வியாழன், 5 ஜனவரி, 2012

ஊழலுக்கு எதிரான அன்னா ஹசாரேயின் இயக்கம்: இடதுசாரி மற்றும் கம்யூனிஸ்ட் கருத்தோட்டம் உடையவர்கள் பார்க்கும் முறையும் பார்க்க வேண்டிய விதமும்

ஊழலுக்கு எதிராக அன்னா ஹசாரே தொடங்கிய இயக்கம் பல்வேறு உண்ணாவிரதம், கைது நடவடிக்கை, சிறையில் உண்ணாவிரதம், லோக்பால் கொண்டுவர ஒப்புதல், அரசின் லோக்பால் சட்டத்தின் மீது ஒப்புதலின்மை, மீண்டும் உண்ணாவிரத அறிவிப்பு என்ற பல பரிமாணங்களில் தொடர்ந்து இறுதியில் வலுவான லோக்பால் மசோதா என்பது போய் வலுவற்ற அரசின் மசோதா கூட நிறைவேறாத நிலையில் தோல்வியைத் தழுவியுள்ளது. 
ஊழலுக்கு எதிரான அன்னா ஹசாரேயின் இயக்கத்தை தோல்வியுறச் செய்ததில் ஆளும் வர்க்கத்திற்கு உறுதுணையாக இருந்தவர்கள் முதலாளித்துவக் கட்சிகளான காங்கிரஸ், பிஜேபி மட்டுமல்ல; ஆளும் வர்க்கத்திற்கு இந்த விஷயத்தில் மிகக் கேவலமாக குற்றேவல் புரிந்த சி.பி.ஐ.,சி.பி.எம். மற்றும் தீக்கம்யூனிஸ்டுகள் என்று காட்டிக் கொள்ளும் அதிதீவிரக் கம்யூனிஸ்டுகளும்தான். 

அன்னா ஹசாரேயின்  இயக்கம் குறித்த நமது கட்சிகளின் அணுகுமுறைகள் அடிப்படையில் இரண்டு போக்குகளைக் கொண்டிருந்தன.
நாட்டின் ஆளும் கட்சியான காங்கிரஸ் கட்சிக்குப் பெரும் தலைவலியான ஆன அவ்வியக்கத்தை ஏதாவதொரு வகையில் அது முடக்க எத்தனித்தது. அது முடியாது என்ற நிலையில் தானே ஒரு லோக்பால் மசோதாவைத் தயாரித்து தற்போது நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது. அன்னா ஹசாரேயின் ஊழலுக்கு எதிரான இயக்கம் அதை ஏற்றுக்கொள்ள மறுத்துள்ளது. உயர்மட்ட நீதி அமைப்பும், கீழ்த்தட்டு நிர்வாகமும் லோக்பாலின் வரையறைக்குள் கொண்டுவரப்பட வேண்டும் என அது வற்புறுத்திக் கொண்டுள்ளது.

கட்சிகளின் நிலை
முக்கிய எதிர்க்கட்சியான பி.ஜே.பி. கட்சியோ இந்த இயக்கத்திலிருந்து அதிகபட்ச அரசியல் ஆதாயம் அடைய இயல்பாகவே விரும்பியது. அவர் முன்மொழிந்த ஜன் லோக்பால் மசோதாவின் ஒரு முக்கிய ­சரத்து பிரதமர் அந்த சட்டத்தின் வரம்பிற்குள் கொண்டுவரப்பட வேண்டும் என்பதாகும். 
அது பலகாலம் தற்போதைய பிரதமர் திரு மன்மோகன் சிங்கிற்கு எதிராக முன்வைத்து வரும் ஒரு விமர்சனமே அவர் வலுவற்ற பிரதமர் என்பதாகும். அதாவது திருமதி சோனியா காந்தி பின்னிருந்து இயக்க செயல்படுபவராகவே அவர் இருக்கிறார் என்பதாகும்.

மேலும் அவர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்துவதும் அக்கட்சிக்கு எளிதானதாக இருக்கவில்லை. அக்கட்சியின் விருப்பம் பிரதமர் இதுபோன்ற ஒரு மசோதாவின் வரம்பிற்குள் கொண்டுவரப்பட்டால் அவர் வலுக்குறைந்தவராக ஆகிவிடுவார். எனவே அவ்வாறு கொண்டுவருவது நல்லதல்ல என்பதாக இருந்தாலும் இந்த இயக்கத்தால் அதற்குக் கிடைக்கும் அரசியல் ஆதாயத்தைக் கருதி அக்கோரிக்கைகளையும் ஆதரித்தது. 
அக்கட்சியின் வழிகாட்டும் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். பங்கேற்பே இந்த இயக்கத்தில் பெருமளவு இருந்தது. அதன் விளைவாகவே இன்குலாப் ஜிந்தாபாத் என்ற முழக்கத்தில் தொடங்கிய அந்த இயக்கம் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அபிமான முழக்கங்களான பாரத் மாதாக்கி ஜே, வந்தே மாதரம் என்ற முழக்கங்களைக் கொண்டதாக ஆகியது.

அகில இந்திய அளவில் இவ்விரு கட்சிகளுக்கும் அடுத்து பெரும் பலம் வாய்ந்தவைகளாக இருக்கக்கூடிய கம்யூனிஸ்ட் கட்சிகள் அனைத்திற்கும் இந்த இயக்கம் ஒரு உறுத்தலாக இருந்ததே தவிர மனமுவந்த அக்கட்சிகளின் ஆதரவினை பெறுவதாக இது இருக்கவில்லை. நாட்டில் இருக்கும் கட்சிகளிலேயே ஏதாவதொரு கட்சியின் மேல் சாதாரண மக்களுக்கு பெரிய எதிர்பார்ப்புகள் இருக்குமென்றால் அது கம்யூனிஸ்ட் கட்சியாகத்தான் இருக்கும்.

ஏனெனில் அக்கட்சியே போராட்ட வழிமுறைகளின் மூலமான சமூகப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதை வலியுறுத்துவது. இருந்தாலும் இத்தகைய பேரெழுச்சியை ஏற்படுத்திய இந்த இயக்கம் அக்கட்சிகளுக்கு ஏன் உறுத்தலாக இருந்தது? இது உன்னிப்பாகக் கவனிக்கப்பட வேண்டிய வி­சயம்.

தலித் அமைப்புகளின் எதிர்ப்பு
இக்கட்சிகள் தவிர சமூகநீதி அமைப்புகள் என்று தங்களைக் கூறிக்கொள்ளக் கூடிய தலித் அமைப்புகளைப் பொறுத்தவரையில் அன்னா ஹசாரேயின் இயக்கம் ஒரு தவறான இயக்கமாகவே கருதப்பட்டது. அன்னா ஹசாரேயின் இயக்கத்திற்கு எதிராக அவர்கள் மிகப்பெரிய அளவில் இல்லாவிடினும் ஆங்காங்கே சிறிய அளவுகளில் சில அணிவகுப்புகளும் போராட்டங்களும் நடத்தவே செய்தனர்.

அதாவது இடஒதுக்கீட்டிற்கு எதிராக குஜராத் போன்ற மாநிலங்களில் பலகாலங்களுக்கு முன்பாக நடைபெற்ற இயக்கங்களை நடத்திய சக்திகளே இவ்வியக்கத்திற்கும் பின்பலமாக உள்ளன என்பது அந்த அமைப்புகளின் கருத்தாக இருந்தது.

இந்தப் பின்னணியில் உண்ணாவிரதம் தொடங்கப்பட்ட பின்பு தலைநகரில் மட்டுமின்றி பல மாநிலத் தலைநகர்களிலும் அந்த உண்ணாவிரத்திற்கு ஆதரவான இளைய தலைமுறையினரின் எழுச்சி வெளிப்படத் தொடங்கியது.
ஊடகங்கள் இந்த நிகழ்வினை மிகப்பெரும் அளவில் மக்களிடையே கொண்டு சென்றன. அந்த நிலையில் இந்த இயக்கம் குறித்துக் கருத்து எதுவும் தெரிவிக்காமல் இனிமேலும் இருக்க முடியாது என்ற நிலை இடதுசாரி, கம்யூனிஸ்ட் இயக்கங்களுக்கு ஏற்பட்டது.

அக்கட்சிகள் தவிர அருந்ததிராய் போன்ற சமூக ஆர்வலர்கள் தரப்பிலிருந்தும் இது குறித்து கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. சமூகநீதிக் கண்ணோட்டத்தை உயர்த்திப் பிடிக்கும் தலித் அமைப்புகளின் வாதங்களை முன்வைக்கும் விதத்திலும் கருத்துக்கள் வரத்தொடங்கின.

இப்போராட்டத்தின் வெப்பத்தை அதிக அளவில் எதிர்கொள்ள வேண்டியிருந்த காங்கிரஸ் கட்சி இத்தகைய போராட்டங்கள் நாடாளுமன்ற ஜனநாயகத்தை சீர்குலைக்கும் என்ற வாதத்தையே முக்கியமாக முன்வைத்தது. அதாவது நாட்டிற்குத் தேவையான சட்டங்களை இயற்றும் பொறுப்பினைக் கொண்டது நாடாளுமன்றமே.

அதனுடைய அதிகாரத்தை சிவில் சமூகத்தினர் என்ற பெயரில் சிலர் சேர்ந்து கொண்டு எடுத்துக் கொள்ள அனுமதிக்கக் கூடாது. அவ்வாறு எடுத்துக் கொள்ள அனுமதித்தால் அது தவறான முன்னுதரமாக ஆகிவிடும் என்பதே காங்கிரஸ் கட்சியின் ஜன் லோக்பால் இயக்கம் குறித்த ஆணித்தரமான வாதம்.

சி.பி.ஐ(எம்)-ன் நிலை
அந்த வாதம் குறித்து அடிப்படையில் எதிர்ப்பு எதையும் நாட்டின் முக்கிய கம்யூனிஸ்ட் கட்சியான சி.பி.ஐ(எம்). கட்சி தெரிவிக்கவில்லை. அதன் தற்போதைய பொதுச் செயலாளர் பிரகாஷ் கரத் அவர்கள் ஜன் லோக்பால் இயக்கத்தின் பின்னணி குறித்தும் அதற்குக் கிட்டியுள்ள மகத்தான ஆதரவிற்கான காரணங்கள் குறித்தும் அவ்வியக்கத்தின் பின்னணியில் உள்ள மக்கள் பகுதியின் தன்மை குறித்தும் ஒரு கட்டுரையை ஹிந்து நாளிதழில் எழுதினார்.

அதில் அவர் இதுவரை இந்தியாவில் இருந்த அரசாங்கங்களிலேயே மிகவும் ஊழல் மலிந்த அரசாங்கம் தற்போதைய அரசாங்கமே என்றும், தற்போதைய ஆளும் கட்சி அன்னா ஹசாரேயின் இயக்கத்தை பாராளுமன்றம் மற்றும் ஜனநாயக நிறுவனங்களுக்கு எதிரானது என்று கூறுவது சரியானது அல்ல; ஏனெனில் நாட்டின் பல்வேறு அரசியல் கட்சிகளும் குடிமக்களின் அமைப்புகளும் அரசாங்கம் கொண்டுவரும் மசோதாக்களை எதிர்த்துப் போராடும் உரிமையினைப் பெற்றவர்களே; அன்னா ஹசாரே மட்டுமல்ல அரசாங்கம் இதற்கு முன்பு கொண்டுவந்த தொழிலாளர் விரோத மசோதாக்களை எதிர்த்தும் நிதித்துறையில் தாராளவாதப் போக்கைக் கொண்டுவரும் அதன் முயற்சிகளை எதிர்த்தும் தங்கள் கட்சியின் தொழிற்சங்கங்களும் போராடியுள்ளன என்பதையும் எடுத்துக் காட்டினார்.

தாராளவாதக் கொள்கையே காரணம்
அவர் அக்கட்டுரையில் தற்போது மிகப் பெருமளவிற்கு லஞ்சமும் ஊழலும் மலிந்திருப்பதற்கு முக்கிய காரணம் அரசு கடந்த 20 ஆண்டுகாலமாக அமுல் படுத்திவரும் தாராளவாதக் கொள்கைகளே என்றும் கடந்த 7 ஆண்டு காலமாக அரசு வகுக்கும் கொள்கைகள் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பெரும் வர்த்தக நிறுவனங்களுக்குச் சாதகமானவைகளாகவே இருந்துள்ளன என்றும் கூறியுள்ளனர்.

அதன் விளைவாக நமது நாட்டின் இயற்கைச் சாதனங்கள் அனைத்தும் தனியாருக்கு தாரைவார்க்கப் பட்டுள்ளன என்பதை அவர் அக்கட்டுரையில் எழுதினார். அரசின் நவீன தாராளவாதப் போக்கு பெரும் மூலதனத்திற்கு ஆதரவானதாக ஆகிவிட்டது; அதனால் அரசியல் வியாபாரமாகவும் வியாபாரம் அரசியலாகவும் ஆகிவிட்டது என்றும் அதில் அவர் கூறினார்.

