வெள்ளி, 18 நவம்பர், 2011

விலைவாசி உயர்வில் சிக்கி தவிக்கும் மக்கள் தலையில் பேரிடியாக இறங்கியுள்ள பஸ்,பால், மின்சார கட்டண உயர்வு !

ஏற்கனவே பெட்ரோல் விலை உயர்வு, வீட்டு வாடகை உயர்வு , மற்றுமுள்ள அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்வால் உழைக்கும் மக்கள் கடும் நெருக்கடியில் இருக்கும் இந்த நிலையில் தமிழக அரசு எரியும் கொள்ளியில் எண்ணெய் வார்ப்பது போல பஸ் , பால் மற்றும் மின்சார கட்டணங்களை சாதாரண மக்கள் தாங்கிக்  கொள்ள முடியாத அளவிற்கு உயர்த்தியுள்ளது . சட்டமன்ற தேர்தல் வெற்றி, உள்ளாட்சி தேர்தல் வெற்றி என்று அடுத்தடுத்த வெற்றிகளை மக்கள் இந்த ஆளும் அரசுக்கு தந்ததற்கு பரிசாக இந்த அத்தியாவசிய பொருள்கள் விலை உயர்வை பேருடியாக சாதாரண மக்கள் மீது இறங்கியிருக்கிறது.
ஆடு, மாடு,மிக்சி ,கிரைண்டர் ,லேப்டாப் ஆகியவற்றை இலவசமாக வழங்குவதற்கும், அதற்கு மேடை போடுவதற்கும் கோடிகளை வாரி இறைப்பதற்கு  தமிழக அரசிடம் பணம் இருக்கிறது , முதலாளித்துவ நிறுவனங்களுக்கு சலுகைகளை வாரிக் கொடுப்பதற்கு பணம் இருக்கிறது, காவல் துறைக்கு அள்ளி,அள்ளி கொடுக்கிறது தமிழக அரசு, ஆனால் மக்களின் அத்தியாவசியமான தேவையாக இருக்ககூடிய பொருள்களை ,பணியை செய்ய கூடிய நிறுவனங்களுக்கு மானியம் கொடுக்க அரசு பஞ்சப்பாட்டு பாடுகிறது. 

ஏழை மக்களை எப்படி வதைத்தாலும் தாங்கி கொள்வார்கள் என்ற ஆட்சியாளர்களிடம் ஊறிப்போய் உள்ள மனோபாவமே இது போன்ற மனித தன்மையற்ற உத்தரவுகளை பிறப்பிக்க வைக்கிறது. இனியும் மக்கள் வீடுகளில் முடங்கி கிடக்காமல் தெருவில் இறங்கி போராடினால்  தான் இந்த அரசுக்கு தக்க பாடம் புகட்ட முடியும். 

1 கருத்து:

  1. இது தான் புரட்சி பற்றிக் கொள்ளும் தருணம்.. உள்ளுக்குள் புகைந்து கொண்டிருக்கும் தீயை ஊதிப் பெரிதாக்க ஒரு இயக்கம் வேண்டும்...

    பதிலளிநீக்கு

முகப்பு

புதிய பதிவுகள்