புதன், 9 ஏப்ரல், 2014

ஜெயலலிதா சிபிஎம்-ஐ கூட்டணியில் இருந்து நெட்டித் தள்ளிவிட்டதன் பலன் நேற்று மதுரை நீதிமன்றத்தில் தெரிந்தது: DYFI - மாநிலச் செயலாளர் வேல்முருகன் குற்றவழக்கில் நீதிமன்றத்தில் ஆஜரானார்

2006 ஆம் ஆண்டு எனது தொகுப்பிலும் தமிழிலும் வெளிவந்த “கேளாதசெவிகள் கேட்கட்டும்...” தியாகி பகத்சிங் கடிதங்கள் கட்டுரைகள் நூலை  அச்சுப் பிழைகளுடன் காப்பியடித்து விடுதலைப் பாதையில் பகத்சிங் என்ற பெயரில்  சிபிஎம் கட்சியின் DYFI -யும் பாரதி புத்தகாலயமும் 2007இல் வெளியிட்டனர்.

இவர்களுமா என்று அதிர்ந்து போன நாம் ஏன் இப்படிச்செய்தீர்கள் என்று மறைந்த தோழர் விடியல் சிவா போன்ற மூத்த இடது பதிப்பகத்தார்கள் மூலம் கேட்டபோது உன்னால் முடிந்ததைச் செய்து பார் என்று ஆணவத்துடன் பதில்சொன்னார்கள். நாமும் இவர்கள் மீது குற்றவழக்குப் பதிவுசெய்ய எவ்வளவோ முயன்றும் மதுரை கே, புதூர் காவல் நிலையத்தில் புகாரை வாங்கவே மறுத்துவிட்டனர். காரணம் அப்போது ஆளும் கட்சியாக இருந்த திமுக-வுடன் சிபிஎம் கட்சி கூட்டணியில் இருந்ததால் காவல்துறை அவர்களுக்கும் வாலாட்டியது.


நாமும் விடாமல்  நீதிமன்றத்தில் போராடியதன் விளைவாக  எனது புகாரைப் பெற்றுக்கொண்டு DYFI -மாநிலச் செயலாளர் மற்றும் பாரதி புத்தகாலயம் நிர்வாகி மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யுமாறு மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அப்போதும் சிபிஎம் கட்சியினர் ஆளும் திமுக கூட்டணி செல்வாக்கைப் பயன்படுத்தி, DYFI மற்றும் பாரதி புத்தகாலயத்தினர் எந்தத் தவறும் செய்யவில்லை என்றும் நான்தான் அவர்களது புத்தகத்தை அனுமதியின்றி வெளியிட்டுள்ளதாகவும் அதை மறைத்து நீதிமன்றத்தை ஏமாற்றி உத்தரவு பெற்றுவிட்டதாகவும்  எனவே நீதிமன்ற உத்தரவுப்படி DYFI -மாநிலச் செயலாளர் மற்றும் பாரதி புத்தகாலயம் நிர்வாகி மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டியதில்லை; மாறாக என் மீது வழக்குப் பதிவு செய்ய நீதிமன்ற அனுமதி பெற்று வழக்குப் பதிவு செய்யுமாறு அறிவுறுத்தி மதுரை மாநகர காவல் ஆணையரின் தனிச் சட்டஆலோசகரிடம் சட்டக் கருத்துரை பெற்று என் மீதே வழக்கைத் திருப்பி விட்டனர்.

ஆனால் நான் எழுத்தாளர் மட்டுமல்ல; வழக்கறிஞரும்கூட என்பதால் இந்த அச்சுறுத்தலால் என்னை ஒன்றும் செய்துவிட முடியவில்லை. அதை சட்டப்படியே முறியடித்து அவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வைத்து விட்டேன்.

ஆனால் அவர்கள் மீதுபோடப்பட்ட வழக்கு 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் 2 லட்சம்வரை அபராதமும் விதிக்கப்படக்கூடிய கடும் குற்றப்பிரிவாக இருந்தும் காவல்துறை அவர்களைக் கைது செய்யவில்லை. அவர்கள் ஜாமீனும் எடுக்கவில்லை. ஏனென்றால் அவர்கள்தான் பரமசிவன் கழுத்துப் பாம்பாயிற்றே. நாமும் அவர்களைக் கைதாக்க முயற்சிக்கவும் இல்லை.  ஏனென்றால் குற்றம் நிரூபணமான பின் தண்டிக்கப் படவேண்டும் என்பதே  நம் நோக்கம். எனவே  அவர்கள் மீது  காவல்துறை விசாரணை முடித்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவைக்க முயற்சித்தோம். ஆனால் காவல்துறை அவர்களை விசாரிக்கத் தயாராயில்லை.

மாறாக சிபிஎம் கட்சியினர் ஆளும் திமுக கூட்டணி செல்வாக்கைப் பயன்படுத்தி, வழக்கை மதுரையில் இருந்து சென்னைக்கு மாற்றிவிட்டனர். நான் மதுரையில் இருந்து சென்னைக்குச் சென்று வழக்கை நடத்த முடியாது என்பது அவர்கள் திட்டம். ஆனால் நான் மீண்டும் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து  வழக்கை மீண்டும் மதுரைக்கு மாற்றவைத்தேன். ஆனாலும் காவல்துறையினரை குற்றப்பத்திரிக்கை தாக்கல்செய்ய வைக்க முடியவில்லை. சிபிஎம் கட்சியின் ஆளும் கூட்டணிச் செல்வாக்கு அப்படி.