மத்தியதர வர்க்கத்தின் மீதான சாடல்
அத்துடன் அன்னா ஹசாரேயின் இயக்கத்திற்கான ஆதரவு நமது நாட்டின் மத்தியதர வர்க்கத்திலிருந்தே பெரும்பாலும் வந்து கொண்டுள்ளது இந்த மத்தியதர வர்க்கம் எந்த நவீன தாராளவாதக் கொள்கை லஞ்சமும் ஊழலும் மலிவதற்குக் காரணமாக இருந்ததோ அந்த தாராளவாதக் கொள்கையை எதிர்க்காத ஒரு மக்கட் பகுதி; அதுமட்டுமின்றி அந்த தாராளவாதக் கொள்கையினால் பலனடைந்த ஒரு பகுதி; தாராளவாதக் கொள்கையினால் உருவான வேலை வாய்ப்புகளைப் பெற்ற அந்த வர்க்கம் நிலவும் லஞ்ச ஊழல் மலிந்த சூழ்நிலையை எதிர்கொள்ளும் போது அதாவது அவற்றால் அது பாதிக்கப்படும் போது அதற்கு எதிராகக் கிளர்ந்தெழத் தொடங்கியுள்ளது. 
பொதுவாக மத்தியதர வர்க்கத்தின் மனநிலையே அரசியலுக்கு எதிரானது. அதனால் அது அரசியலையும் பாராளுமன்றத்தையும் வெறுப்புடன் பார்க்கிறது; தொடர்ச்சியாக அன்னா ஹசாரே இயக்கத்தின் போது அரசியல் வாதிகளுக்கு எதிராகவும் பாராளுமன்றத்திற்கு எதிராகவும் அது எழுப்பிய முழக்கங்களே இதற்கு எடுத்துக் காட்டு என்றெல்லாம் அவர் அக்கட்டுரையில் கூறினார்.

பெரு முதலாளித்துவ நிறுவனங்களின் பங்கு
சமீபத்தில் வெளிவந்த ஊழல் நடவடிக்கைகள் அனைத்தின் பின்னணியிலும் பெரும் பெரும் தொழில் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் உள்ளன. ஆனால் அவை மக்களின் பார்வைக்கே வராதிருக்கின்றன என்பதையே சமீபத்தில் ஹிந்து நடத்திய கருத்துக் கணிப்புகள் வெளிப்படுத்தியுள்ளன.

இந்தப் பின்னணியில் தற்போது வலியுறுத்தப்படக் கூடிய லோக்பால் மசோதா அரசு கொண்டுவர உத்தேசித்திருப்பது போல் பலவீனமானதாக இருக்கக் கூடாது. அது செயலூக்கம் உள்ளதாக இருக்க வேண்டும் என்றும் அவர் அக்கட்டுரையில் கேட்டுக் கொண்டார்.

தேவதூதன்
மேலும் அக்கட்சியின் ஆதரவாளரும் முன்பிருந்த கேரள இடது முன்னணி அரசாங்கத்திற்கு பொருளாதார ஆலோசகராகவும் இருந்த பிரபாத் பட்நாயக் அவர்கள் அவர் ஹிந்து பத்திரிக்கையில் எழுதிய ஒரு கட்டுரையின் மூலம் அன்னா ஹசாரே நடத்தும் இயக்கம் அடிப்படையில் ஜனநாயகத் தன்மை வாய்ந்ததல்ல. அது ஊழலுக்கு எதிரான தேவ தூதனாகவே அன்னா ஹசாரேயைச் சித்தரிக்கிறது. அதில் கலந்து கொள்வோர் ஊழல் குறித்து விவாதிப்பதில்லை. மாறாக அன்னா ஹசாரே என்னவெல்லாம் கூறுகிறாரோ அதையயல்லாம் வழிமொழிகின்றனர். இது ஜனநாயகத்திற்கு உகந்த போக்கல்ல என்று கூறினார்.

நீதித்துறையும் தனியார் மயமாகும்
சமூக ஆர்வலரும் அதிதீவிர கம்யூனிஸ்ட் கட்சிகள் என்று அறியப்படும் கட்சிகளுக்கு ஆதரவாக அவ்வப்போது அச்சமேதுமின்றி தனது கருத்துக்களை கூறிவருபவரும் உலக அளவில் அங்கீகரிக்கப்பட்ட எழுத்தாளருமான அருந்ததிராய் அவர்களும் இவ்வியக்கம் குறித்த தனது எதிர்மறையான கருத்துக்களை முன்வைக்கத் தவறவில்லை.

அவர் ஹிந்து நாளிதழில் நான் அன்னா ஹசாரேயாக இருக்க விரும்ப மாட்டேன் என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையில் அன்னா ஹசாரேயின் இயக்கம் ஊழலுக்கு எதிரான விசாரணைகளும் வழக்குகளும் உச்சகட்டத்தில் இருந்தபோது அதிலிருந்து மக்களின் கவனத்தைத் திசை திருப்புவதற்காக ஆளும் கட்சியின் ஆசிர்வாதத்துடன் தொடங்கப்பட்ட ஒன்றே; அன்னா ஹசாரேயின் உண்ணாவிரதமும் இதுபோன்ற இயக்கங்களும் படிப்படியாக ஒரு மக்கள் நல அரசின் பல்வேறு அலுவல்களை தனியாருக்கு தாரைவார்ப்பதாகவே அமையும்;

ஏற்கனவே மருத்துவம், கல்வி போன்றவை அரசின் கட்டுப்பாட்டிலிருந்து தனியார் வசம் சென்றுவிட்டன; அன்னா ஹசாரேயின் இயக்கத்தின் மூலம் ஊழலுக்கு எதிரான நீதி பரிபாலனமும் தனியார்மயமாகி அதாவது சிவில் சமுதாயத்தின் வசம் சென்றுவிடும் என்று அவர் அக்கட்டுரையில் கூறினார். 
ஒட்டுமொத்தத்தில் இடதுசாரிகள் கம்யூனிஸ்ட்கள் இடதுசாரி மனநிலை கொண்ட அறிவுஜீவிகள் ஆகிய அனைவரின் வாதங்களுமே ஏதாவதொரு வகையில் அன்னா ஹசாரேயின் இயக்கத்திற்கு எதிராகவே இருந்தது. அதற்கு கிட்டிய மகத்தான ஆதரவு இக்கட்சிகளையும் பெயரளவிற்கு அதனை ஆதரிப்பது போல் பாவனை காட்டச் செய்தது. ஆனால் நடைமுறையில் இவ்வியக்கத்திற்கு எதிரான கடுமையான விமர்சனங்களே அவர்கள் உள்ளங்களில் மண்டிக் கிடந்தன.

சி.பி.ஐ(எம்)-ஐத் தடுப்பது எது?
கம்யூனிஸ்ட்களைப் பொறுத்தவரையில் இப்படிப்பட்ட மனநிலை ஏற்படக் காரணம் இயக்கம் போராட்டம் என்றால் அதில் முன்னணியில் இருக்க வேண்டிய அக்கட்சிகளைத் தாண்டி வேறொருவரால் அதுவும் ஒரு தனி மனிதரால் இந்த இயக்கம் தட்டி எழுப்பப்பட்டதே அக்கட்சிகளால் ஜீரணிக்க முடியவில்லை.

அக்கட்சிகளைப் பொறுத்தவரை சமூக ரீதியான இயக்கங்கள் கட்டுவது ஒரு கடந்த கால வழக்கமாக ஆகிவிட்டது. இப்போது அப்பட்டமான நாடாளுமன்ற வாதத்தில் மூழ்கிவிட்ட அக்கட்சிகள் அவற்றின் நாடாளுமன்றவாத நலனுக்கு உதவிசெய்யும் தன்மை வாய்ந்த இயக்கங்களைத் தவிர வேறு எதையும் கையில் எடுப்பதில்லை.

அத்தகைய இயக்கங்களாக அக்கட்சிகளுக்கு எளிதில் கிட்டுபவையாக ஜாதிய எதிர்ப்பு என்ற பெயரில் நடத்தப்படும் ஜாதியவாத இயக்கங்களே பெரும்பாலும் அமைகின்றன. அவற்றின் மூலம் ஒரு குறிப்பிட்ட மக்கள் பகுதியின் ஆதரவினை எளிதில் பெற்றுவிடலாம் என்பது அவற்றின் எண்ணமாகிவிட்டது.

அதாவது மக்களின் எரியும் பிரச்னைகளை மையமாகக் கொண்டு இயக்கங்கள் கட்டி அவற்றின் மூலம் மக்கள் ஆதரவைப் பெற்று தங்களது அமைப்பை வலுப்படுத்துவது என்பதற்குப் பதிலாக இருக்கும் தங்கள் வலுவினைக் கொண்டு குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் உள்ள ஒரு ஜாதியினரின் பிரச்னையை எடுத்தால் அந்த ஜாதியின் வாக்குகளைப் பெரும்பாலும் தாங்கள் பெற்றுவிடலாம் என்று கருதுபவையாக அக்கட்சிகள் ஆகிவிட்டன.

இதன் பொருள் இக்கட்சிகள் எப்போதுமே சமூகப் பிரச்னைகளை மையமாகக் கொண்ட இயக்கங்களை எடுக்கவில்லை என்பதல்ல. விடுதலை பெற்ற அந்த ஆரம்ப நாட்களில் பல்வேறு பிரச்னைகள் சார்ந்த இயக்கங்களை இக்கட்சிகள் எடுக்கவே செய்தன.

ஆனால் மற்ற கட்சிகள் நடத்திய இயக்கங்களை போலன்றி ஒன்றாயிருந்த கம்யூனிஸ்ட் கட்சி எடுத்த இயக்கங்கள் அரசால் சாதாரணமாக எடுத்துக்கொள்ளப் படவில்லை. அவை கடுமையான அடக்குமுறைகளைச் சந்தித்தன. அடக்கு முறைகளை அக்கட்சியின் மீது கட்டவிழ்த்துவிட ஆட்சியாளர்களுக்கு சாக்காக ஆயுதம் தாங்கி தெலுங்கான போராட்டத்தை அக்கட்சி முன்னொரு காலத்தில் நடத்தியது அமைந்தது.

அதனை மையமாக வைத்தே இந்தியச் சீன யுத்தத்தின் போதும் இந்திய பாக்கிஸ்தான் யுத்தத்தின் போதும் கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் பெரும் எண்ணிக்கையில் தேச பாதுகாப்புக் கருதி என்ற பெயரில் கைது செய்யப்பட்டனர்.

இந்தப் பின்னணியிலும் சிலப் பிரத்தியேக சூழ்நிலைகளில் கேரளா, மேற்குவங்கம் போன்ற பகுதிகளில் அவர்கள் நாடாளுமன்ற முறை மூலமே ஆட்சிக்கு வர முடிந்தவர்களாக ஆனது நாடாளுமன்றப் பாதையின் மீதான அவர்களது நாட்டத்தை அதிகமாக்கியது.

சமுதாய மாற்ற உணர்வு கொண்டதாக அமைப்பை வைத்திருந்து சமூக மாற்றத்திற்கான ஒத்திகை என்று கருதப்படக் கூடிய மக்கள் இயக்கங்களை மென்மேலும் நடத்தி அடிப்படை சமூகமாற்ற இலக்கை நோக்கி கட்சியின் தலைமையில் மக்களை வழிநடத்துவது என்ற அடிப்படை மார்க்சியப் பாதையை அக்கட்சிகள் கைவிட்டு விட்டன.

மத்தியிலும் பல்வேறு மாநிலங்களிலும் அங்கு செயல்படக் கூடிய பெரிய கட்சிகளோடு உடன்பாடுகள் வைத்துக் கொண்டு அதன்மூலம் சில நாடாளுமன்ற சட்டமன்ற இடங்களைப் பெற்று கேரளா, மேற்குவங்கம், திரிபுரா போன்ற மாநிலங்களில் ஆட்சிக்கு வந்ததோடு பல மாநிலங்களில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் சட்ட நாடாளுமன்ற இடங்களைக் கொண்டிருக்கக் கூடியவர்கள் என்றும் அவர்கள் தங்களைக் காட்டத் தொடங்கினர்.

