானவை என்றும் கூறினாய்.  

ஆனால், இப்பொழுதோ இந்த விஷயத்தில் நீ தலைகீழாய் மாறியிருப்பதை நான் பார்க்கிறேன்.  இப்பொழுது, சில சூழ்நிலைகளில் தற்கொலை ஏற்றுக் கொள்ளத்தக்கதே என்பதாக மட்டுமல்ல, அது தவிர்க்க முடியாததாகவும் - ஏன் அவசியமான தாகவும் கூட நீ பார்க்கிறாய். முன்பு நீ என்ன கருத்து வைத்திருந் தாயோ அதுவே இன்று என்னுடையது.  அதாவது, தற்கொலை என்பது ஒரு கொடுமையான குற்றம்.  அது முழுக்க முழுக்க ஓர் கோழைத்தனமான செயல்.  புரட்சியாளர்களை விடு, எந்தவொரு தனிமனிதனும் அத்தகைய செயலை ஒரு போதும் நியாயப்படுத்த முடியாது.

துன்பப்படுவதன் மூலம் மட்டுமே எவ்வாறு நாட்டிற்கு சேவை செய்ய முடியும் என்பது புரியவில்லை என்று நீ கூறுகிறாய்.  உன்னைப் போன்ற ஒருவரிடமிருந்து வரும் இத்தகைய கேள்வி உண்மையிலேயே என்னைத் திகைப்படையச் செய்கிறது.  ஏனெனில், “சேவையின் மூலமாக துன்பப்படுவதற்கும்  தியாகம் செய்வதற்கும்” - என்ற நவஜவான் பாரத் சபாவின் குறிக்கோளில் எத்தனை தீர்க்கமான சிந்தனையுடன் நாம் பற்றுக் கொண்டிருந்தோம்.  எவ்வளவு முடியுமோ அவ்வளவு சேவையை நீ செய்து விட்டாய் என்றே நான் நினைக்கிறேன்.  நீ செய்த சேவைக்காக துன்பத்தை அனுபவிக்க வேண்டிய நேரம் இப்போது வந்துள்ளது.  அத்துடன் மக்கள் அனைவரையும் நீ வழி நடத்திச் செல்ல வேண்டிய மிகச் சரியான தருணமும் இதுவே.
மனிதன், தனது செயலில் நியாயம் இருப்பதாக உறுதியாக நம்பினால் மட்டுமே அச்செயலைச் செய்கிறான்.  நாம் சட்ட மன்றத்தில் வெடிகுண்டுகள் வீசியதைப் போல. அச்செயலுக்குப் பிறகு, அச்செயலுக்கான விளைவுகளை தாங்க வேண்டிய நேரம் இது.  கருணை காட்டுமாறு மன்றாடுவதன் மூலம் தண்டனையில் இருந்து தப்பிக்க நாம் முயற்சித்திருந்தால், நாம் இன்னும் அதிகப்படியாக நியாயப்படுத்தப் பட்டிருப்போம் என்று நீ நினைக்கிறாயா ?  இல்லை.  அது மக்கள் மத்தியில் எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தியிருக்கும்.  இப்பொழுது நமது பெருமுயற்சியில் நாம் முழுவெற்றியை அடைந்துள்ளோம்.
