வெள்ளி, 9 டிசம்பர், 2011

ஊழல்வாதி புதினுக்கு எதிராக ரசியா மக்களின் எழுச்சி


பாட்டாளிவர்க்கத்தின் மாபெரும் தலைவர்கள்  தோழர்.லெனின், தோழர்.ஸ்டாலின் போன்றவர்கள் தலைமையில் வழி நடத்தப்பட்ட  சோவியத்  ரசியா, உலகம் முழுவதும் உள்ள பாட்டாளிவர்க்கத்தின் பாதுகாவலானாக இருந்தது. ஏகாதிபத்தியத்தின் பிடியில் இருந்து பல நாடுகளின் விடுதலைக்கு வழி வகுத்தது. பாசிச வெறி பிடித்த ஹிட்லரிடம் இருந்து இந்த உலகத்தை இரண்டாம் உலகப்போரின் போது காப்பாற்றியது. அந்த போரின் போது ஏற்பட்ட மொத்த இழப்பையும் ஒரு தாயின் பெருந்தன்மையோடு  தன்னுள் அது தங்கி கொண்டது. ஹிட்லரின் நாசிச படையை ரசியா மண்ணில் வீழ்த்தியது வெறும் ஆயுதங்கள் மட்டும் அல்ல, தோழர்.ஸ்டாலின் தலைமையில் அங்கு உயிர்ப்போடு பராமரிக்கப்பட்ட  அந்த மக்களின் மனவுறுதி தான் மிகப்பெரிய ஹிட்லரின் ராணுவத்தையே வீழ்த்தியது.தாங்கள் கண்டுபிடித்த அறிவியல் தொழில்நுட்பத்தை, மருத்துவ கருவிகளை, உலகம் முழுவதும் அன்று விடுதலை அடைந்த நாடுகளுக்கு வாரி வாரி வழங்கியது சோவியத் யூனியன்.

அப்படிப்பட்ட சோஷலிச நாடு தோழர் ஸ்டாலின் மறைவிற்கு பிறகு கம்யூனிச துரோகிகளான கோர்பசேவ் , குருசேவ் போன்றவர்களால் முதலாளித்துவத்திற்கு தரை வார்க்கப்பட்டுவிட்டது. குருசேவின் வாரிசாக தற்போது வந்துள்ளவர் தான் ஊழலில் ஊற்றுக்கண்ணாக உள்ள ரசியாவின்  ஜனாதிபதியாக இருந்து தற்போது பிரதமராக உள்ள புதின். மக்களிடம் செல்வாக்கை இழந்த புதின் குறுக்கு வழியில் பதவியை தக்க வைத்து கொள்ள நடந்து முடிந்த தேர்தலில் வன்முறை , முறைகேடுகளை கட்டவிழ்த்து விட்டார். அப்படி இருந்தும் புதின் கட்சியின் செல்வாக்கு முன்பு பெற்ற வெற்றியை விட பாதியாக குறைந்து விட்டது. மாபெரும் அக்டோபர் புரட்சியை நடத்தி அதன் மூலம் சோஷலிச அரசை நிர்மாணித்து சோஷலிச நாட்டில் வாழ்ந்து உலகிற்கே வழிகாட்டிய ரசியாவின்  உழைக்கும் மக்கள் தற்போது முதலாளித்துவத்தின் கோரப்பிடியில்  வாழும்படி தள்ளப்பட்டுள்ளார்கள்.

தேர்தலில் புதின் நடத்திய முறைகேடுகளை கண்டு கொந்தளித்த மக்கள் அலையலையாக போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.அவர்கள் இந்த போராட்டங்கள்  மூலம் புதின் செய்த ஊழல் மற்றும் தேர்தல் முறைகேடுகளை உலகம் முழுவதும் அம்பலப்படுத்தியுள்ளார்கள்.  உழைக்கும் மக்களை சுரண்டி கொழுக்கும் முதலாளித்துவத்திற்கு சமாதி கட்டுவதற்கான ஆரம்பமாக இந்த போராட்டங்கள் அமையும் என்ற நம்பிக்கை நமக்கு  ஏற்படுகிறது.

1 கருத்து:

  1. இதில் வேடிக்கை என்ன என்றால் அமெரிக்காவின் தூண்டுதல் பேரில் தான் இந்த போராட்டங்கள் நடக்கிறது என்று புடின் தன நாட்டு மக்களின் உணர்ச்சிகளை கொச்சை படுத்துவது தான்

    பதிலளிநீக்கு

முகப்பு

புதிய பதிவுகள்