அதன்மூலம் ஒருசமயம் இல்லாவிட்டால் மறுசமயம் மத்தியில் ஆட்சியதிகாரத்திற்கு வந்துவிடலாம் என்பது அவர்களின் பாதையாகிப் போனது. அதாவது அகில இந்திய அளவில் செயல்படும் காங்கிரஸ், பி.ஜே.பி. போன்ற கட்சிகள் மக்கள் மத்தியில் அம்பலமாகிப் போகும் சூழ்நிலையில் மூன்றாவது அரசியல் மாற்றை தேடவேண்டிய சூழ்நிலை வாக்காளர்களுக்கு ஏற்படும்; அந்த நிலையில் தங்கள் அமைப்பை யாருடன் எப்படிக் கூட்டு சேர்ந்தாவது வலுமிக்க அமைப்பு என்று நாடாளுமன்ற அரசியலில் காட்ட முடிந்தால் வாக்காளர்களின் பார்வை தங்கள் மீதும் திரும்பும் என்ற எண்ணம் அவர்களிடையே ஊறிப்போனது.

அதனால்தான் இப்போதும் கூட நீங்கள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் மக்களின் அடிப்படைப் பிரச்னைகள் எதுவும் தீர்க்கப்பட வில்லையே என்று யாராவது கேள்வி எழுப்பினால் ஒரு மாநிலத்தின் ஆட்சியதிகாரத்தில் இருந்து கொண்டு அடிப்படைப் பிரச்னைகளைத் தீர்க்க முடியாது. அதற்கு மத்திய அரசை நாங்கள் கைப்பற்ற வேண்டும் என்று கூறுபவர்களாக அவர்கள் ஆகிவிட்டனர்.

இருந்தாலும் கூட அமைப்பு ரீதியாக ஒரு போராட்ட சக்தியாக அக்கட்சிகள் தங்களை இந்த உலகமயத்திற்கு முன்பு வரை ஓரளவு காட்ட முடிந்தவையாகவே இருந்தன. அக்கால கட்டத்தில் அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களோடு உற்பத்தித்துறை சார்ந்த பல தொழில்களிலும் அவர்களுக்கு தொழிற் சங்கங்கள் இருந்தன.

அவை அவ்வப்போது தொழிலாளர்களின் வாழ்க்கைப் பிரச்னைகள் சார்ந்த பல்வேறு போராட்டங்களை கையிலெடுப்பவையாகவே இருந்தன. அவற்றின் மூலம் அக்கட்சிகள் போராட்ட சக்திகள் என்று மக்களால் கருதப்படுவதற்கு இருந்த வாய்ப்பும் சூழ்நிலையும் ஓரளவிற்குப் பராமரிக்கவும் பட்டது.

உலகமயப் பின்னணியில் கைவிடப்பட்ட உழைக்கும் வர்க்க இயக்கம்
ஆனால் உலகமயம் வந்ததற்குப் பின்பு அவர்களுடைய முழக்கமே உலக மயத்தினால் பாதிப்பிற்கு ஆளாகும் அப்பாவி பலிகிடாய்களாக இந்திய முதலாளிகள் ஆகிவிட்டனர் என்பதாக ஆகிவிட்டது. அதனால் ஏற்கனவே பாதிப்பிலிருக்கும் உற்பத்தித் துறையில் தொழில்களை நடத்தும் முதலாளிகளை தாங்கள் நடத்தும் தொழிலாளரின் கோரிக்கைகளுக்கான போராட்டம் இன்னும் பாதிக்கும் என்ற மனநிலை அத்தொழிற்சங்கங்களுக்கு உருவாகிவிட்டது. அது நடைபெற வாய்ப்புள்ள தொழிலாளர் போராட்டங்களின் மீது குளிர்ந்த தண்ணீர் தெளிக்கும் போக்காக ஆகிவிட்டது. 
இச்சூழ்நிலையை நன்கு பயன்படுத்திக் கொண்ட முதலாளிகள் தொழிலாளரை வேட்டையாடத் தொடங்கினர். இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு பஞ்சாலைத் தொழில். பஞ்சாலை முதலாளிகள் பஞ்சாலைத் தொழிலில் நிரந்தரத் தொழிலாளரையே இல்லாமல் செய்துவிட்டனர்.

ஏற்கனவே நிரந்தரத் தொழிலாளராக இருந்தவர்களுக்குக் கொடுக்க வேண்டிய ஓய்வுகாலப் பலன்களைக் கூடக் கொடுக்கவில்லை. சுமங்கலித் திட்டம் என்ற பெயரில் அப்பாவி பெண் குழந்தைகளை நேரம் காலம் பாராது காட்டுத்தனமாக தாங்கள் நடத்தும் விடுதிகளில் தங்கவைத்துச் சுரண்டும் கொத்தடிமைத் தனமான சுரண்டலை துணிவுடன் மேற்கொள்ளத் தொடங்கினர்.

இந்தப் பின்னணியில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஒட்டுமொத்தத் தொழிற்சங்க ரீதியான செயல்பாடே அரசு ஊழியர், ஆசிரியர் ஆகியோரின் இயக்கங்கள் மட்டுமே என்றாகிவிட்டது. அரசு ஒரு மாதிரி முதலாளி என்ற ரீதியில் தொழிலாளர் சட்டங்களை ஓரளவு மதிக்கக் கூடியதாக இருக்க வேண்டியிருந்ததால் நோகாமல் நொங்கு திண்பது போன்று தொழிற்சங்கம் நடத்தும் போக்கு அவர்களிடம் ஊறிப் போனது.

அதன் பின்னர் அக்கட்சி நடத்திய இயக்கங்கள் ஒட்டுமொத்தமாகவே பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளைத் தனியாருக்கு தாரைவார்ப்பதை எதிர்ப்பவையாகவே ஆகிவிட்டன. அதிலும் கூட அத்தனை சத்தும் சாரமும் இல்லாமல் போய்விட்டது.

அதற்கான காரணம் அவர்கள் ஆட்சியிலிருந்த மாநிலங்களில் லாபம் ஈட்டாத பொதுத்துறை நிறுவனங்கள் என்று கருதப்பட்டவை அவர்களாலும் தனியாருக்குத் தாரைவார்க்கப் பட்டதாகும். இவ்வாறு எந்தவொரு மக்கள் நலன் சார்ந்த போராட்டத்திலும் முக்கிய பங்கு வகிக்க முடியாததாக ஆகிவிட்ட  கம்யூனிஸ்ட் கட்சிகளில் முதற்பெரும் கட்சியாக விளங்கக் கூடிய சி.பி.ஐ(எம்)‡ன் அப்பட்டமான நாடாளுமன்றவாதக் கண்ணோட்டமே அதன் தலைவர் பிரகாஷ் கரத்தின் எழுத்துக்களில் பிரதிபலிக்கிறது.

ஐ.ஜ.மு. கூட்டணி அரசே மிகப்பெரும் ஊழல் அரசாம்
முதற்கண் இதுவரை இருந்த அரசாங்கங்களிலேயே தற்போதைய அரசாங்கம் தான் மிகவும் ஊழல் மலிந்த அரசாங்கம் என்ற கூற்றே அவரது கட்சியின் நாடாளுமன்றவாத அடிப்படையில் இருந்து வருவதுதான். ஒரு முதலாளித்துவ சமூக அமைப்பில் ஊழலின் ஊற்றுக்கண்ணாக இருப்பது முதலாளி வர்க்கமாகத் தான் இருக்க முடியும். அதை அவர் எழுதிய கட்டுரையில் பிற்பகுதியில் அவரே கூறியுள்ளார்.

அப்படிப்பட்ட முதலாளித்துவம் ஆட்சியதிகாரத்தில் இருக்கக் கூடிய ஒரு நாட்டில் ஊழலுக்கான வாய்ப்பு உள்பொதிந்ததாக இருக்கும் நிலையில் சில சமயம் ஊழல் அப்பட்டமாக வெளிப்படும்; பல சமயங்களில் உள்ளார்ந்த விதத்தில் இருந்து கொண்டிருக்கும்.

வெளிப்படும் சமயங்களில் மட்டும் ஊழல் இருப்பதாகக் காட்டி அதற்கு எதிராகப் பிரச்சாரம் மேற்கொள்வது நாடாளுமன்றவாத அரசியலில் ஊறிப்போய் அதில் அரசியல் ஆதாயம் பெற விரும்பும் கட்சிகளின் வேலை. சமூகமாற்றக் கண்ணோட்டத்தை வைத்துள்ள கட்சிக்கு ஊழலின் ஊற்றுக் கண்ணாக இருக்கும் வர்க்கத்தை அம்பலப்படுத்துவதே முக்கியமானது. 
அதைச் செய்வதை விடுத்து ஏதோ இதற்கு முன்பிருந்த தேசிய முற்போக்கு கூட்டணிக் கட்சி அரசாங்கம் ஊழலில் அத்தனை அதிகம் ஈடுபடாதது போலவும் காங்கிரஸ் கட்சி மட்டும் அத்தனை அதிகமாக ஈடுபட்டுள்ளது போலவும் ஒரு சித்திரத்தை முன்வைப்பது அவரது கட்சியின் சமூகமாற்றச் சிந்தனையற்ற போக்கினையே வெளிப்படுத்துகிறது.

அவர் ஐக்கிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியை மிகவும் ஊழல் மலிந்த ஆட்சி என்று கூறும் அதே வேளையில் அவரையும் அறியாமல் தேசிய முற்போக்குக் கூட்டணியின் ஆட்சி அத்தனை ஊழல் மலிந்ததாக இருக்கவில்லை என்ற சான்றிதழும் வழங்குகிறார்.

நவீன தாராளவாதமே ஊழலின் அடிப்படையாம்
அதுதவிர அவர் முன்வைக்கும் மற்றொரு வாதம் தற்போதைய ஊழல் மலிந்த நிலைக்கு முக்கிய காரணம் கடந்த 20 ஆண்டுகாலமாக இந்திய அரசாங்கம் கடைப்பிடித்து வரும் நவீன தாராளவாதக் கொள்கையே என்பதாகும்.

அதாவது நவீன தாராளவாதக் கொள்கை என்பது வர்க்க நலன்கள் சாராமல் யாரோ ஒருசில தனிமனிதர்களின் மனதில் உதித்த தவறான கொள்கை; அந்தக் கொள்கையே ஊழல் உள்பட பல்வேறு கோளாறுகளைத் தோற்றுவித்துள்ளது என்ற வகையில் அவரது வாதம் செல்கிறது.

உண்மையில் புதிய தாராளவாதக் கொள்கை உலக முதலாளித்துவத்தால் இன்றைய நிலையில் அது எதிர்கொண்டு வரும் பிரச்னைகளில் இருந்து தப்பித்து இப்போதும் எவ்வளவு அதிகபட்ச லாபம் ஈட்ட முடியுமோ அவ்வளவு அதிகபட்ச லாபம் ஈட்டுவதற்காகக் கொண்டுவரப் பட்டதே.

லாப நோக்கே தாராளவாதத்தின்அடிப்படை
மக்களின் வாங்கும் சக்தி குறைவு முதலாளித்துவச் சந்தை நெருக்கடியை ஏற்படுத்துகிறது; அதனை சரிசெய்ய மக்களின் வாங்கும் சக்தியை அதிகரிக்க வேண்டும். மக்களின் வாங்கும் சக்தி அதிகரிக்கப்பட வேண்டுமென்றால் அவர்களுக்குக் கிட்டும் ஊதியம் கூடுதலானதாக இருக்க வேண்டும். அவ்வாறு கூடுதல் ஊதியத்தை முதலாளித்துவ நிறுவனங்களில் வேலை செய்யும் அனைத்து மக்களுக்கும் வழங்குங்கள் என்று முதலாளித்துவ நிர்வாகங்களுக்கு அரசாங்கம் ஆணையிட முடியாது.

ஏனெனில் பொருளுற்பத்திக்கான அனைத்துக் காரணிகளிலும் உழைப்பாளருக்குக் கொடுக்கும் ஊதியத்தைக் குறைத்து மட்டுமே முதலாளிகளால் லாபம் ஈட்ட முடியும். எனவே அதனைக் கூடுதலாக வழங்குங்கள் என்று அரசாங்கம் அவர்களை ஒருபோதும் கேட்டுக்கொள்ள முடியாது.

மேலும் முதலாளித்துவ நாய் ஆட்டும் வாலாகவே அதன் அரசாங்கம் எப்போதும் இருக்கும். நாய் வாலை ஆட்ட முடியுமே தவிர வால் நாயை ஆட்ட முடியாது.

இந்த நிலையில் எப்படியாவது மக்களின் வாங்கும் சக்தியை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக அரசின் சேவைத் துறைகளிலும் போலீஸ், ராணுவத் துறைகளிலும் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் யுக்தியை முதலாளித்துவம் கையாளத் தொடங்கியது. அவ்வாறு இத்துறைகளில் உருவாக்கப்பட்ட வேலைகளுக்காக ஊதியம் வழங்கும் வகையில் செய்யப்பட்ட செலவு அது பொருளுற்பத்தி சார்ந்ததாக இல்லாததால் சமூகத்தில் பணப்புழக்கக்தை மட்டும் அதிகரித்தது.