நாம் சிறையிலடைக்கப்பட்ட நேரத்தில், நமது கட்சியைச் சேர்ந்த அரசியல் கைதிகளின் நிலைமை மிகவும் மோசமாக இருந்தது.  அதனை மேம்படுத்த நாம் முயற்சித்தோம்.  (உண்ணா விரதத்தின் உச்சகட்டத்தில்)  நாம் மிக விரைவில் சாகப் போகிறோம் என்றே நாம் நம்பினோம் என்று நான் உளமாறக் கூறுகிறேன்.  வலுக்கட்டாயமாக உணவு புகட்டும் முறை பற்றி நமக்கு தெரியவும் செய்யாது.  அதனை நாம் ஒரு போதும் நினைத்ததும் கிடையாது.  நாம் சாவதற்குத் தயாராக இருந்தோம்.  ஆனால் இதன் மூலம் நாம் தற்கொலை செய்து கொள்ள எண்ணியிருந்தோம் என்று நீ சொல்கிறாயா ? இல்லை.  உயர்ந்த இலட்சியத்திற்காக ஒருவரது உயிரை வருத்துவதும் தியாகஞ் செய்வதும் ஒரு போதும் தற்கொலை ஆகாது.  நமது தோழர் ஜடிந்த்ர நாத் தாஸின் மரணத்தில் நாம் பொறாமைப் படுகிறோம்.  அதனை நீ தற்கொலை என்று கூறுவாயா ? இறுதியாக நாம் பட்ட கஷ்டங்களுக்கு பலன் கிடைத்தது.  நாடு முழுவதும் மிகப் பெரிய போராட்டம் துவங்கியது.  நம்முடைய நோக்கத்தில் நாம் வெற்றி பெற்றோம்.  இந்த வகையான போராட்டத்தில் ஏற்படும் மரணம் என்பது ஓர் இலட்சிய மரணம்.
இது தவிர, நமது தோழர்களில் தமக்கு மரணதண்டனை வழங்கப்படும் என்று நம்பும் தோழர்கள், தண்டனை அறிவிக்கப் பட்டு அவர்கள் தூக்கிலிடப்படும் நாள் வரையிலும் பொறுமையாக காத்திருக்க வேண்டும்.  இந்த மரணமும் கூட மனநிறைவானதே.  ஆனால் தற்கொலை செய்து கொள்வது சில துன்பங்களை தவிர்ப்பதற்காக தனது வாழ்நாளை சுருக்கிக் கொள்வது - ஒரு கோழைத்தனம்.  தடைகளே ஒரு மனிதனை முழுமையானவனாக்கு கின்றது என்பதை நான் உனக்குச் சொல்ல விரும்புகிறேன்.  நீயோ நானோ இன்னும் சரியாகச் சொன்னால் நம்மில் எவருமே, எந்தவொரு துன்பத்தையும் இதுவரையிலும் அனுபவித்ததில்லை.  நமது வாழ்க்கையின் அந்தப் பகுதி இப்பொழுதுதான் துவங்கியுள்ளது.
இரஷ்ய இலக்கியத்தில் காணப்படும் - நம்முடைய இலக்கியத்தில் எங்குமே காணப்படாத - யதார்த்த வாதம் பற்றி நாம் பலமுறை பேசியதை நீ நினைவு கூர முடியும்.  அவர்களது கதைகளில் வரும் துன்பியல் சூழ்நிலைகளை வெகுவாக பாராட்டுகிறோம்.  ஆனால் அத்துன்ப உணர்வை நமக்குள் நாம் உணர்வதில்லை.  அவர்களது துன்ப உணர்ச்சியையும் அவர்களது கதாபாத்திரங் களின் அசாதாரண உயர்நிலையையும் நாம் வியந்து போற்றவும் செய்கிறோம்.  ஆனால் அதன் காரணத்தை கண்டறிவது பற்றி நாம் ஒருபோதும் கவலைப் படுவதில்லை.  துன்பத்தைத் தாங்கிக் கொள்ளும் அவர்களின் மனவுறுதியே அவர்களது இலக்கியத்தில் ஒரு தீவிரத்தையும் துன்புறும் வேதனையினையும் தருகிறது என்றே நான் சொல்வேன்.  அதுவே அவர்களது கதாபாத்திரங்களுக்கும் இலக்கியத்திற்கும் பெருஞ்செறிவையும் உயர்ந்த இடத்தையும் அளிக்கிறது. 

