சனி, 10 டிசம்பர், 2011

டிசம்பர் 11 - பாரதி பிறந்த தினத்தில் அவரை நினைவு கூர்வோம்

நெஞ்சு பொறுக்குதில்லையே - இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்

மனித ருணவை மனிதர் பறிக்கும் வழக்கம் இனியுண்டோ ? மனிதர் நோக மனிதர் பார்க்கும் வாழ்க்கை இனியுண்டோ ?

என்று தணியும் இந்தச் சுதந்திர தாகம்? என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்? என்றெம தன்னைகை விலங்குகள் போகும்? என்றெம தின்னல்கள் தீர்ந்துபொய் யாகும்?

மாதர் தம்மை இழிவு செய்யும் மடமை யைக்கொ ளுத்துவோம்

கரும்புத் தோட்டத்திலே - அவர்
கால்களும் கைகளும் சோர்ந்து விழும்படி
வருந்து கின்றனரே!

குடிமக்கள் சொன்னபடி குடிவாழ்வு
மேன்மையுறக் குடிமை நீதி
கடியொன்றி லெழுந்ததுபார்; குடியரசென்று
உலகறியக் கூறி விட்டார்;
அடிமைக்குத் தளையில்லை யாருமிப்போது
அடிமையில்லை அறிக என்றார்

அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்-அதை
அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்;
வெந்து தணிந்தது காடு;-தழல்
வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?  

 அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
இச்சகத்து ளொரெலாம் எதிர்த்து நின்ற போதிலும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
துச்சமாக எண்ணி நம்மைத் தூறு செய்த போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே

பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள் நடத்தவந்தோம்;
எட்டு மறிவினில் ஆணுக் கிங்கேபெண்
இளைப்பில்லை காணென்று கும்மியடி!       
என்ற பாரதியின் பாடல் வரிகளால்  பாரதியின் பிறந்த தினமான டிசம்பர் 11ல்  அவரை    நினைவு கூர்வோம்.

5 கருத்துகள்:

  1. நல்ல கவிஞர்... ஆனால், கருத்துமுதல்வாதி, கற்பனா சோசலிசம் பேசிய கவிஞர், இந்து மதவாதி....... பொதுவுடைமை அறிக்கையை தமிழில் மொழி பெயர்த்த பெரியாரை நாம் கண்டுகொள்வது இல்லை... சுயமரியாதை திருமணங்கள் பற்றி பேசும் போது ரஷ்ய சமுக அமைப்பை ஆதரித்து பேசியவர் பெரியார்... அவரை பற்றி கண்டு கொள்ளாமல் பாரதியை புகழ்வதில் எனக்கு உடன்பாடு இல்லை... கோ பிரின்ஸ்

    பதிலளிநீக்கு
  2. கோ பிரின்ஸ்,
    பாரதி கருத்துமுதல்வாதிதான். ஆனால் அகநிலைக் கருத்துமுதல்வாதி (Subjective Idealist) அல்ல. புறநிலைக் கருத்துமுதல்வாதி (Objective Idealist). பாரதி கம்யூனிஸ்ட் அல்ல. கற்பனாவாத சோசலிசம் பேசியவர்தான். கற்பனாவாத சோசலிஸ்டுகள் புறக்கணிக்கப்படக் கூடியவர்கள் அல்ல. சர்வதேச அளவில் விஞ்ஞான சோசலிசம் உருவானதில் கற்பனாவாத சோசலிசத்தின் பங்கை எவரும் மறுக்க முடியாது. மார்க்ஸே இதை மறுக்கவில்லை. இந்தியாவில் வேர் இல்லாமல் மேலைநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டதாக மார்க்சிசத்தை இந்திய மக்களிடம் திணிக்காமல், இந்திய மண்ணில் வேர்பிடித்திருக்கும் பொருள்முதல்வாத சிந்தனையின் பிரதிநிதி சாருவாகரிலிருந்து கற்பனாவாத சோசலிசம் பேசிய பாரதியிலிருந்து விஞ்ஞான சோசலிசம் பேசிய பகத்சிங் வரை கொண்டு வந்து மார்க்சிசத்தை இந்திய மக்களுக்கு அறிமுகப் படுத்த வேண்டும். அப்போதுதான் மார்க்சிசம் மேலைநாட்டுத் தத்துவம்; அது இந்தியாவுக்குப் பொருந்தாது எனும் முதலாளித்துவ அறிவுஜீவிகளின் பிரச்சாரத்தை எடுபடவிடாமல் முறியடிக்க முடியும்.