பணப்புழக்க அதிகரிப்பினால் உருவான பணவீக்கம் விலை உயர்விலும் உண்மைச் சம்பளத்தின் சரிவிலும் சென்று முடிந்தது. இந்தப் போக்கு முதலாளித்துவப் பொருளாதாரத்தை ஆட்டி வைப்பதாக ஆகிய சூழ்நிலையில் அப்போதும் அதிகபட்ச லாபத்தை ஈட்டுவதற்காக உலகின் வளர்ச்சியடைந்த நாடுகளின் முதலாளித்துவத்தால் கொண்டுவரப் பட்டதே உலகமயமும் நவீன தாராளவாதமும் ஆகும்.

மேலை நாடுகள் நவீன யுக்திகளைக் கொண்டு பொருளுற்பத்தி செய்வதால் உற்பத்திச் செலவு குறைவாக உள்ள நிலையில் அவர்கள் உற்பத்திப் பொருட்களை அத்தனை நவீன யுக்திகளைப் பின்பற்றாத பிற நாடுகளுக்கு விற்று அதிக லாபம் ஈட்டுவதை அடிப்படையாகக் கொண்டு கொண்டுவரப்பட்டதே உலகமயம்.

பொருளுற்பத்தியில் அரசின் தலையீட்டை எவ்வளவு தூரம் குறைக்க முடியுமோ அவ்வளவு தூரம் குறைப்பதை அடிப்படையாகக் கொண்டதே நவீன தாராளவாதம். ஏனெனில் பொதுத்துறையும் அதில் அரசின் முதலீடும் தனியார் துறைக்கு உதவுவதற்காக உருவாக்கப்பட்டவையே தவிர மக்கள் நலனை மேம்படுத்துவதற்காக உருவாக்கப் பட்டவையல்ல.

முதலாளித்துவத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு உதவும் காரணிகளைக் குறைந்த விலைக்கு வழங்குவதற்காகவே பொதுத்துறை நமது நாட்டில் மின்சாரம், தொலைத்தொடர்பு, போக்கு வரத்து, இரும்பு எஃகு போன்ற துறைகளில் கொண்டுவரப் பட்டது.

இன்று அத்துறைகளிலும் முதலீடு செய்யும் அளவிற்கு தனியார் மூலதனம் வளர்ந்துள்ள நிலையில் அதற்கு வாய்ப்புக் கொடுப்பதற்காக பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள் தனியார் துறைக்கு விற்கப்படுகின்றன.

உலகில் முன்னேறிய நாடுகளின் முதலாளிகளால் தங்களது அதிகபட்ச லாபத்தை அந்நாடுகளில் சந்தை நெருக்கடி முற்றிய நிலையிலும் பராமரிப்பதற்காக கொண்டுவரப்பட்ட உலகமயம் இந்தியா, பிரேசில், சீனா போன்ற நாடுகளில் வேறொரு விளைவினை ஏற்படுத்தியது.

குறிப்பாக இந்தியா, பிரேசில் போன்ற நாடுகளில் குறைந்த கூலிக்கு உழைப்புத் திறன் கிட்டும் வாய்ப்பிருப்பதாலும் முதலாளித்துவ சமூக அமைப்பில் உழைப்புத் திறனும் ஒரு சந்தைச் சரக்காக இருப்பதாலும் அந்நிய முதலீடுகள் இந்நாடுகளில் வருவதற்கான வாய்ப்பு ஒருபுறம் அதிகரித்தது.

மறுபுறம் இந்திய உழைப்புத் திறன் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் வாய்ப்பும் அதிகரித்தது. தகவல் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் பலருக்கு வேலை வாய்ப்புக் கிட்டும் சூழ்நிலை உருவானது. இதுவே புதிய தாராளவாதக் கொள்கை உருவாக்கப் பட்டதன் பின்னணியாகும். இவ்வாறு அதன் உருவாக்கத்திற்கும் வளர்ச்சிக்கும் முதலாளித்துவத்தின் அதிகபட்ச லாபத்தைப் பராமரிக்கும் தேவை மட்டுமே காரணமாக இருந்துள்ளது.

இது யதார்த்தமான நிலையாக இருக்கும் சூழ்நிலையில் புதிய தாராளவாதக் கொள்கையின் தோற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் முதலாளித்துவமே காரணம் என்பதைக் கூறாமல் அதனை மூடிமறைத்து அக்கொள்கை வானத்திலிருந்து திடீரெனக் குதித்த ஒன்று போன்றதொரு எண்ணத்தை ஏற்படுத்துவது புதிய தாராளவாதக் கொள்கை என்ற திரையை விரித்து அதன் பின்னால் இருக்கக்கூடிய முதலாளித்துவத்தை மூடிமறைக்கும் பிரகாஷ் கரத் அவர்களின் கட்சியின் செயலாகும். இதில் பிரதிபலிக்கப்படுவதும் அக்கட்சியின் அப்பட்டமான நாடாளுமன்ற வாதமே.

மத்தியதர வர்க்கத்தின் மீதான எரிச்சல்
அடுத்து உண்மையான எதிரியை அடையாளம் காட்டத் தவறிய அவர் சமூகமாற்றப் போராட்டத்தில் நேசசக்தியாக கருதப்பட வேண்டிய மத்தியதர வர்க்கத்தின் மேல் எரிந்து விழுகிறார்.

புதிய தாராளவாதக் கொள்கையை எதிர்க்காதது அந்த வர்க்கம் என்றும் அதனால் பலனடைந்தது அது என்றும் அது பாதிக்கப்படும் போது ஊழலுக்கு எதிராகப் போராடுகிறது என்றும் அவர் அவர் எழுதிய ஹிந்து நாளிதழ் கட்டுரையில் கூறியுள்ளார்.

அதாவது புதிய தாராளவாதக் கொள்கையின் மூலம் உருவான வாய்ப்பை நடுத்தர வர்க்கம் பயன்படுத்திக் கொண்டதே தவிர அது கோட்பாடு ரீதியாக அதனைத் தேர்ந்தெடுக்க வில்லை. இந்த அமைப்பில் கரத்தாலோ கருத்தாலோ உழைக்கும் எந்த வர்க்கத்திற்கும் அவ்வாறு தேர்ந்தெடுக்கும் வாய்ப்பும் இல்லை.

இயற்கை வளங்களைத் தயங்காது விற்ற மேற்குவங்க அரசு
வேலைவாய்ப்பு மற்றும் வளர்ச்சியை உருவாக்கும் என்ற அடிப்படைகளில் அந்நிய முதலீட்டிற்கு நமது இயற்கைச் சாதனங்களைச் சுரண்ட வழிதிறந்து விட்டதே இன்று நிலவும் பெருமளவிலான ஊழலுக்குக் காரணம் என்று திரு பிரகாஷ் கரத் கூறுகிறார்.

வருந்தத்தக்க விதத்தில் சுட்டும் விரலால் அவர் எதிரியை நோக்கிக் குற்றம் கூறுகையில் மற்ற 3 விரல்கள் அவர் மார்பினைக் காட்டுவதை அவர் மறந்து விடுகிறார். ஆம், சிங்கூர், நந்திகிராம் நிகழ்வுகளை அவர் மறந்து விடுகிறார். அல்லது மக்களின் மறதியின் மேல் அவருக்கு இருக்கும் அதீத நம்பிக்கை அவரை துணிவுடன் இக்கருத்தை முன்வைக்கத் தூண்டியிருக்கிறது.

அவர் கூறலாம் தனது கட்சியின் அரசாங்கம் சிங்கூர், நந்திகிராம் இடங்களைக் கையகப்படுத்துவதிலும் அதை உள்நாட்டு, வெளிநாட்டு முதலாளிகளுக்குத் தொழில் வளர்ச்சிக்குக் கொடுப்பதிலும் ஊழல் நடவடிக்கை எதிலும் ஈடுபடவில்லை என்று. அப்படியானால் அரசாங்கங்களைப் பொறுத்தே ஊழல் நடவடிக்கைகள் அதிகரிக்கின்றனவே அன்றி புதிய தாராளவாதக் கொள்கையை மட்டும் மையமாகக் கொண்டு அது அதிகரிப்பதில்லை என்று அது தவறாகப் பொருள் பட்டுவிடும்.

அதாவது புதிய பொருளாதாரக் கொள்கையே ஊழலுக்குக் காரணம் என்று அவர் உயர்த்திப்பிடிக்கும் முழக்கம் அர்த்தமற்றதாகிவிடும்.

செயலூக்கமுள்ள லோக்பால்
இவ்வாறு அவரது கட்சிக்கே உரித்த பாணியில் முதலில் ஊழலுக்கான காரணம் அன்னா ஹசாரேயின் இயக்கத்தின் ஆதரவாளர்களாக உள்ள மத்தியதர வர்க்கம் ஆதரித்த புதிய தாராளவாதக் கொள்கையே என்ற கருத்தை அவர் முன்வைக்கிறார்.

பின்னர் அன்னா ஹசாரேயின் இயக்கம் வலுப்பெற்றவுடன் வேறு வழியின்றி அதனை அப்படியே ஆதரிப்பதாகக் காட்டிக் கொள்ளாமல் கொண்டுவரப்பட வேண்டியது அரசு கொண்டுவந்த லோக்பால் மசோதாவாகவும் இல்லாமல் அன்னா ஹசாரே பரிந்துரைக்கும் ஜன் லோக்பால் மசோதாவாகவும் இல்லாமல் ஒரு செயலூக்கமான லோக்பாலாக இருக்க வேண்டும் என்று கூறுகிறார். ஆனால் செயலூக்கமான லோக்பால் என்பது என்ன என்பதைப் பற்றி எதுவும் கூறவில்லை.

அரசின் மீதான அருந்ததி ராயின் அதீத நம்பிக்கை
இதுகுறித்து எதிர்மறையான கருத்தை வெளியிட்டுள்ள அருந்ததிராய் அவர்களுக்கு அரசு குறித்த ஒரு அதிஉன்னதப் பார்வை இருப்பது அவர் அவரது கட்டுரையில் முன்வைத்துள்ள கருத்துக்களின் மூலம் வெளிவருகிறது. அதாவது ஜன் லோக்பால் மசோதா நிறைவேறினால் அது அரசின் பொறுப்பிலிருந்து பொது சுகாதாரம், கல்வி ஆகியவை வெளியில் சென்றுவிட்டது போல் நீதி அமைப்பும் வெளியில் செல்வதற்கு வழிவகுத்துவிடும் என்று கூறியுள்ளார். அதன்மூலம் அரசின் பால் அவருக்கு இருக்கக்கூடிய மாயையே வெளிப்படுகிறது.

அரசு என்பது எப்போதுமே ஒரு வர்க்கத்தின் அடக்குமுறைக் கருவியே. அரசு என்பது வர்க்கங்களுக்கு அப்பாற்பட்டதல்ல. அது வழங்கும் கல்வி, நீதி அமைப்பு ஆகிய அனைத்துமே வர்க்க நோக்கங்களைக் கொண்டதே.

தற்போதைய அரசமைப்பு, அது பேணிப் பாதுகாத்த முதலாளித்துவம் நெருக்கடிக்கு ஆட்பட்ட போது மக்களின் வாங்கும் சக்தியைச் செயற்கையாக அதிகரிக்கும் நோக்குடனேயே அரசுத்துறை நிறுவனங்களை அதிகரித்தது. அது தரித்த மக்கள் நல அரசு என்ற வே­த்திற்காகவே பொது சுகாதாரத்தையும் பராமரிக்கத் தொடங்கியது. நாளடைவில் இவ்விரண்டும் தனியார் முதலாளிகளுக்குப் படிப்படியாக தாரைவார்க்கப் பட்டுவிட்டன.

அதுதவிர அன்னா ஹசாரேயின் இயக்கத்திற்கு எதிராக அவர் முன்னிறுத்தும் இயக்கங்கள் மலைவாழ் மக்கள் மற்றும் வேதாந்தா போன்ற நிறுவனங்களை எதிர்த்த இயக்கங்களே ஆகும். இந்த இயக்கங்களுக்கும் அன்னா ஹசாரேயின் இயக்கத்திற்கும் ஒரு மிகப் பெரிய வேறுபாடு இருக்கிறது.

அருந்ததிராய் கூறும் இயக்கங்கள் நாட்டின் ஒரு பகுதியில் மட்டுமே நடைபெறுபவை. அதாவது பகுதித் தன்மை வாய்ந்தவை. ஆனால் அன்னா ஹசாரேயின் இயக்கமோ நாடு முழுவதும் விரவிப் பரவியுள்ள அனைத்து மக்களையும் பாதிப்பிற்கு ஆளாக்கியுள்ள ஒரு வி­யம் குறித்தது. அதாவது ஊழல் என்ற வி­யத்தைக் குறித்தது.