இயற்கையின்பாற்பட்ட அல்லது உறுதியான அடிப்படை ஏதுமின்றி, பகுத்தறிவிற்குப் புறம்பான, இறையுள் அடக்கம் தேடும் கோட்பாட்டை நமது வாழ்வில் ஏற்றுக் கொள்ளும் போது, நாம் ஏளனத்திற்கும் கேலிக்கும் உரியவர்களாகி விடுகிறோம்.  எல்லாவிதத்திலும் புரட்சியாளர்களாய் இருப்பதில் பெருமைப்பட்டுக் கொள்ளும் நம்மைப் போன்றவர்கள்,  நம்மால் துவக்கப்பட்ட போராட்டங்களின் மூலம் நமக்கு நாமே வரவழைத்துக் கொண்ட கஷ்டங்கள், கவலைகள், வேதனைகள் துன்பங்கள் அனைத்தையும் தாங்கிக் கொள்வதற்கு எப்பொழுதும் தயாராய் இருக்க வேண்டும்.  அதனாலேயே நாம் நம்மை புரட்சியாளர்கள் என்று கூறிக் கொள்கிறோம்.

மிகப் பெரும் சமூகப் பாடமாகிய குற்றத்தையும் பாவத்தையும் பற்றி அனுபவப் பூர்வமாய் படிப்பதற்கான வாய்ப்பை ஒருவர் சிறையிலேயே, சிறையில் மட்டுமே பெறமுடியும் என்று நான் உனக்குச் சொல்ல விரும்புகிறேன்.  இது பற்றிய சில இலக்கியங்களை நான் படித்தேன்.  இத்தகைய தலைப்புகள் பற்றி சுய விசாரணை செய்து கொள்வதற்கு ஏற்ற இடம் சிறைச்சாலையே. ஒருவரது சுய விசாரணையின் மிகச் சிறந்த பகுதியே அவர் துன்பத்திற்கு ஆளாவதுதான்.

இரஷ்யச் சிறைச்சாலைகளில் அரசியல் கைதிகள் அனுபவித்த துன்பங்களே, ஜாரின் ஆட்சி தூக்கியெறியப்பட்ட பின்னர் சிறை நிர்வாகத்தின் புரட்சிகரமான மாறுதல்களுக்கு முக்கியக் காரணமாக இருந்தது என்பதை நீ அறிவாய்.  இந்தியாவிற்கும் அது போல சிறைகளில் உள்ள பிரச்சனைகளைப் பற்றி முழுமையாக அறிந்த, அவற்றில் நேரடியான அனுபவம் பெற்றவர்கள் தேவைப்படவில்லையா ? வேறு யாரேனும் ஒருவர் அதனைச் செய்வார்கள் என்றோ, அதனைச் செய்வதற்கு மற்றவர்கள் பல பேர் இருக்கின்றார்கள் என்றோ கூறுவது போதுமானதாய் இருக்காது.  எனவே, புரட்சியின் பொறுப்புக்களை அடுத்தவர்கள் தோள் மீது சுமத்துவது முற்றிலும் நேர்மையற்றது என்றும் வெறுக்கத்தக்கது என்றும் கருதுபவர்கள், தற்போதிருக்கும் அமைப்பு முறைக்கு எதிரான போராட்டத்தை முழு ஈடுபாட்டுடன் துவக்க வேண்டும்.  இந்தச் சட்ட வரம்புகளை அவர்கள் தகர்த்தெறிய வேண்டும்.   ஆனால் அவர்களது செயலின் நடைமுறைப் பொருத்தத்தையும் அவர்கள் மனதிற்கொள்ள வேண்டும்.  ஏனென்றால், அவசியமற்ற, தவறான முயற்சிகள் ஒருபோதும் நியாயமானவையாக கருதப்படுவதில்லை.  அத்தகைய கிளர்ச்சிகள் புரட்சியின் இயல்பான வளர்ச்சியை வெட்டிக் குறுக்கவே செய்யும். 

