செவ்வாய், 8 நவம்பர், 2011

முதலாளித்துவம் வரலாற்றின் இறுதிநிலையல்ல என்பதை நிரூபிக்கும் உலகளாவிய போராட்டச் சூழலில் சோசலிச சமூக அமைப்பை உருவாக்க நவம்பர் தின உறுதியேற்போம்


சோவியத் யூனியனிலும் பிற கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் சோசலிச அரசு அமைப்புகள் வீழ்ந்தவுடன் ஃபுக்கியாமா என்ற முதலாளித்துவ சிந்தனையாளர் நூல் ஒன்றினை எழுதினார். அதற்கு அவர் வரலாற்றின் இறுதிநிலை என்று பெயரிட்டார். அதில் அவர் மனிதகுல வரலாற்றின் இறுதிநிலை முதலாளித்துவ ஜனநாயகமே என்று நிறுவ முயன்றார். 
வரலாறு தனி மனிதரால் உருவாக்கப்படுவதில்லை. அது மகத்தான மக்கள் எழுச்சிகளால் உருவாக்கப்படுகிறது; மகத்தான மக்கள் எழுச்சிகளே அடிமை மற்றும் நிலவுடமை சமூக அமைப்புகளை முடிவுக்கு கொண்டு வந்தன; அதைப்போல் முதலாளித்துவ சமூக அமைப்பையும் மகத்தான பாட்டாளி வர்க்க எழுச்சி முடிவுக்கு கொண்டுவரும் என்று மாமேதை மார்க்ஸ் கூறினார்.

முதலிரண்டு சமூக அமைப்புகளின் மாற்றத்தை மார்க்ஸ் கூறிய வழியில் அங்கீகரித்த ஃபுக்கியாமா முதலாளித்துவத்தின் வீழ்ச்சி குறித்து மார்க்ஸ் கூறிய அடிப்படையில் உருவானதாகக் கருதப்பட்ட சோசலிச அமைப்புகள் சோவியத் யூனியனிலும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் வீழ்ச்சி அடைந்தவுடன் இங்கே பாருங்கள் மார்க்ஸின் கூற்றுப்படி உருவாகிய சோசலிச அமைப்புகள் இப்போது வீழ்ந்துவிட்டன; அது முதலாளித்துவ ‘ஜனநாயக’ அமைப்பே வரலாற்றின் இறுதிக்கட்டம் என்பதையே காட்டுகிறது என்று தனது நூலில் கூறினார்.
ஃபுக்கியாமாவின் கூற்றிற்கு மாறாக அமெரிக்காவின் வால் வீதியில் தொடங்கி இங்கிலாந்தின் பக்கிங்காம் அரண்மனை வரை அமெரிக்க ஐரோப்பிய மக்களால் தற்போது ஒரு முழக்கம் எழுப்பப்படுகிறது. முதலாளித்துவமே எங்கள் அனைவரின் பிரச்னைக்கும் முழுமுதற் காரணம் என்பதே அது. முதலாளித்துவப் பெரு நிறுவனங்கள் தங்களது இலாப நோக்கப் பேராசையைக் கைவிட வேண்டும்; அதுவே எங்களது வேலை இழப்பிற்கும் ஊதியக் குறைப்பிற்கும் அடிப்படைக் காரணம் என்று வால் தெருவில் முழங்கிய முழக்கம் தற்போது ஸ்பெயின், இங்கிலாந்து போன்ற நாடுகளிலும் எதிரொலித்துக் கொண்டுள்ளது. நெருக்கடியினால் நிலை குலைந்து போயுள்ள கிரீஸ் நாட்டின் பொருளாதாரம் திவால் நிலைக்கே வந்துவிட்டது. இந்தியா போன்ற நாடுகளில் முதலாளித்துவப் பெரு நிறுவனங்களால் ஊட்டி வளர்க்கப்படும் ஊழல் அரசியல் தரத்தின் அடித்தளத்தையே அசைத்துப் புரட்டிக் கொண்டுள்ளது.