பின் நவீனத்துவம்
அப்படியயன்ன இந்த இரண்டு இயக்கங்களுக்குமிடையில் பெரிய வேறுபாடு உள்ளது என்று சிலருக்குத் தோன்றலாம். தற்போது அடிப்படை சமூகமாற்ற போராட்டங்களுக்கு இடையூறாக இருக்கும் ஒரு முக்கியக் கண்ணோட்டோம் பின்நவீனத்துவக் கண்ணோட்டமாகும்.

அக்கண்ணோட்டப் படி எந்தவொரு சமூகத்திலும் அனைத்து முரண்பாடுகளையும் உள்ளடக்கக் கூடிய ஒரு மையமான முரண்பாடு என்பது இருக்க முடியாது. சமூகத்தின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு முரண்பாடுகள் உள்ளன.

அந்தந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கட்ப் பகுதியினர் அம்முரண்பாடுகளின் தீர்விற்காக ஆங்காங்கே போராடுகின்றனர். அவை அனைத்தையும் பொதுவாக ஒருங்கிணைக்கவும் முடியாது; அதற்கான தேவை இல்லை என்பதாகும். அதாவது பின் நவீனத்துவக் கண்ணோட்டம் ஒட்டுமொத்த சமூக அமைப்பின் அடிப்படை மாற்றத்தை அங்கீகரிக்காததும் ஒருவகையில் அதற்கு எதிரானதுமாகும். அதைத்தான் தெரிந்தோ தெரியாமலோ அருந்ததிராய் ஆதரிக்கிறார்.

அம்பேத்காரின் அரசியல் சட்ட வழியைப் பரிந்துரைக்கும் தலித் அமைப்புகள்
இவைதவிர அன்னா ஹசாரேயின் இயக்கம் அரசை பயமுறுத்திப் பணியவைக்கும் தன்மை வாய்ந்தது எனவும், அவருடைய நோக்கம் அம்பேத்காரின் வழிமுறைகளைப் பின்பற்றிச் சாதிக்கப்பட வேண்டும் எனவும் கருத்துக்கள் பல வந்துள்ளன.

தேச விடுதலைப் போராட்டத்தின் போது கூட அம்பேத்கார் மகாத்மா காந்தியடிகள் உண்ணாவிரதம் இருந்து அதன்மூலம் வெள்ளை அரசாங்கத்திற்கு நிர்ப்பந்தம் கொடுக்கும் போக்கோடு ஒத்துப் போகவில்லை; அவர் அரசியல் சட்ட வழிமுறைகளையே அதாவது நீதிமன்றத்திற்குப் பிரச்னைகளை எடுத்துச் செல்வது போன்ற வழிமுறைகளையே அதனால் எவ்வளவு கால தாமதம் ஆனாலும் கடைப்பிடிக்க விரும்பினார்; அவரது ஆலயப் பிரவேசம் மற்றும் பொதுக் குளத்தில் தலித்துகளும் குடிநீர் எடுப்பது போன்ற கோரிக்கைகள் அந்த வழிமுறைகள் மூலமே சாதிக்கப் பட்டன என்பவை அத்தரப்பினரின் வாதங்களாகும்.

எது சரியான வழி
இவை அனைத்தையும் சீர்தூக்கிப் பார்க்கும் போது அன்னா ஹசாரேயின் இயக்கம் குறித்து உண்மையிலேயே சமூகமாற்ற சக்திகள் எடுக்க வேண்டிய நிலைபாடு என்ன என்ற கேள்வி தற்போது முன்னெழுந்துள்ளது.

நாம் மேலே பார்த்த வகையில் கம்யூனிஸ்ட்கள் மற்றும் இடதுசாரிகள் என்ற பெயரில் இங்கு செயல்படும் அமைப்புகள் அனைத்தின் அணுகுமுறையும் அன்னா ஹசாரேயின் இயக்கத்தை வேறு வழியின்றி அதற்குக் கிட்டியுள்ள மக்கள் செல்வாக்கை மனதிற்கொண்டு ஜீரணித்துக் கொள்ள வேண்டிய நிலையில் உள்ளன; அந்தப் பின்னணியில் அது ஆவலுடன் அணிதிரட்டப்பட வேண்டிய ஒன்றல்ல என்றே கருதுகின்றன.

காங்கிரஸ் கட்சியின் கருத்தான இப்போராட்டம் பாராளுமன்ற ஜனநாயகத்திற்கு எதிரானது என்பதையும் இந்த இடதுசாரிக் கட்சிகள் அடிப்படையில் மறுக்கவில்லை.

இந்த நிலையில் நம்முன் எழுந்துள்ள கேள்விகள் நாடாளுமன்ற ஜனநாயகம் என்பது நாடாளுமன்ற வழிமுறைகள் மூலமே மட்டும் செயல்படுவதை மையமாகக் கொண்டதா?

உண்மையான சமூகமாற்ற சக்திகளைப் பொறுத்தவரையில் நாடாளுமன்ற ஜனநாயக முறை மூலம் மட்டும் மக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு கண்டுவிட முடியுமா?

தலித் அமைப்புகளைப் பொறுத்தவரை இப்பிரச்னையில் எதிர்மறை நிலை எடுப்பதற்குக் காரணம் என்ன?

அருந்ததிராய் போன்றவர்களின் கூற்றில் பல உண்மைகள் இருந்தாலும் பகுதி மக்களின் போராட்டங்கள் ஒட்டுமொத்த சமூகமாற்றத்திற்கு வழிகாட்ட முடியுமா?

இந்தப் பின்னணியில் அன்னா ஹசாரே தொடங்கியுள்ளது போன்ற இந்த இயக்கத்தைப் பொறுத்தவரை உண்மையான கம்யூனிஸ்ட்கள் எடுக்க வேண்டிய நிலைபாடு என்ன? ஆகியவை ஆகும்.

நாடாளுமன்ற ஜனநாயகம் உதயமான விதம்
நாடாளுமன்ற ஜனநாயகம் மன்னராட்சி முடிவுக்கு வந்த நிலையில் எழுந்த அரசியல் அமைப்பாகும். நிலவுடமைப் பொருளாதாரத்தின் பிடியிலிருந்து சமூகத்தை விடுவித்த முதலாளி வர்க்கம் அதனுடைய பொருளாதார நலனுக்கு உகந்த ஒரு அரசு அமைப்பை கட்டியமைக்க விரும்பியதன் விளைவாக நாடாளுமன்ற ஜனநாயகம் உருவானது.

நாடாளுமன்ற ஜனநாயகத்தின் உள்ளார்ந்த ஒரு பலவீனத்தை அன்றைய முதலாளித்துவ சிந்தனையாளர்களும் உணர்ந்தே இருந்தனர். அதாவது நிலவுடமையை எதிர்த்த போராட்டத்திற்குத் தலைமை தாங்கியது முதலாளி வர்க்கமே.

ஆனால் அதன் தலைமையில் கீழ் அணிதிரண்டு அப்போராட்டத்திற்கு வலு சேர்த்தது உழைக்கும் வர்க்கமாகும். உழைக்கும் வர்க்கம் அன்றிருந்த நிலையில் அதற்கு சமூகம் குறித்த கருத்துக்கள் மிகவும் குறைவாகவே இருந்தன.

அதனால் அப்போராட்டத்தில் உடல் ரீதியான பங்கேற்பு அவ்வர்க்கத்திற்கு இருந்ததே தவிர கருத்து ரீதியான பங்கேற்பு அதற்கு இருக்கவில்லை.

அன்றிருந்த நிலையில் அவ்வர்க்கத்திற்குப் பெரிய அளவில் கருத்துக்களும் இருந்திருக்க முடியாது. எனவே அவ்வர்க்கம் அதன் நலன்களை மனதிற்கொண்ட முழுமையான பங்கினை முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சி காலகட்டத்தில் ஆற்ற முடியாமல் இருந்தது.

அந்த நிலையில் சமூகம் குறித்த புரிதல் பெருமளவு இல்லாதிருந்த பெரும்பான்மை மக்கள் வாக்களிப்பு மூலம் மன்னரையே மீண்டும் நாடாளுமன்ற அமைப்பில் பிரதமராகவோ ஜனாதிபதியாகவோ கொண்டுவந்து விட்டால் அவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் பிரதமரோ ஜனாதிபதியோ தங்களுக்குக் கிட்டியுள்ள பெரும்பான்மையைப் பயன்படுத்தி நாடாளுமன்ற முறையையே தூக்கியயறிந்து விட்டு மீண்டும் மன்னாராட்சி என்ற நிலையை ஏற்படுத்தி விட்டால் என்ன செய்வது என்ற ஐயம் முதலாளிகளின் மனதில் இருந்தது.

அதனால் தான் பல காலம் அனைவருக்கும் வாக்குரிமை என்ற கண்ணோட்டம் அமுலில் இல்லாமல் இருந்தது. மேட்டுக்குடி மக்களுக்கு மட்டும் வாக்குரிமை அல்லது படித்தவர்களுக்கு மட்டும் வாக்குரிமை என்ற வரையறைகள் பல நாடுகளில் பல காலம் நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பிலேயே இருந்தது.

அதற்கான காரணம் வாக்காளர்கள் சமூகம் குறித்த புரிதலின்றி வாக்களிக்க அனுமதிக்கப் பட்டால் அவர்கள் வாக்குரிமையை சரியாக பயன்படுத்த மாட்டார்கள் என்ற அச்சமே. அந்த அச்சத்தின் காரணமாகவே நாடாளுமன்றத்தோடு அரசியல் சட்டம் என்று ஒன்றும் ஏற்படுத்தப் பட்டது.

அந்த அரசியல் சட்டப்படி நாடாளுமன்றம் எதற்கு எதிராக அல்லது ஆதரவாக வேண்டுமானாலும் சட்டங்கள் இயற்றலாம். ஆனால் அது அடிப்படை உரிமைகளை பாதிக்கும் விதத்தில் சட்டம் இயற்ற முடியாது.

அப்படிப்பட்ட சட்டங்களை அது இயற்றினால் அதை நீதி மன்றங்களில் கேள்வி எழுப்பி அவை அமுலாகாமல் இருக்கச் செய்யலாம் என்ற வரையறை வைக்கப்பட்டது. எனவே நாடாளுமன்ற ஜனநாயகத்தின் மிகமுக்கியப் பகுதியே சட்டத்தின் ஆட்சி என்பதுதான். 
உண்மையில் அரசாட்சியை நடத்துவது நாடாளுமன்றங்கள் அல்ல. முதலாளித்துவ நலன்களைப் பாதுகாப்பதற்காக கொண்டுவரப்பட்ட போலீஸ், ராணுவம், நீதி அமைப்பு, நிர்வாகம் போன்றவையே நிரந்தரமாக ஆட்சியை நடத்துகின்றன.

அடிப்படை உரிமைகள் தோன்றியதன் அடிப்படை
அடிப்படை உரிமைகள் என்று முதலாளித்துவம் முன்வைத்ததும் முதலாளித்துவ தனிச்சொத்து உரிமையையும் அதனை ஈட்டுவதற்கு உரிய வாய்ப்புகளையும் பயன்படுத்துவதை மனதிற் கொண்டுதானே தவிர உரிமைகள் மீதான அதன் அபிமானத்தால் அல்ல.

நாடாளுமன்ற ஜனநாயகம் தோன்றிய காலத்தில் அதன் செயல்பாட்டு நியதிகளை வகுத்த முதலாளித்துவ சிந்தனையாளர்களுக்கு அழுக்கும் தூசியும் படிந்து சமூக சிந்தனைகளை அறிய வாய்ப்பில்லாத நிலையில் இருக்கும் உழைக்கும் மக்களுக்கு அடிப்படை உரிமைகள் என்ற பெயரில் சில உரிமைகளை தந்தாலும் அவற்றை அவர்கள் பயன்படுத்த முடிந்தவர்களாக ஆகிவிடுவார்கள் என்ற எண்ணம் இருக்கவில்லை.

ஜனநாயகமும் புரிதலும்
சுருக்கமாகச் சொன்னால் ஒரு சிறுபான்மை வர்க்கத்தின் நலனுக்காக செயல்படக் கூடிய ஒரு அமைப்பு என்றால் கூட அது திறம்படச் செயல்பட அதுகுறித்த புரிதல் வேண்டும். அதனால் தான் புரிதல் உள்ளவர்களுக்கு மட்டும் வாக்குரிமை என்ற போக்கு பல காலம் இருந்தது.

ஆனால் நாடாளுமன்ற ஆட்சிமுறைக்கு வழிவகுத்த முதலாளித்துவ உற்பத்தி முறை மனிதனை மனிதன் சுரண்டுவதை அடிப்படையாகக் கொண்டதாக இருந்தது. அத்தகைய சுரண்டலினால் நிலவுடமை அமைப்பிலிருந்த ஏற்றத் தாழ்வுகள் நீங்கி அதைவிடக் கொடிய ஏற்றத் தாழ்வுகள் முதலாளித்துவ அமைப்பில் தலை தூக்கலாயின.