இந்த இயக்கங்களில் இருந்து உன்னைத் தனிமைப்படுத்திக் கொள்வதற்காக நீ கூறும் வாதங்கள் அனைத்தும் என்னால் புரிந்து கொள்ள முடியாதவையாகவே உள்ளன.  நமது நண்பர்களில் சிலர் அப்பாவிகளாகவோ, அறியாமைக்குரியவர்களாகவோ இருக் கின்றனர்.  அவர்களுக்கு உன்னுடைய நடத்தைகள் வழக்கத்திற்கு விரோதமாகவும் புரிந்து கொள்ள முடியாதவையாகவும் இருப்பதாக உணர்கின்றார்கள்.  (நீ, அவர்களின் புரிந்து கொள்ளும் உணர்வு மட்டத்தை விட மேலான இடத்திலும் வெகு உயரத்திலும் இருப்பதால் தங்களால் உனது நடத்தைகளை புரிந்து கொள்ள முடியாது என்று அவர்கள் தமக்குத் தாமே சமாதானம் சொல்லிக் கொள்கின்றனர்).
சிறை வாழ்க்கை உண்மையிலேயே தன்மானத்திற்கு இழுக்கேற்படுத்துவதாக இருக்கிறது என்று நீ கருதினால், கிளர்ச்சிகள் மூலம் அந்த நிலையை மேம்படுத்துவதற்கு நீ ஏன் முயற்சி செய்யக் கூடாது ?  ஒரு வேளை, இந்தப் போராட்டத்தால் ஒரு பயனும் விளையாது என்று நீ கூறலாம்.  ஆனால் இந்த வாதம், ஒவ்வொரு இயக்கத்திலும் அதில் பங்கெடுப்பதை தவிர்ப்பதற்காக, பலவீனமான மனிதர்களால் நொண்டிச் சாக்காக முன் வைக்கப்படும் வழக்கமான அதே வாதம் தான்.  இது, சிறைக்கு வெளியே புரட்சிகர இயக்கங்களில் சிக்கிக் கொள்வதில் இருந்து தப்புவதிலேயே அக்கறையாக இருப்பவர்களிடமிருந்து நாம் கேட்டுக் கேட்டு சலித்துப் போன அதே பதில்தான்.  அதே வாதத்தை இன்று உன்னிடமிருந்தே நான் கேட்கலாமா ?  நமது கட்சியின் மாபெரும் குறிக்கோளோடும் கொள்கைகளோடும் ஒப்பிடுகையில் விரல் விட்டு எண்ணிவிடக் கூடிய வெகு சிலரை மட்டுமே கொண்ட நமது கட்சியால் என்ன செய்துவிட முடியும் ? அப்படியானால், நமது வேலையை முழுமையாக துவக்கியதன் மூலம் நாம் இமாலயத் தவறு செய்து விட்டோம் என்று நாம் இதிலிருந்து அனுமானிக்கலாமா ?  இல்லை இத்தகைய அனுமானங்கள் தவறானவையாகவே இருக்கும்.  இது போன்று சிந்திக்கும் மனிதனின் உள்ளார்ந்த பலவீனத்தைக் காட்டுவதாக மட்டுமே இது இருக்கும்.

