புதன், 15 பிப்ரவரி, 2012

இருளில் மூழ்கி கிடக்கும் தமிழகம்! , விழித்து கொள்வார்களா மக்கள் ?


தமிழகம் முழுவதும் ( சென்னை தவிர ) வரலாறு காணாத அளவிற்கு 8 மணி முதல் 12 மணி நேரம் வரை மின்வெட்டு அமலில் உள்ளது. கடந்த வருடம் முதலே ஒரு மணி நேரம் என்று ஆரம்பித்து இப்போது 12 மணி நேரம் வரை என்று கடும் மின்வெட்டு அமல்படுத்தப்படுகிறது. இதனால் சிறு தொழில் நிறுவனங்களும், விசை தறி வைத்திருக்கும் நெசவாளர்களும், மின் மோட்டார் வைத்துள்ள விவசாயிகளும் கடும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர். குறிப்பாக நெசவாளர்களும், விவசாயிகளும் தங்கள் வாழ்க்கையை நடத்தவே திண்டாடி கொண்டிருக்கும் இந்த வேளையில் , இவ்வளவு பெரிய மின் வெட்டு அவர்கள் மேல் திணிக்கப்படுவது என்பது பெரிய அளவிற்கு அவர்கள் வாழ்வாதாரத்தையே கேள்விக்குறியாக்கிவிடும். 

பல நிறுவனங்களில் மின் வெட்டு காரணமாக பல மணி நேரங்கள் வேலை தடைபடுவதால் தொழில் நிறுவனங்கள் தங்கள் லாபம் குறையக்கூடாது என்ற நோக்கத்தோடு தொழிலாளர்களை வேலையை விட்டு நிறுத்துகின்றன. அத்தோடு தொழிலாளர்களின் அடிப்படை கோரிக்கைகளை கூட மின்வெட்டை காரணம் காட்டி நிறைவேற்ற மறுக்கின்றன. காற்றோட்ட வசதி இல்லாமல் நகர நெருக்கடியில் கட்டப்பட்டுள்ள வீடுகளில் மின்சாரம் இல்லாத இரவுகள் என்பது நரக வேதனையை தரும் என்பதை சொல்லி தெரிய வேண்டியதில்லை.அத்தோடு பள்ளியிறுதி தேர்வுகள் நெருங்கும் நேரம் இது . டீசலின் கடும் விலை ஏற்றம் காரணமாக சாதரணமானவரகள்  யாரும் அதை பயன்படுத்த முடியாத நிலைமையே இன்று நிலவுகிறது. 

மக்கள் மின்வெட்டால் இவ்வாறு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஆளும் தமிழக அரசோ,எதனால் இந்த மின்வெட்டு ஏற்படுகிறது?,  இது எப்போது நீக்கப்படும் , என்று எந்த  விளக்கத்தையும் இன்று வரை தரவில்லை. தேர்தல் பிரசாரத்தில் மின்வெட்டு இல்லாத மாநிலமாக தமிழகம் மாற்றப்படும் என்ற முழக்கத்தை முதனமையாக வைத்து பிரச்சாரம் செய்தது அ.தி.மு.க. . ஆனால் அதுவே ஆளும் கட்சி ஆனவுடன் மக்களின் அத்தியாவசிய தேவையாக உள்ள மின்சாரம் வழங்குவது குறித்து எந்த முன் முயற்சியும் எடுக்கவில்லை. தற்போது புதிது புதிதாக அந்நிய முதலீடுகளை ஈர்க்க போவதாகவும்,  தமிழகத்தை மோட்டார் தொழிற்சாலைகளின் தாயகமாக மாற்றுவதாகவும் வீர வசனம் பேசும் முதல்வர் அந்த தொழிற்சாலைகளுக்கு மட்டும் தடையில்லா மின்சாரம் ஒப்பந்தத்தை போட தயாராக இருக்கிறார் .ஆனால் அவரது தேர்தல் வெற்றிக்கு காரணமான தமிழக மக்கள் மீது வரை முறை இல்லாத மின்வெட்டை பரிசளிக்கிறார்.  

ஆளும் கட்சி மட்டும் அல்ல , எதிர் கட்சிகளும் இப்படி தமிழகம் முழுவதும் நிலவும் மின்வெட்டை கண்டித்து எந்த உருப்படியான போராட்டத்தையும் நடத்த வில்லை. தேர்தல் எதுவும் சமீபத்தில் வராததால் அவர்களுக்கு அவ்வாறு போராட்டம் நடத்தும் திட்டமும் இருக்காது. இவ்வாறு இருண்டு கிடக்கும் தமிழகத்தில் மக்கள் வெறுமனே துவண்டு கிடந்தால் எந்தவொரு தீர்வும் கிடைக்கப்போவதில்லை. அனைவரும் ஒன்றுபட்டு அரசை நிர்பந்திக்கும் வகையில்  காலவரையற்ற போராட்டங்களை முன்னெடுத்தால் மட்டுமே அரசு மின்வெட்டு பிரச்னையை  தீர்க்க ஏதாவது முன் முயற்சி எடுக்கும் என்பதே நமக்கு முன் உள்ள ஒரே வழி ஆகும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முகப்பு

புதிய பதிவுகள்