மாமேதை மார்க்ஸ் கூறியது போல ஒரு நிலப்பிரபு அவனுடைய பண்ணை அடிமையை உண்பித்துப் பராமரித்துக் காப்பதை அவனது கடமையாகக் கொண்டிருந்தான். ஆனால் முதலாளித்துவ அமைப்பில் அத்தகைய அடிப்படைப் பாதுகாப்பு முதலாளிக்குக் கீழ் வேலை செய்யும் தொழிலாளருக்கு இல்லை.

இந்தப் பின்னணியில் புதிய சமூகத்தின் அடிப்படைக் கோளாறுகளை ஆய்வு செய்த சிந்தனைகள் தொழிலாளி வர்க்கத்தின் கருத்து ரீதியான ஆயுதங்களாக ஆயின. அத்தகைய கருத்து ரீதியான புரிதல்கள் வந்தவுடன் நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு ஒரு புதுவகைச் சிக்கல் தோன்றியது.

அதாவது அது மனதில் கொண்டு வழங்கிய உரிமை குறித்த கண்ணோட்டங்கள் அது எண்ணியிருந்த வரையறையைத் தாண்டி பயன்படுத்தப்படும் சூழ்நிலை உருவானது. அதாவது தொழில் தொடங்கும் உரிமை, சொத்துரிமை, ஒவ்வொருவரும் அவர்கள் விரும்பும் இடங்களுக்குச் செல்லவும் விரும்பும் நிறுவனத்தில் வேலை செய்யவும் அவர்களுக்கு இருந்த உரிமை ஆகிய உரிமைகளே முதலாளித்துவச் சிந்தனை வாதிகளுக்குத் தேவைப்பட்ட உரிமைகள்.

அவை தவிர அவர்கள் வழங்கிய பேச்சுரிமை, எழுத்துரிமை, கூட்டம் கூடும் உரிமை போன்ற உரிமைகள் கருத்து ரீதியாக பழைய நிலவுடமைச் சிந்தனைகளை முறியடிப்பதற்குத் தேவையான வாய்ப்புகளை வழங்கும் என்ற அடிப்படையிலேயே அவர்களால் கொண்டுவரப் பட்டன. ஆனால் அந்த உரிமைகளை உழைக்கும் மக்களும் பயன்படுத்தத் தொடங்கிய போது முதலாளித்துவத்திற்குத் தலைவலி ஆரம்பித்தது. அது நினைத்தது ஒன்று நடந்தது ஒன்றாகிவிட்டது.

ஆனாலும் கூட உழைப்பாளிகள் அனைவருக்கும் இந்த அமைப்பு குறித்த புரிதல் முழுமையாக எட்டுவதற்கான வாய்ப்புகள் வழங்கப்பட வில்லை. முதற்கண் இவற்றைப் போதிக்கும் கல்வி நிலையங்களில் உழைக்கும் மக்களுக்குப் பெரும்பாலும் இடமில்லை.

அடுத்தது இதுகுறித்து உழைக்கும் மக்களுக்கு இருக்க வேண்டியது ஒரு விமர்சனபூர்வ புரிதலாகும். அத்தகைய புரிதல் கல்வி நிலையங்களில் கற்பிக்கப்படும் கல்வி மூலம் வரவும் வராது. அதனை மக்கள் இயக்கங்கள் தான் அவர்களுக்குப் புகட்ட வேண்டும்.

பெரும்பான்மைக்கு ஜனநாயகம் இல்லை
இந்தப் பின்னணியில் பெரும்பான்மை மக்களைப் பொறுத்தவரை தற்போதுள்ள முதலாளித்துவ நாடாளுமன்ற ஜனநாயகம் பெயரளவிற்குக் கூட நன்மை பயக்க வல்லதாக இல்லாமல் போய்க் கொண்டுள்ளது.

அதாவது சட்டத்தின் ஆட்சி என்ற முதலாளித்துவ ஜனநாயகம் முன்னிறுத்திய கண்ணோட்டம் சட்டத்திற்கும் நீதிக்கும் இடையே இருந்த இடைவெளி மிகக் குறைவாக இருந்த காலத்தில் பொருத்தமுடையதாக இருந்தது.

ஆனால் முதலாளித்துவம் நெருக்கடி சூழ்ந்ததாக மென்மேலும் ஆகிய வேளையில் ஒரு சிலர் கைகளில் செல்வம் குவிவதும் செல்வத்தை உருவாக்கிக் கொடுக்கும் மிகப் பெரும்பான்மை மக்கள் வறுமையில் உளழ்வதும் என்றாகிவிட்ட நிலையில் அது இன்னும் பொருத்தமில்லாததாக ஆகிக் கொண்டுள்ளது.

கருத்து சுதந்திரமே உண்மையான சுதந்திரம்
இயல்பாகவே மிகப் பெரிதாக வளர்ந்துள்ள இப்போக்குக்கு உகந்த வகையில் சட்ட மாறுதல்கள் முதலாளித்துவத்தைக் காப்பதற்கென்று இருக்கும் நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பில் கொண்டுவரப்படும் என்று எதிர்பார்க்க முடியாது.

இச்சூழ்நிலையில் அரசியல் சட்டம் முன்னிறுத்தியுள்ள அடிப்படை உரிமைகளில் ஒன்றான கருத்து சுதந்திரம் மட்டுமே அனைத்து மக்களையும் பொறுத்தவரையில் உண்மையான உரிமையாக மாறிவருகிறது. அதுவேதான் உடமை வர்க்கங்களுக்கு தலைவலியாகவும் ஆகிவருகிறது.

கருத்து சுதந்திரமும் அக்கருத்துக்களை மையமாக வைத்து அவற்றைச் செயல்படுத்தும் அமைப்புகளை உருவாக்கிச் செயல்படும் சுதந்திரமும் மட்டுமே உழைக்கும் மக்களைப் பொறுத்தவரையில் இன்றுள்ள முதற்பெரும் சுதந்திரமாகும்.

ஆனால் அதில் எண்ணிறந்த கட்டுப்பாடுகளும் நிபந்தனைகளும் ஆளும் வர்க்கங்களுக்குச் சேவை செய்யும் அரசுகளால் ஒன்றன்பின் ஒன்றாகக் கொண்டுவரப்பட்டுக் கொண்டே இருக்கின்றன.

சட்ட ரீதியாக இவ்வாறு கொண்டுவரப் படுவது ஒரு மடங்கு என்றால் கருத்து மற்றும் அமைப்பு சுதந்திரத்திற்கு எதிராக ஆளும் வர்க்கச் சார்பு நிர்வாகம் கொண்டுவரும் தடைகள் மிகப் பல மடங்குகள் உள்ளன.

தெருவில் அரங்கேறும் ஜனநாயகம்
இந்த நிலையில் ஜனநாயகம் என்பதை பெரும்பான்மை மக்களின் நலன்களைப் பிரதிபலிப்பது என்ற அடிப்படையில் எடுத்துக் கொண்டால் கூட நாடாளுமன்ற நடைமுறைகளை மட்டும் நம்பியிருப்பது அதனைச் செய்வதற்கு எள்ளளவும் உதவாது. அது சிறுபான்மை ஆளும் வர்க்கத்தின் நலன்களை மென்மேலும் பாதுகாக்கும் வகையில் செயல்படுவதாகவே இருக்கும்.

எனவே இந்த அமைப்பில் அனைத்து மக்களையும் பொறுத்தவரையில் மிச்சசொச்சமாக இருக்கும் கொஞ்சநஞ்ச ஜனநாயகத்தையும் பாதுகாக்க வேண்டுமென்றால் தெருவில் அரங்கேறும் ஜனநாயகம் அதாவது நாடாளுமன்ற தேர்தல் வழிமுறைகளை மட்டுமே முழுமையாக நம்பியிராத ஜனநாயகம் அமுலாக்கப்படுவது தவிர்க்க முடியாததாகும்.

இந்தக் கேள்வியைத் தான் பிரகாஷ் கரத் நாடாளுமன்ற வாதம் அவரது சிந்தனையில் மண்டி மலிந்து விட்டதால் வேறொரு விதமாக அணுகுகிறார். 
அதாவது நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்படும் மசோதாக்களுக்கு எதிராகப் போராடும் உரிமை உள்ளதா இல்லையா என்ற தொழில்நுட்ப ரீதியான கேள்வியை முன்னிறுத்தி அதற்குப் பதிலாக ஆம், அந்த உரிமை உள்ளது. அதனை நாங்கள் கடந்த காலத்தில் பலமுறை பிரயோகித்திருக்கிறோம் என்று கூற வருகிறார். கூர்மையாகப் பார்த்தால் நாடாளுமன்றங்களின் போதாமையை நாசூக்காக மூடிமறைப்பதாகவே அவரது கருத்து உள்ளது.

எனவே உண்மையான சமூகமாற்ற சக்திகளைப் பொறுத்தவரையில் அன்னா ஹசாரே தொடங்கி வைத்தது போன்ற இயக்கங்கள் அவை ஏற்படுத்தியுள்ள மக்கள் எழுச்சியினை மனதிற்கொண்டு ஆதரிக்கவும் செழுமைப்படுத்தப்படவும் வேண்டும்.

ஏனெனில் தெருவில் அரங்கேறும் ஜனநாயகத்தைக் கொண்டுவர வேண்டும்; அதில் உழைக்கும் வர்க்கம் ஒரு முன்னேறிய பங்கினை வகிக்க வேண்டுமென்றால் கூட அதற்குரிய புரிதல் வேண்டும். அத்தகைய புரிதலை இதுபோன்ற இயக்கங்களே மிக அதிகமாக வழங்க வல்லவை.

உழைக்கும் வர்க்க இயக்கங்கள் இவற்றில் பங்கேற்பதன் மூலம் இத்தகைய இயக்கங்களுக்கு ஒரு சரியான இலக்கினை நிர்ணயிக்க முடியும். ஏனெனில் ஊழல் என்பது ஒரு அடிப்படையான இலக்காகாது. ஆனால் அதனை அவ்வியக்கத்தில் பங்கேற்காமல் எடுத்துரைப்பது தார்மீகமாகப் பார்த்தால் சரியானதல்ல.

அதுமட்டுமின்றி ஒன்றில் பங்கேற்காமல் அவ்வியக்கத்தை சரியான இலக்கை நோக்கியதாக ஆக்குவது என்பதையும் செய்ய முடியாது. 
எனவே அதில் பங்கேற்கும் வேளையில் பல்வேறு ஊழல் குறித்த வி­யங்களை ஆக்கபூர்வமாக அதில் கலந்து கொள்வோரிடம் விவாதிப்பதற்கான வாய்ப்பு நிச்சயம் சமூகமாற்ற சக்திகளுக்குக் கிடைக்கும். அந்த வாய்ப்பினைச் சரிவரப் பயன்படுத்தினால் ஊழலுக்கு ஊற்றுக் கண்ணாக உள்ள முதலாளித்துவத்தை முக்கிய எதிரியாக மக்கள் முன் கொண்டுவந்து நிறுத்த முடியும்.

இட ஒதுக்கீட்டால் ஏழை தலித்துகளுக்கு என்ன பயன்
இவ்வியக்கத்தை தலித் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் சில இடங்களில் வெளிப்படையாகவும் ஏறக்குறைய அனைத்து இடங்களிலும் மானசீகமாகவும் எதிர்ப்பதற்கான காரணம் என்ன?

தலித் அமைப்புகள் என்று இன்று செயல்படுபவை உண்மையிலேயே அனைத்து தலித் மக்களின் நலனையும் பிரதிபலிப்பவையாக இல்லை. அவை அரசு கடைப்பிடிக்கும் இடஒதுக்கீட்டுக் கொள்கையால் பலனடைந்த ஒரு பகுதி மக்களின் நலன்களை மட்டும் உண்மையில் உயர்த்திப் பிடிப்பவையாகவும் அதற்குச் சாதகமாக பெரும்பான்மை தலித் மக்களின் பின்தங்கிய நிலைகளை எடுத்துக் காட்டாக முன்வைப்பவையாகவுமே உள்ளன.

அதாவது இடஒதுக்கீட்டுக் கொள்கை அது இன்று அமுலாகும் விதத்தில் தலித் முன்னேற்றம் என்ற அடிப்படைக் கேள்விக்கு மிகப் பொருத்தமுடையதாக இல்லை. அதாவது இடஒதுக்கீட்டுக் கொள்கையினால் பலனடைந்து சமூகத்தில் ஒரு குறிப்பிட்ட பொருளாதாரத் தரத்தை அடைந்தவர்களின் நலன்களை மென்மேலும் பாதுகாத்து மேம்படுத்துவதாகவே அது இருக்கிறது. 
பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கக் கூடிய விவசாயக் கூலிகளாக இருக்கும் தலித் மக்களுக்கு அதன் பயன்பாடு மிகவும் குறைவாகவே உள்ளது.