மேலும், “ஒருவர், பதினான்கு ஆண்டுகள் சிறையில் துன்பங்களை அனுபவித்த பின்னரும் சிறை செல்வதற்கு முன்னர் தான் கொண்டிருந்த அதே சிந்தனையையே கொண்டிருப்பார் என்று எதிர்பார்க்க முடியாது.  ஏனென்றால், சிறைவாழ்க்கை அவரது கொள்கைகள் அனைத்தையும் அழித்துவிடும்” என்று நீ எழுதியிருந்தாய்.  சிறைக்கு வெளியே உள்ள சூழ்நிலை நமது கொள்கைகளுக்கு சிறிதளவாவது இதைக்காட்டிலும் சாதகமான தாக இருக்கிறதா என்று நான் உன்னைக் கேட்கலாமா ?  அப்படியிருந்தும் நாம் மனம் தளர்ந்து நமது கொள்கைகளை கைவிடவா செய்து விட்டோம் ?  இல்லையென்றால், நாம் களத்தில் இறங்கவேயில்லை, புரட்சிப் பணி எதுவும் செய்யப்படவேயில்லை என்று மறைமுகமாக குறிப்பிடுகின்றாயா ?  இதுதான் உனது கருத்து எனில், நிலவும் சூழலை மாற்றுவதில் ஓரளவிற்கு உதவிகரமாகவும் இருந்துள்ளோம் என நீ கூறுவது சரியானதாக இருந்தாலும், மொத்தத்தில் நீ தவறாகவே மதிப்பீடு செய்துள்ளாய்.  ஆனால் நண்பனே ! நாம் நமது காலத்தின் தேவையால் உருவாக்கப் பட்டவர்களே.
கம்யூனிசத்தின் தந்தை எனப்படும் மார்க்ஸ், உண்மையில் கம்யூனிசக் கொள்கைகளை உருவாக்கவில்லை என்று கூட நான் சொல்வேன்.  ஐரோப்பாவில் ஏற்பட்ட தொழிற்புரட்சியே இம்மாதிரியான பலரை உருவாக்கியது.  அவர்களுள் ஒருவராக மார்க்ஸ் இருந்தார்.  ஆனால், அவரது காலத்தின் சக்கரத்தை ஒரு குறிப்பிட்ட வழியில் முடுக்கி விடுவதற்கு அவரும் ஒரு கருவியாக இருந்தார் என்பதில் எவ்வித சந்தேகத்திற்கும் இடமில்லை.

நமது நாட்டில் சோசலிஸ, கம்யூனிசக் கொள்கைகளை நான் தோற்றுவிக்கவில்லை.  நீயும் தான்.  நாம் வாழும் காலகட்டமும், சூழலும் நம் மீது ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவே இக்கொள் கைகள்.  இக்கொள்கைகளை பரப்புவதற்கு நாம் கொஞ்சம் உழைத்திருக்கிறோம் என்பதில் ஐயமில்லை.  எனவே, ஒரு கடினமான பொறுப்பை ஏற்கனவே நாம் ஏற்றுக் கொண்டு விட்டதால், தொடர்ந்து அதனை நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.  துன்பங்களில் இருந்து தப்பிச் செல்வதற்காக நாம் செய்யும் தற்கொலைகளால் மக்கள் வழிநடத்தப்படக் கூடாது.  மாறாக, அது முழுக்க முழுக்க ஓர் பிற்போக்கான நடவடிக்கை யாகவே இருக்கும்.

ஏமாற்றங்களும், நிர்ப்பந்தங்களும், சிறைச் சட்டங்களால் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளும் நிறைந்த சோதனையான சூழ்நிலைகளையும் பொருட்படுத்தாமல் நமது செயல்பாட்டை தொடர்ந்தோம்.  நாம் செயல்பட்ட வேளையில் பல்வேறு துன்பங்களுக்கு இலக்கானோம்.  மாபெரும் புரட்சியாளர்கள் என்று தம்மைத் தாமே அறிவித்துக் கொண்டவர்கள் கூட நம்மை விட்டு ஓடிப்போனார்கள்.  இந்த நிலைமைகள் உச்சபட்சமாக நம்மை சோதிக்கவில்லையா ?  அதன் பின்னரும் நமது போராட்டமும் முயற்சிகளும் தொடர்ந்ததற்கான காரணமும் காரண - காரியத் தொடர்பும் தான் என்ன ?