மனித குலத்தின் வரலாறு முழுவதுமே வர்க்கப் போராட்டங்களின் வரலாறே என்று வரலாற்றை வர்ணித்த மாமேதை மார்க்ஸ் ‡ மனித குலம் முழு அடிமைத்தனத்திலிருந்து மகத்தான எழுச்சிகளை நடத்தி விடுதலை பெற்று நிலவுடைமை சமூகக் கட்டத்தை அடைந்தது; பெருகிவரும் மனித சமூகத் தேவைகளை நிறைவேற்ற முடியாததாக அந்த சமூக அமைப்பு ஆகிய நிலையில் தோன்றிய முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சியினால் நிலவுடைமை அமைப்பும் தூக்கியயறியப்பட்டது; ஆனால் இவ்விரு புரட்சிகளுக்கும் முறையே நிலப்பிரபுக்கள், முதலாளிகள் ஆகிய உடமை வர்க்க சக்திகளே தலைமை தாங்கின; அவற்றிற்கு உழைக்கும் வர்க்க சக்திகள் உறுதுணையாக நின்றன; ஆனால் இவ்விரு புரட்சிகளைப் போலில்லாமல் முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சியின் விளைவாக உருவாகிய முதலாளித்துவ சமூக அமைப்பு வர்க்கப் பிளவினை மிகவும் கூர்மையானதாக்கியுள்ளது; அதன் விளைவாக உருவாகும் வர்க்கப் போராட்டங்கள் முதலாளித்துவ ஆட்சி அமைப்பைத் தகர்த்தெறிந்து பாட்டாளி வர்க்கம் அரசியல் அதிகாரத்தை கைப்பற்ற வழிவகுக்கும்; அந்த அடிப்படையில் மனிதகுல வரலாற்றின் அத்தகைய மகத்தான புரட்சியே உழைக்கும் வர்க்கம் உடைமை வர்க்கங்களுக்கு உறுதுணையாக நின்ற தனது நிலையை மாற்றித் தனக்காகவே களம் இறங்கிய மகத்தான அரசியல் நிகழ்வாக விளங்கும்; அதற்குப்பின் வர்க்கம் என்பதே இல்லாததாக மனித சமூகம் மாற்றம் காணும்; உற்பத்தி லாப நோக்கிலிருந்து விடுவிக்கப்படும்; மனிதகுலத்தின் தேவைகளை அடிப்படையாகக் கொண்டதாக அது மாறும்; மனித உழைப்பின் பலன் விரல்விட்டு எண்ணிவிடக்கூடிய ஒருசிலரால் கையகப்படுத்தப் படுவதற்குப் பதிலாக ஒட்டுமொத்த சமூக மேம்பாட்டிற்குப் பயன்படுவதாக ஆகும்; அந்நிலையில் சமூகத்தில் பொருளாதார ரீதியாகக் கொண்டு வரப்படும் சமத்துவமும், அறிவைப் பெறுவதில் அனைவருக்கும் கிட்டும் அபரிமிதமான வாய்ப்புகளும், அறிவியல், தொழில்நுட்பம் ஆகியவற்றின் மடைக்கதவுகள் அகலத் திறந்துவிடப்பட்டு அதன்மூலம் உருவாகும் அபரிமிதப் பொருளுற்பத்தியும் அனைத்து மக்களின் சமமான வளர்ச்சிக்கு வழிவகுத்து, விவசாயம் முழுக்க முழுக்க நவீனமயமாகி அதனால் நகர்ப்புறங்களுக்கும் கிராமப்புறங்களுக்கும் இடையிலிருக்கும் வேறுபாடு மறைந்து தேசப்பிரிவினைகள் அகன்று அதன் விளைவாக உலகம் முழுவதுமே ஒரு குடும்பமாய் அரசு, பணம், வர்த்தகம், கடன் ஆகிய மனிதகுல வரலாற்றின் இடைக்காலத்தில் தோன்றிய இடைத்தரகர் அமைப்புகள் எதற்கும் இடமில்லாத கம்யூனிச சமூகமாய் மாறும் என்று கூறினார்.