பகுத்தறிவுக்குப் பொருந்தாத விதத்தில் வழங்கப்படும் சில பலன்களை அனுபவிக்கும் ஒரு மக்கட் பகுதியினரிடம் ஒரு வகையான அப்பலன்களை எப்படியும் பாதுகாத்து வைத்திருக்க வேண்டும் என்ற சுயநலம் இயல்பாகவே வளர்ந்து விடுகிறது.

சுயநல சக்திகளைப் பொறுத்தவரையில் இயக்கம் என்பது அது எந்த வடிவத்தில் வந்தாலும் அது ஒரு தீக்கனவாகவே உள்ளது. ஏனெனில் பெருமளவில் மக்களின் உணர்ச்சிபூர்வ பங்கேற்புடன் நடைபெறும் எந்த இயக்கத்திலும் தர்க்கபூர்வமான சரியான வி­யங்களே இறுதியில் மேலெழுந்து நிற்க வல்லவையாக ஆகிவிடும்.

அன்னா ஹசாரேயின் இயக்கம் அத்தகைய ஒரு இயக்கச் சூழலை ஏற்படுத்திய போது அவ்வியக்கத்தில் சரியான பார்வையுடன் கலந்து கொள்ளவல்ல இடதுசாரி முற்போக்கு சக்திகள் பெருமளவில் பங்கேற்காத நிலையில் அவ்வியக்கத்தில் இன்றைய தலித் அமைப்புகள் முன்வைக்கும் விதத்தில் தலித் நலன் என்று கருதாத சக்திகளே அதில் அதிகம் இருந்தன. அது இந்தத் தலித் அமைப்புகளின் மத்தியில் ஒரு அச்சத்தை தோற்றுவித்தது. 
தலித் மக்களின் இன்றைய யதார்த்த நிலையை சரியாகப் புரிந்து கிராமப்புறங்களில் வசிக்கும் இதுவரை இடஒதுக்கீட்டின் பலன்களை அடையாத மக்களுக்கு மட்டும் என அந்த 18 சதவீத இடஒதுக்கீட்டை கொண்டுவந்தால் இடஒதுக்கீடு இப்போதும் கூட பொருத்தமுடையதாக இருக்கும் என்ற கருத்தை முன்வைப்பவையாக இந்த இயக்கங்கள் இருக்குமேயானால் அவை அன்னா ஹசாரேயின் இயக்கத்தை எதிர்ப்பவையாக இருந்திருக்காது.

தற்போது நடந்துள்ள ஊழல்கள் அனைத்தின் ஊற்றுக்கண்ணாக முதலாளித்துவ நிறுவனங்கள் இருந்த போதும் அவற்றில் சில நிறுவனங்கள் அன்னா ஹசாரேயின் ஊழலுக்கு எதிரான இயக்கத்தை ஆதரித்தன. 
அவற்றின் நோக்கம் ஊழலுக்கும் முதலாளித்துவ நிறுவனங்களுக்கும் இடையில் உள்ள தொடர்பு மக்கள் மனதில் பதிந்துவிடக் கூடாது; மேலும் இந்த இயக்கம் ஊழல் என்ற வரையறையைத் தாண்டி சென்றுவிடக் கூடாது என்பதாகும்.

அந்த விதத்திலேயே அன்னா ஹசாரேயின் இயக்கத்தை எதிர்த்த தலித் அமைப்புகளின் செயல்பாடுகளும் இருந்தன. அவர்களது கருத்தைப் பிரதிபலிக்கும் விதத்தில் ஹிந்து போன்ற பத்திரிக்கைகளில் வந்த கட்டுரைகளில் முன்வைக்கப்பட்ட கருத்துக்களும் இருந்தன.

சாராம்சத்தில் அவை அன்னா ஹசாரேயின் நோக்கத்தைப் பிரதிபலிக்கும் விதத்தில் ஆனால் அதே சமயத்தில் அம்பேத்கார் பின்பற்றிய வழிமுறையில் ஊழலுக்கு எதிரான இயக்கம் நடைபெற வேண்டும் என்று இருந்தன.

அதாவது அரசியல் சட்ட வழிமுறைகள் மற்றும் நீதிமன்ற நடைமுறைகளின் மூலமாகவே ஊழல் போன்ற பிரச்னைகளுக்கு முடிவு காணப்பட வேண்டும். அதை விடுத்து உண்ணாவிரதம் போன்ற அரசுக்கு நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபடக் கூடாது என்பதாக இருந்தன.

அவர்களது அச்சம் அன்னா ஹசாரேயின் இயக்கம் சட்ட வரையறையைத் தாண்டி செல்லுமேயானால் அது எந்த இடையூறுமின்றி ஆனால் பொருத்தமற்ற விதத்தில் முன்னேறிய தலித் மக்கள் பலர் அனுபவிக்கும் சலுகைகளின் மீது கைவைப்பதாக ஆகிவிடும் அவ்வாறு ஆக அதை அனுமதிக்கக் கூடாது என்பதாக இருந்தது.

அம்பேத்கார் வழி
விடுதலைப் போராட்ட காலத்தில் ஒட்டுமொத்த தேச விடுதலையை மனதிற்கொண்டு காந்தியடிகள் தனது போராட்ட வழிமுறைகளை வகுத்தெடுத்துச் செயல்பட்ட வேளையில் அவர் சட்ட ரீதியான வழிமுறைகளைக் காட்டிலும் அன்று நிலவிய தார்மீக மதிப்புகளைத் தட்டி எழுப்பியே விடுதலைப் போராட்ட இயக்கத்தை நடத்தினார்.

அதனால் தான் மிகப்பரந்த அளவில் வெள்ளையருக்கு எதிராக அதிகபட்ச மக்களைத் திரட்ட முடிந்தவராக அவர் இருந்தார்.

ஆனால் அம்பேத்காரின் இலக்கோ ஒரு குறிப்பிட்ட மக்கட் பகுதியினரின் ஜனநாயக உரிமைகளையும் முன்னேற்றத்தையும் மட்டுமே கருத்திற்கொண்டதாக இருந்ததால் அவரால் அரசியல் சட்ட நீதிமன்ற நடைமுறைகளை மட்டும் நம்பியே செயல்பட முடிந்தது. வெள்ளையரின் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு இடங்கொடுப்பதாகவும் அது இருந்ததால் அதன்மூலம் சில வி­யங்களை அவரால் சாதிக்கவும் முடிந்தது.

முதலாளித்துவ அரசின் பகடைக் காய்கள்
தற்போது அவர் பின்பற்றிய வழிமுறைகளே கையிலெடுக்கப்பட வேண்டும் என்ற வி­யத்தை முன்னிலைப்படுத்துவதற்கு ஒரு நோக்கம் உள்ளது. இந்த நோக்கத்தின் அடிப்படையிலேயே அன்னா ஹசாரேயின் இயக்கத்தை அவர்கள் எதிர்க்கின்றனர்.

அதாவது சமூகத்தில் மிகப் பெரும்பான்மையான தலித் மக்கள் பொருளாதார ஏற்ற தாழ்வு காரணமாக அவர்களைச் சூழ்ந்துள்ள பின்தங்கிய நிலையிலிருந்து தங்களை மீட்டெடுத்துக் கொள்ள முடியாத சூழ்நிலையில் உள்ளனர்; அந்நிலையில் தலித் முன்னேற்றம் என்ற அடிப்படையில் கொண்டுவரப்பட்ட இடஒதுக்கீட்டுக் கொள்கையின் மூலம் ஏற்கனவே பலனடைந்த ஒருசிலர் தொடர்ந்து அந்தப் பலன்களை அவர்கள் இடஒதுக்கீட்டுச் சலுகைகளின் மூலமாகப் பெற்ற அந்தஸ்த்தை மையமாக வைத்து மென்மேலும் எந்த இடைஞ்சலுமின்றி அனுபவிப்பதற்கு விரும்புகின்றனர்.

அதற்கு அரசியல் சட்ட, நீதிமன்ற நடைமுறைகளே உகந்தவை என்பதால் அம்முறைகள் அவர்களால் பரிந்துரைக்கப்படுகின்றன. அதாவது இயக்கத்தின் காரணமாக எல்லாவகையான தர்க்க ரீதியற்ற உரிமைகளும் சலுகைகளும் கேள்விக்குரியதாக்கப்படும் சூழ்நிலை உருவாகிவிடும்; அது தங்களைப் பாதிக்கும் என்று அவர்கள் அஞ்சுகின்றனர்.

அதன் காரணமாகவே அன்னா ஹசாரேயின் இயக்கம் மறைமுகமாக வன்முறையை அரசின் மேல் பிரயோகிப்பதாக உள்ளது என்ற கருத்தை முன்வைக்கின்றனர். அதன்மூலம் தனது முதலாளித்துவ சேவையினால் ஊழல் போக்குகள் கட்டுப்படுத்த இயலா வண்ணம் தலைவிரித்தாட அனுமதித்திருக்கும் அரசாங்கத்தின் ஆதரவாளர்களாக அவர்கள் ஆகியுள்ளனர்.

அதாவது சந்தர்ப்பவாத அரசியலுக்கு பயன்படும் பகடைக் காய்களாக தங்களது அமைப்புகளை ஆக்கிக் கொண்டுள்ளனர்.

மலைவாழ் மக்களின் முன்னேற்றம்
எந்தவொரு இயக்கமும் தர்க்க ரீதியான பல கேள்விகளுக்கு சரியான பதில் கொடுக்கக் கூடியதாக இருக்கும் போது மட்டுமே அது நீடித்தத் தன்மை வாய்ந்ததாகவும் கருத்து ரீதியாக முன்னேறிய மக்கட்பகுதியினரை ஈர்க்கக் கூடியதாகவும் ஆகும் அல்லது ஆகமுடியும்.

அந்த அடிப்படையில் அருந்ததிராய் அவர்கள் தான் சரியானதெனக் கருதும் எந்த இயக்கத்திற்கு அன்னா ஹசாரேயின் ஆதரவு வரவில்லை என்று கூறுகிறாரோ அந்த மலைவாழ் மக்களை ஒருங்கிணைத்து மவோயிஸ்ட்டுகள் போன்றோர் நடத்தக்கூடிய இயக்கம் தர்க்க ரீதியாக எழும்பவல்ல பல கேள்விகளுக்கு சரியான பதில் வழங்க முடியாததாகவே உள்ளது.

அதாவது அந்த இயக்கம் அது நடத்தப்படும் விதத்தை பார்க்கும் போது என்றென்றும் பின்தங்கிய நிலையில் வாழ்வதற்காக தள்ளப்பட்டுள்ள மலைவாழ் மக்கள் மலைவாழ் மக்களாகவே அவர்களது அந்த பின்தங்கிய வாழ்க்கை முறை தொடர முழுவாய்ப்புத் தரப்பட வேண்டும் என்ற கருத்தினைக் கொண்டதாகவே காட்சியளிக்கிறது.

மலைவாழ் மக்கள் படிப்படியாக முன்னேறி சமூகத்தின் பிற பகுதி மக்களைப் போல் வாழ்வதற்குத் தேவையான ஏற்பாடுகளை செய்வதே எந்த ஒரு முற்போக்கு இயக்கதினதின் தலையாயப் பணியாக இருக்கும்.

அதே சமயத்தில் தற்போது அரசாங்கம் மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள் அப்படிப்பட்ட முன்னேற்றத்தை மலைவாழ் மக்களின் வாழ்க்கையில் கொண்டுவர வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டதாக இல்லை. அது பல உள் மற்றும் வெளிநாட்டு தொழில் நிறுவனங்கள் மலைவாழ் மக்கள் வசிக்கக்கூடிய பகுதிகளில் ஏராளமாகக் கிடைக்கும் கனிம வளங்களை பயன்படுத்தி ஆதாயம் ஈட்ட வழிவகுப்பதாகவே உள்ளது.

ஆனால் அந்த கனிம வளங்களைப் பொறுத்தவரை அவற்றை மலைவாழ் மக்கள் பயன்படுத்தவே முடியாது. இந்த நிலையில் வேலை வாய்ப்பு போன்ற வி­யங்களில் மலைவாழ் மக்களுக்கு முன்னுரிமை அளிக்கும் விதத்தில் அரசுத்துறையில் அந்தக் கனிம வளங்களைப் பயன்படுத்தும் வகையிலான தொழில் நிறுவனங்கள் ஏற்படுத்தப் படலாம் என்பது போன்ற கோரிக்கைகளை வைத்து அம்மக்களின் இயக்கங்கள் நடத்தப்பட்டால் அது தொலைதூரப் பார்வை கொண்டதாக இருக்கும்.