இந்த சாதாரண வாதமே நமது கொள்கைக்கு கூடுதல் பலத்தைத் தரவில்லையா ?  மேலும், தாம் பற்றுக் கொண்ட கொள்கைகளுக்காக சிறைகளில் துன்பங்களை அனுபவித்துத் திரும்பிய பின்னரும் இன்னமும் செயல்பட்டுக் கொண்டிருக்கும் நமது புரட்சிகரத் தோழர்களின் உதாரணங்கள் நம்மிடம் இல்லையா?  பகுனின் உன்னைப்போல் வாதம் செய்திருந்தால், அவர் ஆரம்பத்திலேயே தற்கொலை செய்து கொண்டிருப்பார்.  தங்களது தண்டனைக் காலத்தை நிறைவு செய்வதற்காக தமது வாழ்நாளில் பெரும்பகுதியை சிறையிலேயே கழித்த பல புட்சியாளர்கள் இன்று இரஷ்ய அரசின் பொறுப்பு மிக்க பதவிகளில் அமர்ந்திருப்பதை நீ பார்க்கிறாய்.  மனிதன், தான் கொண்ட கொள்கைகளில் இருந்து பிறழாமல் இருப்பதற்கு பெருமுயற்சி செய்ய வேண்டும்.  வருங்காலம் ஒழித்து வைத்துள்ளது என்ன என்பதை எவராலும் சொல்ல முடியாது.

உனக்கு நினைவிருக்கிறதா? நமது வெடிகுண்டு தொழிற்சாலைகளில் செறிவூட்டப்பட்ட, வீரியம் மிக்க விஷமும் வைத்திருக்க வேண்டும் என்று நாம் விவாதித்துக் கொண்டிருந் தோம்.  அப்போது நீ அதனை மிகக் கடுமையாக எதிர்த்தாய்.  அந்த யோசனையே உனக்கு ஏற்புடையதாக இல்லை.  அதில் உனக்கு நம்பிக்கை இல்லை.  அப்படியானால், இன்று உனக்கு என்ன நேர்ந்தது?  இங்கே, கடினமான, சிக்கலான நிலைமைகள் கூட நிலவவில்லை.  இந்தக் கேள்வியை விவாதிக்கும் போது கூட நான் திடீர் உணர்ச்சி மாறுபாட்டை உணர்கிறேன்.  தற்கொலையை அனுமதிக்கும் மனப்போக்கையே நீ வெறுத்தாய்.  நீ கைது செய்யப்பட்ட அந்தத் தருணத்திலேயே தற்போதிருக்கும் இந்த எண்ணப்படி நீ செயல்பட்டிருந்தால் (அதாவது, விஷம் அருந்தி நீ தற்கொலை செய்து கொண்டிருந்தால்) புரட்சியின் நோக்கத்திற்கு நீ உதவியிருப்பாய்.  இப்படிக் கூறுவதற்காக தயவு செய்து என்னை மன்னித்து விடு. ஆனால், இத்தருணத்தில் அத்தகைய செயலைப்பற்றி நினைத்துப் பார்ப்பதுங்கூட நமது நோக்கத்திற்கு கேடு விளை விப்பதாய் அமையும்.

நான் உனது கவனத்திற்கு கொண்டுவர விரும்பும் விஷயம் இன்னும் ஒன்றே ஒன்று உள்ளது.  கடவுளிடத்திலோ சொர்க்கம் - நரகம், தண்டனை - வெகுமதி என்பனவற்றிலோ நமக்கு நம்பிக்கை இல்லை.  அதாவது மனித வாழ்க்கை பற்றிய கடவுளின் கடைசிநாள் நியாயத் தீர்ப்பின் மீது நமக்கு நம்பிக்கை இல்லை.  ஆகவே, பொருள் முதல்வாதப் பார்வையின்படியே நாம் வாழ்வையும் சாவையும் பற்றி சிந்திக்க வேண்டும்.  