    1917 ரஷ்யப் புரட்சிக்குப் பின்னர்தான் இந்தியாவிற்கு கம்யூனிசம் பற்றிய அறிமுகம் கிடைக்கிறது. அதுவும் முதலாளித்துவ பத்திரிக்கைகள் மூலம் போல்ஷிவிசம் எனும் இரத்தவெறி பிடித்த தத்துவம் என்பதாகவே அறிமுகம் செய்யப் படுகிறது. பாரதி லெனினின் கொள்கைகளை ஏற்றுக் கொள்கிறார்; ஆனால் அதை அடையும் வழிமுறை வன்முறை சார்ந்தது என்று கூறி அதற்கு மாற்று வழியாக தர்மகர்த்தா முறையை சிந்திக்கிறார். அங்கேதான் அவர் கற்பனாவாத சோசலிஸ்ட் ஆகிறார். ஆனால் லெனினது நூல்கள் இந்தியா வருவதற்கு முன்பே 1921ல் பாரதி இறந்து விடுகிறார். அதன் பிறகு நான்கு ஆண்டுகள் கழித்து 1925 ல்தான் இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சியே உருவாகிறது. இந்த வரலாற்றுப் பின்னணியையும் பார்க்க வேண்டும்.

    மற்றபடி பாரதி //இந்து மதவாதி// என்றால் எப்படி என்று நீங்கள்தான் கூற வேண்டும்.

    //பொதுவுடைமை அறிக்கையை தமிழில் மொழி பெயர்த்த பெரியாரை நாம் கண்டுகொள்வது இல்லை... சுயமரியாதை திருமணங்கள் பற்றி பேசும் போது ரஷ்ய சமுக அமைப்பை ஆதரித்து பேசியவர் பெரியார்... அவரை பற்றி கண்டு கொள்ளாமல் பாரதியை புகழ்வதில் எனக்கு உடன்பாடு இல்லை... //
    கோ பிரின்ஸ், உங்கள் ஒப்பீடே தவறானது. பாரதி சமூக சீர்திருத்தத்துடன் மக்களை ஒடுக்கும் பிரிட்டிஷ் ஏகாதிபத்திய அரசையும் ஒருசேர எதிர்த்துப் போராடியவர். ஆனால் பெரியார் சமூக சீர்திருத்தமே முதல் வேலை என்று சொல்லி பிரிட்டிஷ் ஏகாதிபத்திய அரசை எதிர்க்காமல் விட்டவர் மட்டுமல்ல; சமூக சீர்திருத்தம் முழுவெற்றி பெற பிரிட்டிஷ் ஏகாதிபத்திய அரசின் ஆட்சி இந்தியாவில் இருக்க வேண்டும் என்று சொன்னவர். 1947ல் இந்தியாவுக்கு சுதந்திரம் வருவது உறுதி என்று ஆனவுடன் மற்ற மாகாணத்திற்கு மட்டும் சுதந்திரம் கொடுங்கள்; சென்னை மாகாணம் மட்டும் இங்கிலாந்து மகாராணியாரின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்கவேண்டும் என்று மகாராணிக்கு கடிதம் எழுதி வேண்டியவர்.