இருந்தும் மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கிட்டதில் 4 மாதத்தில் விசாரணை முடித்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யுமாறு காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனாலும் ஆளும் திமுக கூட்டணி செல்வாக்கை பயன்படுத்தி சிபிஎம் கட்சியினர் அதையும் தடுத்துவிட்டனர்.

இத்தனை போராட்டங்களுக்கு மத்தியில் 4 ஆண்டுகள் ஓடிவிட்டன 2011 மே மாதம் அடுத்த சட்டமன்றத் தேர்தலும் வந்துவிட்டது. ஆட்சி மாறினால் காட்சி மாறும்; சிபிஎம் கட்சி ஆளும் கூட்டணிச் செல்வாக்கை இழக்கும்; காவல்துறையை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வைத்துவிடலாம் என்று நினைத்தேன்.

ஆனால் ஆட்சி மாறியது, காட்சிதான் மாறவில்லை. இந்தமுறை சிபிஎம் கட்சி ஆளும் அதிமுக கூட்டணி செல்வாக்குக்கு மாறிவிட்டது. பச்சோந்திபோல் தனது நிறத்தை கருப்பு-சிவப்பில் இருந்து கருப்பு-வெள்ளை-சிவப்புக்கு மாற்றிக் கொண்டது. பரமசிவன் மாறியபோதும் பாம்பு மட்டும் மாறவில்லை. மீண்டும் நமது போராட்டம் தொடர்ந்தது.

ஆனால் இந்தமுறை சிபிஎம் கட்சி ஆளும் அதிமுக கூட்டணி செல்வாக்குக்குடன் காவல்துறையை கைக்குள் வைத்துக்கொண்டு உயர் நீதிமன்ற உத்தரவுப்படி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவிடாமல் தடுத்தது. நமது அடுத்த 2 ஆண்டுகால போராட்டத்திற்குப் பிறகு இறுதியாக உயர் நீதிமன்றத்தில் காவல் ஆய்வாளர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரப்பட்ட பின்னர்தான் வேறுவழியின்றி DYFI -முன்னாள் மாநிலச் செயலாளர் கண்ணன், தற்போதய மாநிலச் செயலாளர் வேல்முருகன், பாரதி புத்தகாலயம் நிர்வாகி நாகராஜன் மற்றும் சொ.பிரபாகரன், ச.வீரமணி ஆகியோர் மீது காவல்துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல்செய்தது.

குற்றப்பத்திரிக்கை தாக்கல்செய்த பின்னரும் குற்றவாளிகள் எவரையும் காவல்துறை கைதுசெய்யவில்லை இவர்கள் ஜாமீனும் எடுக்கவில்லை. ஏனென்றால்  இவர்கள்தான் பரமசிவன் கழுத்துப் பாம்பாயிற்றே. இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு எடுத்த அனைத்து முயற்சிகளையும் சிபிஎம் கட்சி ஆளும் அதிமுக கூட்டணி செல்வாக்கைக் கொண்டு முறியடித்து வந்தது. நண்பர்கள் பலரும் முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கு புகார் தெரிவித்தால் காவல்துறை வேலைசெய்வார்கள் என்று ஆலோசனைசொன்னாலும் அது ஏனோ எனக்கு ஒப்புதலாக இல்லை. எனவே நமது வழக்கமான வழியான நீதிமன்றம் மூலமே அழுத்தம்  கொடுத்து வந்தோம்.

இந்நிலையில் கடந்த சிலவாரங்களுக்கு முன்பு ஆளும் அதிமுக கூட்டணியில் இருந்து ஜெயலலிதா சிபிஎம் கட்சியை நெட்டித் தள்ளிவிட்டதால் வேறுவழியின்றி தனித்துதேர்தலை சந்திக்க வேண்டி வந்ததால் அது ஆடிப்போனது . கடந்த 7ஆண்டுகளாக திமுக அல்லது அதிமுக என மாறி மாறி ஆளும் கட்சி கூட்டணி செல்வாக்குக்குடன் காவல்துறையை கைக்குள் வைத்துக்கொண்டு குற்றம் செய்த தங்கள் கட்சியினரைக் காப்பாற்றி வந்த சிபிஎம் கட்சி, இனி அது அத்தனை எளிதல்ல என்பதை உணர்ந்து, அவர்களின் கைதுக்குப் பயந்து நீதிமன்றத்தில் அவர்களுக்கு முன்ஜாமீன் பெற்றது.

நேற்று அக்குற்ற வழக்கு மதுரை நீதித்துறை நடுவர் எண் 6 நீதிமன்றத்தில் விசாரனைக்கு வந்தபோது DYFI - தற்போதய மாநிலச் செயலாளர் வேல்முருகன் நீதிமன்றத்தில் ஆஜரானார். வழக்கு வருகின்ற 13.05.2014 தேதிக்கு ஒத்திவைக்கப் பட்டது.

எனது 7ஆண்டுகளாக கடும்போராட்டத்தின் பலன் இன்றுதான் லேசாக எட்டிப் பார்த்தது. அதுவும் ஜெயலலிதா சிபிஎம் கட்சியை கூட்டணியில் இருந்து நெட்டித் தள்ளிவிட்டதால் நடந்தது. இனி குற்ற வழக்குத்தொடரும்........குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள்.
















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முகப்பு

புதிய பதிவுகள்