அடையாளம் காண்பதற்காக நான் டெல்லியிலிருந்து இங்கு அழைத்து வரப்பட்டேன்.  அப்போது சில புலனாய்வு அதிகாரிகள், எனது தந்தை உடனிருக்கையில் இந்த விஷயம் பற்றி என்னிடம் பேசினார்கள்.  இரகசியங்களை வெளிப்படுத்துவதன் மூலம் எனது உயிரை காப்பாற்றிக்கொள்ள நான் முயற்சிக்காததால், என் வாழ்க்கையில் கடுமையான மரணவேதனை இருப்பதையே அது காட்டுவதாக அவர்கள் கூறினர்.  இம்மாதிரியான மரணமும் ஒரு வகையில் தற்கொலையைப் போன்றதே என்று அவர்கள் வாதிட்டனர். ஆனால், என்னைப் போல் கொள்கைகளும் கோட்பாடுகளும் உள்ள ஒரு மனிதன் பயனின்றி இறந்துபோவதை ஒருபோதும் நினைத்துப் பார்க்க முடியாது என்று நான் அவர்களுக்கு பதிலளித்தேன்.  எங்களது உயிருக்கு அதிகபட்ச பயன்மதிப்பை பெறவே நாங்கள் விரும்புகிறோம்.  இயன்ற மட்டும் மனிதகுலத்திற்கு சேவை செய்யவே நாங்கள் விரும்புகிறோம்.  குறிப்பாக, வாழ்க்கையின் எந்த இடத்திலும் துன்பமோ கவலையோ இல்லாத என்னைப் போன்ற ஒரு மனிதன் தற்கொலையைப்பற்றி ஒருபோதும் நினைத்துப் பார்க்கவே முடியாது. அதற்கு முயற்சிப்பதைப் பற்றி பேச வேண்டியதே இல்லை என்று பதிலளித்தேன்.  அதே விஷயத்தைத்தான் இப்பொழுது நான் உனக்குச் சொல்ல விரும்புகிறேன்.

என்னைப் பற்றி நான் என்ன நினைக்கிறேன் என்பதை உனக்குச் சொல்ல நீ அனுமதிப்பாய் என்று நம்புகிறேன்.  எனக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என்பது உறுதி.  இதைக்காட்டிலும் சற்றுக் குறைந்த தண்டனையையோ பொது மன்னிப்பையோ நான் எதிர்பார்க்கவில்லை.  பொதுமன்னிப்பு வழங்கப்பட்டாலுங்கூட அது அனைவருக்கும் வழங்கப்படாது.  அந்தப் பொதுமன்னிப்பும் கூட மற்றவர்களுக்குத்தான் வழங்கப்படுமேயொழிய நமக்கு வழங்கப்படாது.  மற்றவர்களுக்கு வழங்கப்படும் பொது மன்னிப்பும் கூட அதிகபட்சம் வரையறுக்கப்பட்டதாகவும் பல்வேறு நிபந்தனை களுக்கு உட்பட்டதாகவுமே இருக்கும்.  நமக்கு எந்தவொரு பொதுமன்னிப்பும் வழங்கப்படாது.  அது ஒருகாலத்திலும் நடக்காது. இருந்தாலும், நம்மை விடுதலை செய்யக்கோரும் கோரிக்கைகள் கூட்டாகவும் பரந்துபட்ட அளவிலும் எழுப்பப்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.  அத்துடன், அப்போராட்டம் அதன் உச்சகட்டத்தை அடையும்போது நாம் தூக்கிலிடப்பட வேண்டும் என்றும் விரும்புகிறேன்.  மதிப்பிற்குரியதும் நியாய மானதுமான சமரசம் எதுவும் எந்த நேரத்திலும் சாத்தியமாகக் கூடியதாக இருக்குமானால், நமது வழக்கு போன்ற பிரச்சனைகள் ஒருபோதும் அதற்கு ஒரு தடையாக இருக்கக்கூடாது என்பதே எனது விருப்பம்.  நாட்டின் தலைவிதியே நிர்ணயிக்கப்படும் நேரத்தில் தனிநபர்களின் தலைவிதியைப் பற்றி கவலைப்படக் கூடாது.  