    இன்று ஆளும் முதலாளித்துவ அரசை எதிர்க்க விரும்புபவர்கள் சமூக சீர்திருத்தத்துடன் மக்களை ஒடுக்கும் பிரிட்டிஷ் ஏகாதிபத்திய அரசையும் ஒருசேர எதிர்த்துப் போராடிய பாரதியை உயர்த்திப் பிடிக்க வேண்டுமா? பிரிட்டிஷ் ஏகாதிபத்திய ஆட்சிக்கு ஆதரவளித்த - (காங்கிரஸில் இருந்த 1919-25 குறுகிய காலம் நீங்கலாக‌) சுதந்திரப் போராட்டத்தில் இருந்து ஒதுங்கி இருந்த பெரியாரை உயர்த்திப் பிடிக்க வேண்டுமா? நீங்களே சொல்லுங்கள்.

    கோ பிரின்ஸ், கடைசியாக ஒன்று:
    பிரிட்டிஷ் ஏகாதிபத்திய மூலதனத்தின் வலுத்தாக்குதலால் நிலப்பிரபுத்துவ சமூகம் தகர்ந்து அதன் இடிபாடுகளில் முதலாளித்துவ சமூகம் பிறந்து கொண்டிருந்த ஓர் யுகசந்தியில் புதிய சமூகத்தைப் பெற்றெடுக்கும் இந்தியத் தாயின் பிரசவ வேதனையை அனுபவித்துணர்ந்து அதன் வலியால் கவிபாடிய அந்தப் புது யுகக் கவிஞனை போனால் போகட்டும் அவன் ஒரு //நல்ல கவிஞர்... // என்று பெரிய மனது பண்ணி ஒப்புக் கொண்டதற்கு நன்றி

    பதிலளிநீக்கு
  3. //முதலாளித்துவ சமூகம் பிறந்து கொண்டிருந்த ஓர் யுகசந்தியில் புதிய சமூகத்தைப் பெற்றெடுக்கும் இந்தியத் தாயின் பிரசவ வேதனையை அனுபவித்துணர்ந்து அதன் வலியால் கவிபாடிய அந்தப் புது யுகக் கவிஞனை//

    என்ன பாடினார்... ?

    பதிலளிநீக்கு
  4. //பாரதி லெனினின் கொள்கைகளை ஏற்றுக் கொள்கிறார்; ஆனால் அதை அடையும் வழிமுறை வன்முறை சார்ந்தது என்று கூறி அதற்கு மாற்று வழியாக தர்மகர்த்தா முறையை சிந்திக்கிறார். அங்கேதான் அவர் கற்பனாவாத சோசலிஸ்ட் ஆகிறார். ஆனால் லெனினது நூல்கள் இந்தியா வருவதற்கு முன்பே 1921ல் பாரதி இறந்து விடுகிறார். அதன் பிறகு நான்கு ஆண்டுகள் கழித்து 1925 ல்தான் இந்தியாவில் கம்யூனிஸ்ட்ல் கட்சியே உருவாகிறது. இந்த வரலாற்றுப் பின்னணியையும் பார்க்க வேண்டும்.//


    ஒருவேளை லெனினை வாசித்திருந்தால்....... என்ற கற்பனையின் முனையில் நின்று கொண்டு சிந்திப்பதுதான்...சோசலிச சிந்தனையா?

    பதிலளிநீக்கு
  5. //முதலாளித்துவ அரசை எதிர்க்க விரும்புபவர்கள் சமூக சீர்திருத்தத்துடன் மக்களை ஒடுக்கும் பிரிட்டிஷ் ஏகாதிபத்திய அரசையும் ஒருசேர எதிர்த்துப் போராடிய பாரதியை உயர்த்திப் பிடிக்க வேண்டுமா?//

    என்னய்யா டகால்டி?

    எங்கே போராடினார் பாரதி

    பதிலளிநீக்கு

முகப்பு

புதிய பதிவுகள்