செவ்வாய், 1 நவம்பர், 2011

தெருவெங்கும் வெள்ளம்! எங்கே மக்கள் அரசு ?


வடகிழக்கு பருவ மழை தீவிரமடைய ஆரம்பித்துள்ளது, தமிழகமெங்கும் பரவலாக மழை பெய்து வருகிறது. கடலோர மாவட்டங்களில் கடும் மழை பெய்து வருகிறது. சென்னை போன்ற பெருநகரங்களில் இரண்டு நாள் மழைப்பிடித்தாலே நகரமே  வெள்ளக்காடாக மாறிவிடுகிறது .வேளச்சேரி போன்ற பகுதிகளில் படகு பயணம் செய்யுமளவிற்கு தெரு முழுவதும் தண்ணீர் தேங்கி விடுகிறது. சுரங்கப்பாதைகள் முழுவதும் தண்ணீர் தேங்கி வாகனபோக்குவரத்தே ஸ்தம்பித்து போய் விடுகிறது. நகரின் முக்கிய பகுதிகளில் மழை நீர் வடிகால்களும், பாதாளா சாக்கடையும் ஒழுங்காக பராமரிக்கப்படாததால் மழை நீர் வெளியேற வழியின்றி வீடுகளுக்குள் தண்ணீர்  புகுந்து விடுகிறது. பல ஏரிகளும் குளங்களும், கால்வாய்களும் உரிய முறையில் பராமரிக்கப்படுவதில்லை,அப்படி பராமரிக்க ஒதுக்கப்படும் தொகையானது அரசு அதிகாரிகள் , அரசியல் வாதிகள் ,மற்றும் ஒப்பந்தகாரர்களால் கூட்டு பிரித்து கொள்ளையடிக்கப்படுகிறது.  நீர்வழித்தடங்களில் ஆக்கிரமிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. அதை தடுக்க வேண்டிய அரசு அதிகாரிகள் லஞ்சம் பெற்றுக்கொண்டு ஆக்கிரமிப்பை அகற்ற எந்த முயற்சியும் எடுப்பதில்லை, நாளடைவில் ஆக்கிரமிப்பாளர்கள் பட்டா பெற்றுக்கொண்டு அந்த இடத்திற்கு சொந்தக்காரர்கள் ஆகிவிடுகின்றனர்.  


 130  கோடி மக்கள் தொகை உள்ள நாட்டில் ஒரே நாளில் நாடு முழுக்க தேர்தலை கனகட்சிதமாக நடத்த இந்த அரசால் முடிகிறது, ஆனால் இது போன்ற வருடந்தோறும் மழை பெய்வதும் , வெள்ளக்காடாக நகரங்கள் மாறுவதும் , பல வீடுகள் இடிந்து விழுந்து மக்கள் பலியாவதும், ஆறுகளில் நீர் பெருக்கடுத்து மக்களின் உடமைகள், உயிர்கள் அடித்து செல்லப்படுவதும்  தொடர் கதையாகவே இருந்து வருகிறது.இது போன்ற மழைக்காலங்களில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எதையும் அரசு  எடுக்காமல் அமைச்சர்கள் , எம்.எல்.ஏக்கள் போன்றவர்கள் தண்ணிரில் இறங்கி மீடியாவிற்கு போஸ் மட்டுமே கொடுக்கும் நிலை வன்மையாக கண்டிக்கத்தக்கது.   இது போல எந்த இயற்கை பேரழிவு வந்தாலும் முதலில் பலியாவதும் , உடமைகளை இழப்பதும் , உயிர்களை இழப்பதும், தொற்று  நோய்களுக்கு ஆளாவதும் ,உணவு இல்லாமல் தவிப்பதும் இந்த சமுதாயத்தையே இயங்க வைத்து கொண்டிருக்கும் உழைக்கும் ஏழை மக்கள் தான். இன்று அவர்களை அரசு கொடுக்கும் நிவாரண உதவியான ஆயிரம் ரூபாய்க்கு கையேந்தி நிற்கும் அவல நிலைக்கு தள்ளியுள்ளது இந்த முதலாளித்துவ சமூக அமைப்பு..

குறைவான மழை பொழியும் தமிழகத்தில் அந்த மழை நீரை அணைகளில் , குளங்களில் ,நிலத்தடியில் சேமித்து வைக்க அறிவியல் பூர்வமான திட்டங்கள் தீட்டப்பட வேண்டும். அதன் மூலமே தன்னிறைவான விவசாய உற்பத்தி என்பது சாத்தியமாகும். நகரங்களில் முறையான வடிகால் வசதி செய்யப்பட வேண்டும். மழைநீர் சேமிப்பு முறையாக செயல்படுத்த வேண்டும். ஏரி, குளங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற வேண்டும்.

இந்த சமுதாயம் முன்னேற்ற பாதையில் செல்ல தக்க , இந்த கோரிக்கைகளை மையமாக வைத்து வெகுஜன மக்கள் இயக்கங்களை கட்டி அதன் மூலம் நடைபெறும் போராட்டங்கள் மூலமே இவை அனைத்தும் சாத்தியமாகும். 


1 கருத்து:

  1. நச்... ஆட்சியாளர்கள் மாறப் போவதில்லை, மாற்றம் ஆட்சியாளர்களை தேர்ந்தெடுக்கும் நம்மிடம் வர வேண்டும்...

    பதிலளிநீக்கு

முகப்பு

புதிய பதிவுகள்