புரட்சியாளர்கள் என்ற வகையில் கடந்தகால அனுபவங்கள் அனைத்தைப் பற்றியும் முழுமையாக நாம் அறிந்துள்ளோம்.  ஆகையால், ஆட்சியாளர்களின் போக்கில் குறிப்பாக பிரிட்டிஷ் இன ஆட்சியாளர்களின் போக்கில் திடீர்மாற்றம் எதுவும் நிகழ்ந்து விடும் என்று நாம் நம்பவில்லை.  புரட்சி இல்லாமல் அத்தகைய தொரு திடீர் மாற்றம் சாத்தியமில்லை.  விடாப்பிடியான கடும் போராட்டம், துன்பங்கள், தியாகங்கள் மூலமாக மட்டுமே ஒரு புரட்சியை சாதிக்க முடியும்.  அது சாதிக்கப்பட்டே தீரும்.  என்னுடைய மனப்போக்கைப் பொறுத்தவரை, அனைவருக்குமான வாய்ப்பு வசதிகளும் பொதுமன்னிப்பும் நிரந்தரமானதாக இருந்தால் மட்டுமே அதனை என்னால் வரவேற்க முடியும்.  நான் துhக்கிலிடப்படுவதன் மூலம் இந்த நாட்டு மக்களின் இதயங்களில் அழிக்கமுடியாத சில நினைவுகள் பதியப்பட வேண்டும்.  நான் விரும்புவது இது மட்டுமே. இதற்குமேல் அதிகமாக வேறொன்று மில்லை.

உன்
பகத்சிங்.

நன்றி: கேளாத செவிகள் கேட்கட்டும்...


5 கருத்துகள்:

  1. பகத்சிங் குறித்த எனது பதிவு

    http://parvaiyil.blogspot.com/2011/08/blog-post_29.html

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் நண்பர்களே.
    காரணமின்றி எதுவும் நடப்பதில்லை ! எனில் இந்த நேரத்தில் தற்கொலை பற்றிய தோழர் பகத்சிங்கின் கருத்தை பதிவிட என்ன காரணம் ? பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்கிற்கு எதிராக தீக்குளித்த தோழர் செங்கொடியை இதன் மூலம் கோழை என்று சுட்ட விரும்புகிறீர்களோ ? எனில் அந்த ’மார்க்சிய நிலைப்பாட்டை’ விளக்கி கட்டுரைக்குள் நுழைவதற்கு முன் ஒரு சிறு குறிப்பின் மூலம் தெளிவுபடுத்தி விடுவது தானே சரியானது. இல்லையெனில் தோழர் செங்கொடி குறித்த உங்களுடைய கருத்து என்ன ?

    பதிலளிநீக்கு
  3. செங்கொடி ஒரு கோழை.
    சந்தேகம் வேண்டாம்

    பதிலளிநீக்கு
  4. தோழர் செங்கொடி மட்டுமல்ல உணர்ச்சி அரசியலை போற்றும் அனைவரும் தற்கொலையை போராட்ட பாதை என கூறி மாபெரும் தவறு செய்கிறார்கள்

    தற்கொலை எந்த அடிப்படையில் சரியானது அது மக்களிடம் எழுச்சியை உருவாக்கும் என நம்புகிறீர்கள் என நீங்கள் விளக்க முடியுமா?
    //வணக்கம் நண்பர்களே.
    காரணமின்றி எதுவும் நடப்பதில்லை ! எனில் இந்த நேரத்தில் தற்கொலை பற்றிய தோழர் பகத்சிங்கின் கருத்தை பதிவிட என்ன காரணம் ?//

    பதிலளிநீக்கு

முகப்பு

புதிய பதிவுகள்