மாமேதை மார்க்ஸ் கூறிய இந்தத் தத்துவம் ஒரு மாபெரும் சிந்தனையாளரின் உன்னதக் கனவல்ல. அது நடைமுறை சாத்தியமானதே என்பதை மாமேதை லெனின், ஸ்டாலின், மாவோ போன்றவர்கள் நிரூபித்தனர். தங்களது நாடுகளில் அந்த மகத்தான கம்யூனிச சமூகத்தின் முதல் கட்ட அமைப்புகளை மகத்தான சோசலிச, மக்கள் ஜனநாயகப் புரட்சிகள் மூலம் நிறுவினர். லாப நோக்கம் முதலாளித்துவத்தை வழிநடத்துவதால் அதிகபட்ச லாபம் ஈட்ட வேண்டும் என்ற லாப வெறி அந்த சமூக அமைப்பின் உந்துசக்தியாக உள்ளது. ஆனால் சோசலிச சமூக அமைப்பிற்கு அத்தகைய அதாகவே உந்திச் செல்லக்கூடிய உற்பத்தி நோக்கம் இல்லை. அதன் பொருளாதாரம் செவ்வனே இயங்க சோசலிசக் கலாச்சாரமும், உணர்வுமட்டமும் பரந்த அளவில் மக்களிடையே பராமரிக்கப்படுவது அத்தியாவாசியமாகிறது. அத்துடன் திட்டமிடுதலும் கட்டாயமாகிறது. 
மாமேதைகள் ஸ்டாலின் மற்றும் மாவோவின் மறைவிற்குப்பின் அத்தகைய உணர்வுமட்டத்தை பராமரிக்க முடிந்த தலைவர்களை உருவாக்க முடியாததாக அந்நாடுகளின் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆகிவிட்டதால் சோசலிசப் பொருளாதார சமூக அமைப்பில் நெருக்கடி தோன்றியது. அதைப் பயன்படுத்திக் கொண்டு உலக முதலாளித்துவம் சோவியத் யூனியனிலும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் சோசலிசத்தின் வீழ்ச்சியைக் கொண்டு வந்தது. மக்கள் சீனத்தில் சோசலிச ரீதியிலான வளர்ச்சியையும், வளர்ச்சியின் பலன்களை மக்களுக்குப் பகிர்ந்தளிக்கும் அணுகுமுறையையும் கைவிட்டு ஏற்றுமதி சார்ந்த லாப நோக்க பொருளாதாரத்தை பூனை கருப்பாய் இருந்தால் என்ன வெள்ளையாய் இருந்தால் என்ன அது எலியைப் பிடிக்கிறதா என்பதே முக்கியம் என்ற முழக்கத்தை முன்வைத்து திருத்தல்வாதியும், முதலாளித்துவப் பாதையாளருமான டெங்சியோபிங் கொண்டு வந்தார். அவர் பாதையில் நடைபயின்று முதலாளித்துவம் அங்கு வெகுவேகமாக வளர்ந்து வருகிறது. 
உழைக்கும் வர்க்க அரசமைப்பிற்கு இதன்மூலம் ஏற்பட்ட பின்னடைவு முதலானதும் முடிவானதுமல்ல. முதன்முதலில் உழைக்கும் வர்க்க அரசு பாரி கம்யூனில் ஏற்பட்டது. அது ஏறக்குறைய 70 நாட்கள் மட்டுமே நீடித்தது. அதன் தோல்வியிலிருந்து படிப்பினை எடுத்துக்கொண்டு 1917 அக்டோபர் (புதிய காலண்டர் படி நவம்பர்) புரட்சியின் மூலம் உருவான சோசலிச அரசு ஏறத்தாழ 75 ஆண்டுகள் நீடித்தது. அதன் தற்போதைய தற்காலிகப் பின்னடைவு நிரந்தரத் தோல்வியல்ல. ஆனால் முதலாளித்துவம் வெளிப்படையாக ஆளைப்பார்த்து மயங்காதே ஊதுகாமாலை என்ற வகையில் பகட்டுத் தோற்றம் காட்டினாலும் அதன் வீழ்ச்சி படிப்படியாக ஏற்பட்டுவரும் நிரந்தரத் தன்மை கொண்டதாகும். 
உலகமயப் பின்னணியில் அதனால் முடிந்த அதிகபட்ச வளர்ச்சியை அதாவது மக்களின் தேவைகளை அடிப்படையாகக் கொண்டிராமல் அவர்களின் வாங்கும் சக்தியை மட்டும் அடிப்படையாகக் கொண்ட அதிகபட்ச வளர்ச்சியை உலகின் அனைத்து நாடுகளிலும் ஏற்படுத்தியபின் தற்போது அதன் அழிவுப்பாதையில் வெகுவேகமாகப் பயணித்துக் கொண்டுள்ளது. அதன் விளைவே தற்போதைய அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளை ஆட்டிப்படைத்துக் கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி. பங்கு வர்த்தகச் சூதாட்டம் அதன் பகட்டை இழந்து எதில் முதலீடு செய்தாலும் பலன் எதுவும் இருக்கப் போவதில்லை என்ற எண்ணம் பரவி, தங்கம் முதலீட்டுச் சாதனமாக ஆகி அதன் விலை விண்ணை முட்டிக் கொண்டுள்ளது. 