ஆனால் அப்பகுதியில் எக்காரணம் கொண்டும் சாலை வசதிகளே ஏற்படுத்தப்படக் கூடாது என்ற அடிப்படையில் மாவோயிஸ்ட்டுகளால் தற்போது நடத்தப்படும் இயக்கம் அவர்களின் தற்காப்பு நோக்கத்தை பெருமளவு மனதிற்கொண்டதாக உள்ளதே தவிர மலைவாழ் மக்களின் நீண்டகால நலன்களைப் பாதுகாக்கும் தன்மைவாய்ந்த செயல்பாடாக இல்லை.

தங்களது அந்த நோக்கத்தை மூடிமறைக்கவே மலைவாழ் மக்களின் வாழ்வாதாரங்கள் பறிபோய்விடும் என்ற முழக்கத்தை அவர்கள் முன்வைக்கின்றனர். தலைகீழாக நின்றாலும் இன்றில்லாவிட்டால் நாளை மலைவாழ் மக்கள் வேட்டையாடுவதற்கும் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் மட்டுமென அப்பகுதியின் நிலப்பரப்பு முழுவதையும் நிரந்தரமாக பாதுகாத்துப் பராமரித்து அவர்களுக்கு வழங்க முடியாது.

மலைவாழ் மக்கள் வாழும் பகுதிகள் நீங்கலாக மற்ற பகுதிகளில் வசிக்கும் சிந்திக்கும் திறனுள்ள மக்கள் மனதில் இக்கேள்வி பெரிதாக எழுந்து நிற்பதால் அப்போராட்டம் பிற பகுதி மக்களின் ஆதரவினைப் பெற முடியாததாக நடைமுறையில் உள்ளது.

அதாவது அங்குள்ள கனிமவளம் போன்றவை தனியாரால் கொள்ளையடிக்க அனுமதிக்கப்படக் கூடாது. அதே சமயத்தில் அது முறையாக அரசுத்துறையில் தொழிற்சாலைகள் ஏற்படுத்தப்பட்டு பயன்படுத்தப்பட வேண்டும். அதில் உருவாகும் வேலை வாய்ப்புகள் அப்பகுதியில் உள்ள மக்களுக்கு முன்னுரிமை கொடுத்து நிரப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைத்து நடத்தப்பட்டால் நிச்சயமாக பரந்த அளவிலான சிவில் சமூகத்தை அது கவரக் கூடியதாகவே இருக்கும்.

மலைவாழ் மக்களின் இயக்கத்தில் உள்ள இந்த பலவீனம் சோசலிச ரீதியிலான அடிப்படை சமூகமாற்றத்தை மனதிற்கொண்டு செயல்படுவோருக்கு மட்டுமே எளிதில் புலப்படும். அரசு குறித்தும் அது செயல்படுவதன் நோக்கம் குறித்தும் அனுபவப்பூர்வமாக பெறப்பட்டுள்ள சரியான பார்வையின்றி அது வர்க்கங்களுக்கு அப்பாற்பட்ட பொதுவான அமைப்பு என்ற கண்ணோட்டத்தைக் கொண்டு செயல்படும் அருந்ததிராய் போன்றவர்கள் மலைவாழ் மக்களின் நலனுக்காக என்ற அடிப்படையில் நடத்தப்படும் அந்த இயக்கத்தில் பெரும்பான்மை மலைவாழ் மக்கள் கலந்துகொள்ளுகிறார்கள் என்ற அடிப்படையில் அவற்றை ஆதரிக்கின்றனரே தவிர அவற்றின் இறுதி இலக்கு என்ன என்ற கேள்வியை முன்னிறுத்தி அது சரியானதா தவறானதா என்று சீர்தூக்கிப் பார்த்து அந்த அடிப்படையில் அதனை ஆதரிக்கவில்லை.

பரந்த இயக்கம்
இந்நிலையில் அதுபோன்ற இயக்கங்களின் ஒப்புநோக்குமிடத்துக் குறுகலான வரையறைகளைக் காட்டிலும் பரந்த அடிப்படையில் அனைத்து மக்களையும் ஒருங்கிணைக்க வல்லதாக நடைபெற்ற அன்னா ஹசாரேயின் இயக்கம் சமூகமாற்ற கருத்தோட்டம் கொண்டவர்களைப் பொறுத்தவரையில் உன்னிப்பாக கவனிக்கப்பட வேண்டியதாகும். ஏனெனில் இன்று மக்களிடம் உள்ள பிரச்னையே அவர்களிடம் தேவையான அளவிற்கு அவர்களைப் பாதிக்கும் வி­யங்கள் குறித்த எழுச்சி மனநிலை இல்லாததுதான்.

உண்மையான சமூகமாற்ற மனநிலை கொண்டவர்கள் அடிப்படையில் அத்தகைய எழுச்சி எங்காவது தோன்றாதா என்று ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும்.

தத்துவார்த்த அடிப்படையில் பார்த்தால் மூலதனத்திற்கும் உழைப்பிற்கும் இடையிலான முரண்பாடு அதாவது சமூக ரீதியான உற்பத்திக்கும் தனிநபர் ரீதியிலான அபகரிப்பிற்கும் இடையிலான முரண்பாடு எத்தனை கூர்மையடைந்து முற்றியிருந்தாலும் அந்த உள் முரண்பாட்டின் முதன்மை அம்சமான உழைக்கும் வர்க்கத்தை ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றும் வண்ணம் வளர்ப்பதற்குத் தேவையான வெளி முரண்பாடாக இத்தகைய நாடு தழுவிய இயக்கங்கள் பயன்படுத்தப்பட வேண்டும். அதாவது ஜே.பி., அன்னா ஹசாரே ஆகியோர் தட்டியயழுப்பிய இயக்கங்கள் பயன்படுத்தப்பட வேண்டும்.

ரஷ்யாவில் முதல் உலகப்போர் வெளி முரண்பாடாகப் பயன்பட்டது நினைவில் நிறுத்தப்பட வேண்டும். அதுபோன்ற தீர்மானகரமான முரண்பாடுகள் இனி உலகில் தோன்றும் என்றே கூற முடியாது. அந்நிலையில் தற்போது அன்னா ஹசாரேயினால் தட்டி யெழுப்பப்பட்டு மாணவர், இளைஞர் சக்தியை ஈர்த்துள்ள இந்த இயக்கங்கள் இன்றைய நிலையில் அத்தகைய வெளி முரண்பாடாகப் பார்க்கவும் பயன்படுத்தப் படவும் வேண்டும்.

அத்தகைய எழுச்சியினை அன்னா ஹசாரேயின் இயக்கம் ஏற்படுத்தியது அதன் மிகப்பெரும் ஆக்கபூர்வ அம்சமாகும். அவ்வாறு ஏற்பட்டுள்ள எழுச்சியை அடிப்படை சமூகமாற்றத்திற்குப் பயன்படும் விதத்தில் எவ்வாறு ஒருங்குதிரட்டிக் கொண்டு செல்ல வேண்டுமோ அவ்வாறு கொண்டு செல்வதே அவர்களின் பிரதானப் பணியாக இருக்க வேண்டும்.

அதைவிடுத்து பிரகாஷ் கரத் போன்றவர்கள் இது மத்தியதர மக்களின் இயக்கம் என்று முத்திரை குத்தி வேண்டா வெறுப்பாக அதன் முக்கியக் கோரிக்கையான ஜன் லோக்பால் மசோதா கொண்டு வருவதை எந்த அம்சங்கள் அதில் இருக்க வேண்டும் என்று கூறாமல் செயல்பாட்டுத் தன்மையுடைய முனைப்பான லோக்பால் கொண்டுவரப்பட வேண்டும் என்று கூறுவதும் மற்ற முதலாளித்துவக் கட்சிகளின் பாணியில் கட்சி அரசியல் சீரழிந்து போயிருப்பதை அன்னா ஹசாரேயின் இயக்கத்தில் பங்கேற்றவர்கள் விமர்சித்ததை விமர்சிப்பதும் அடிப்படை சமூகமாற்றப் பாதையிலிருந்து வெகுதூரம் அவரும் அவரது கட்சியும் விலகியிருப்பதையே கோடிட்டுக் காட்டுகிறது.

லோக்பால் மட்டும் ஊழலை ஒழிக்காது
அதே சமயத்தில் தற்போது அரசு ஒப்புக் கொண்டுள்ள லோக் அயுக்தா அமைக்கக் கோரி மாநில அரசுகளை வலியுறுத்துவது சட்டத்தில் மக்கள் சாசனம் என்ற ஒரு பகுதியை சேர்ப்பது கீழ்த்தட்டு அதிகார வர்க்கத்தையும் மசோதாவின் வரம்பிற்குள் கொண்டுவருவது போன்றவற்றின் மூலம் ஊழலை முடிவுக்குக் கொண்டுவந்துவிட முடியுமா என்றால் அது நிச்சயம் முடியாது.

அது மட்டுமல்ல அன்னா ஹசாரே பரிந்துரைத்த ஜன் லோக்பால் சட்டமானால் கூட ஊழலை முடிவுக்குக் கொண்டுவந்துவிட முடியாது. 
உண்மையில் ஜன் லோக்பால் மசோதாவும் அரசு கொண்டுவர எத்தனித்த லோக்பால் மசோதாவும் மக்கள் முன் ஒரு வி­யத்தை நிறுத்தியுள்ளது.

அதாவது அரசு எவ்வளவு தூரம் ஊழல் வி­யத்தில் சிரத்தையற்றதாகவும் முடிந்த அளவிற்கு ஊழலில் ஈடுபடும் அரசு அதிகார வர்க்கத்தை பாதுகாக்க விரும்புவதாகவும் இருக்கிறது என்ற வி­யத்தை வெளிப்படுத்தியுள்ளது. 
அதாவது லோக்பால் தெரிவுக்குழு உறுப்பினர் 10 பேரில் 5 பேர் அரசால் நியமிக்கப்படுபவர்களாகவே இருப்பர் என்பதில் தொடங்கி ஆதாரமின்றி வழக்குத் தொடர்பவருக்கு 2 ஆண்டுகால சிறை தண்டனை என்ற ­ரத்து வரை அனைத்துமே யாரும் இந்த லோக்பால் மூலம் ஊழலுக்குத் தீர்வுகாண முயன்றுவிடக் கூடாது என்பதையே இலக்காகக் கொண்டதாக இருந்தது.

இயக்கங்களே ஒரே வழி
உள்ளபடியே ஊழல் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டுமென்றால் அதற்கு எதிரான இயக்கம் தொடர்ச்சியாக இருந்துகொண்டே இருக்க வேண்டும். ஒருபுறம் ஜன் லோக்பால் பரிந்துரைப்பது போன்ற சட்டமும் மறுபுறம் அதனை உறுதியாக அமுலாக்க வலியுறுத்தும் மக்கள் இயக்கமும் இருக்கும் போது மட்டுமே ஊழலை ஓரளவிற்கேனும் கட்டுப்படுத்த முடியும்.

அப்படிப்பட்ட இயக்கம் இல்லாவிட்டால் ஜன் லோக்பால் மூலம் உருவாக்கப்படும் ஊழலுக்கு எதிரான எந்திரமும் பழுதுபட்டுப் போகும். அது ஊழல் மலிந்ததாக ஒருசமயத்தில் ஆகிவிட்டால் கூட ஆச்சரியப்படுவதற்கு எதுவும் இருக்காது.

ஊழலுக்கு எதிரான இத்தகைய இயக்கம் அதில் தற்போது இணைந்திருக்கும் மாணவர் இளைஞர் சக்திகளை ஒருங்கிணைத்துக் கொண்டு அது பிரச்னைகளைக் கலந்து பேசி முடிவெடுக்கும் அமைப்பாக ஆக்கப்பட்டால் நாளடைவில் அதனுடைய செயல்பாடு ஊழலுக்கு எதிரானதாக மட்டுமே நின்றுவிடாது. ஏனெனில் ஊழலின் வேரைத் தேடிச் சென்றால் நிச்சயமாக அதில் பெரும் முதலாளித்துவ நிறுவனங்கள் இருப்பதை நிச்சயம் கண்டுகொள்ள முடியும்.

அப்போது அது ஊழல் உட்பட நிலவும் சமூக அவலங்களின் ஊற்றுக்கண் எது என்பதைக் கோடிட்டுக் காட்டி சமூகமாற்ற சக்திகளை ஒருங்குதிரட்டிப் படிப்படியாக அது ஒரு சமூகமாற்றப் போராட்டமாகவும் நிச்சயம் மாறும்.

சென்ற மாற்றுக்கருத்து இதழில் அன்னா ஹசாரேயின் இயக்கம் பற்றி கட்டுரை வந்துள்ளது.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முகப்பு

புதிய பதிவுகள்