இவ்வாறு அந்நாடுகளில் தோன்றியுள்ள நெருக்கடி நமதுநாடு போன்ற நாடுகளையும் பாதித்துள்ளதோடு அது வேறொரு பரிணாமத்தில் இங்கு வெளிப்படத் தொடங்கியுள்ளது. உலகமயப் பின்னணியில் வேற்றிட வேலைவாய்ப்பும் அன்னிய மூலதன வரவும் நமதுநாட்டின் வளர்ச்சியைக் கூட்டிக் காட்டுகிறது. 20 சதவீத மத்தியதர வர்க்க மக்களின் வருமானப் பெருக்கத்திற்கு அது தற்காலிகமாக வழிவகுத்தது. இருந்தாலும் முன்னேறிய நாடுகளின் வேற்றிட வேலைவாய்ப்புச் சார்ந்ததாக அத்தொழில்கள் உள்ளதால் எப்போதும் அச்சூழ்நிலை மாறலாம் என்ற நிலை அவ்வாய்ப்புகளின் தலைக்கு மேல் தொங்கும் கத்தியாக ஆகியுள்ளது. அதே சமயத்தில் 80 சதவீத ஏழை எளிய மக்களின் வேலை வாய்ப்புகள் சுருங்கியுள்ளதோடு எட்டிப்பிடிக்க முடியாத விலை உயர்வும் அவர்களை வாட்டி வதைத்துக் கொண்டுள்ளது.
இந்தப் பின்னணியில் அது முன்வைக்கப்பட்ட 20 ஆண்டுகளுக்குள்ளேயே முதலாளித்துவமே வரலாற்றின் இறுதி நிலை என்ற ஃபுக்கியாமாவின் கருத்து முடங்கிப் போய்விட்டது. ஆனால் முன்வைக்கப்பட்டு 170 ஆண்டுகள் ஆனபின்னரும் மாமேதை மார்க்ஸின் கருத்து இன்னும் பொருத்தமுடையதாகியுள்ளது. அவரது நூல்கள் பல்லாயிரக்கணக்கான பிரதிகள் அச்சிடப்பட்டு பல லட்சம் மக்களால் படிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. மாமேதை மார்க்ஸ் எழுதிய இலக்கியங்கள் அனைத்தும் இறவா வரம் பெற்றவையாக புத்துயிர் பெற்று இன்றும் வலம் வந்து கொண்டிருப்பதற்கும் இங்கிலாந்து ஏகாதிபத்திய ஊதுகுழலான பி.பி.சி.யின் கருத்துக்கணிப்பின்படியே இதுவரை மனிதகுலம் உருவாக்கிய சிந்தனையாளர் அனைவரிலும் உயர்ந்தவர் என்று மாமேதை மார்க்ஸ் கருதப்பட்டுக் கொண்டுள்ளதற்கும் முதலாளித்துவ பத்திரிக்கை உலகத்தால் முட்டுக் கொடுத்து நிறுத்தப்பட்ட 1992‡ம் ஆண்டில் வெளிவந்த வரலாற்றின் இறுதிநிலை என்ற ஃபுக்கியாமாவின் படைப்பு அது சேர வேண்டிய இடத்தை அதாவது வரலாற்றின் குப்பைத் தொட்டியை அதாகவே தேடி எடுத்து அடைக்கலம் புகுந்து கொண்டதற்கும் காரணம் மார்க்ஸ் முன்வைத்தது விஞ்ஞானம். ஆனால் ஃபுக்கியாமா செய்ய முயன்றது முதலாளித்துவ ஊழியம். 
இந்நிலையில் மார்க்ஸ் முன்வைத்த விஞ்ஞானப்பூர்வக் கனவை நனவாக்கிய நவம்பர் புரட்சியினை நினைவு கூர்வோம். அதன் வழிகாட்டுதலின் அடிப்படையில் உரிய படிப்பினைகளை எடுத்துக் கொண்டு இந்திய மண்ணில் முதலாளித்துவ எதிர்ப்பு சோசலிசப் புரட்சியினை உருவாக்கி நிறுவ உறுதியேற்போம்.கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முகப்பு

புதிய பதிவுகள்