ஞாயிறு, 18 செப்டம்பர், 2011

குஜராத் முதல்வர் மோடியின் உண்ணாவிரதமும் இந்திய மக்களின் நினைவுத்திறனும்

இந்திய நாட்டின் அமைதி வேண்டியும், மத நல்லிணக்கத்துக்காகவும் மூன்று நாள் உண்ணாவிரதத்தை குஜராத் முதல்வர் திருவாளர் நரேந்திர மோடி அகமதாபாத் குஜராத் பல்கலைக்கழக வளாகத்தில் இன்று துவக்கியுள்ளார். குஜராத் கலவரம் சம்பந்தமான வழக்குகள் குஜராத் மாநிலத்திற்கு மாற்றப்படும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு வெளியான உடனே மேற்குறிப்பிட்ட ‘’உன்னத’’ நோக்கிற்காக இந்த உண்ணாவிரதத்தை நரேந்திர மோடி துவக்கியுள்ளார். அடுத்து மத்தியில் ஆட்சிக்கு வரவேண்டும் அல்லது மத்திய ஆட்சியில் பங்குபெற வேண்டும் என்ற நோக்கில் அ.தி.மு.க. உள்ளிட்ட மாநிலக் கடசிகளும் பாரதிய ஜனதா கட்சியோடு சேர்ந்து மோடியின் இந்த உண்ணாவிரதத்தை உளமாற வாழ்த்தி வரவேற்றுள்ளுனர். காங்கிரஸ் கட்சியோ நரேந்திர மோடியின் இந்த அதிர்ச்சிகரமான அதிரடி நடவடிக்கையைக் கண்டு சிறிது சலசலப்புடன் குஜராத் மாநில காங்கிரஸ் தலைவர் சங்கர் சிங் வகேலா தலைமையில் ஒரு போட்டி உண்ணாவிரதத்தை அறிவித்து நடத்திக் கொண்டுள்ளது.

ஊழலின் கோர உருவமாக காட்சியளிக்கும் காங்கிரஸ் கட்சிக்கெதிரான சரியான எதிர்க்கட்சியாக பாரதிய ஜனதாவின் தற்போதைய தலைமையினால் தன்னை முன்னிறுத்த முடியாத இச்சூழ்நிலையில் அக்கட்சியின் முக்கிய தலைவரும், தன்னுடைய ‘சிறந்த’ நிர்வாகத்திறனால் குஜராத் அரசியலில் அசைக்க முடியாத இடத்தைக் கொண்டிருப்பவரான நரேந்திர மோடி இத்தருணத்தை சரியாகக் கணித்து தன்னை ஒரு பிரதம வேட்பாளராக முன்னிறுத்தும் பொருட்டு இந்த உண்ணாவிரதத்தை துவக்கியுள்ளார். உச்சகட்ட இலாப நோக்கத்தை அடிப்படையாகக் கொண்ட முதலாளித்துவச் சமூகமும் அதன் அடிவருடிகளும் திறம் வாய்ந்த ஆளும் திறன் கொண்ட நரேந்திர மோடியை ஒரு பிதாமகனாகவே பார்க்கின்றனர்.(உபயம் இந்திய முதலாளித்துவ தொலைத் தொடர்புச் சாதனங்கள்)

ஒரு சமயத்தில் மிகச்சரியாகவே அமெரிக்கா மோடியின் மத வெறி வாதப் பின்புலத்தைக் கருத்தில் கொண்டு மோடிக்கு விசா கொடுக்க மறுத்ததை கடுமையாக விமர்சித்த இந்திய, மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சிகளோ இவ்உண்ணாவிரதம் குறித்து குறிப்பிட்டுச் சொல்ல ஒன்றுமில்லாதவர்களாக உள்ளனர். சமூக மாற்றப் பாதையிலிருந்து விலகி இந்திய முதலாளித்துவத்தைக் காக்கவும், அதற்காக பணிபுரியவும் கள்ளத்தனமாக தயாராகிக் கொண்டிருக்கும் இக்கட்சிகளின் மெளனத்தை நாம் புரிந்து கொள்ள முடியும். அமெரிக்கா மோடிக்கு விசா கொடுக்க மறுத்ததை ஜனநாயகத்திற்கு விரோதமானது என்று கடுமையாக எதிர்த்த இவர்கள் உண்ணாவிரதம் ஜனநாயகமயமானதே என்ற அடிப்படையில் மோடியின் உண்ணாவிரதத்தை ஆதரிக்க வேண்டி வருமோ என்று மோடியின் இக்கபட நாடகத்தை கண்டும் காணாது மெளனமாக இருக்கிறார்கள்.

‘தன்னுடையத் திறம் மிகுந்த நிர்வாகத் திறனால்’ அதாவது முதலாளித்துவச் சேவையினால் இன்றைய உலக அளவிலான பொருளாதார மந்தச்சூழ்நிலையிலும் குஜராத் மாநிலத்தில் குறிப்பிடத்தக்க வகையில் தொழில் வளர்ச்சியைக் கொண்டு வந்துள்ளார். அதற்கு மிக முக்கிய காரணம் மத, இன வெறி வாதப் பின்புலத்துடன் தொழிலாளர் இயக்கங்களே குஜராத் மாநிலத்தில் தோன்றா வண்ணம் ஆட்சி புரியும் திருவாளர் நரேந்திர மோடி அவர்களின் பாசிச உட்கூறுகளே. இவைகளே அவரது சிறந்த நிர்வாகத் திறனன்றி வேறெதுவுமில்லை.

கடந்த 2001 ஆம் ஆண்டு முதன் முதலாக தான் ஆட்சிக்கு வந்த சமயத்தில் தன்னுடைய ஆட்சியை நீண்ட நாள் நீட்டிப்பதற்காக கோத்ரா கோரச் சம்பவத்தையும் அதன் தொடர்ச்சியாக குஜராத் மாநிலம் முழுவதும் மதக் கலவரத்தை கட்டவிழ்த்துவிட்ட திருவாளர் நரேந்திர மோடி அவர்கள் தொழிலாளர் இயக்கங்களை நசுக்கி உருவாக்கிய தொழில் வளர்ச்சியைக் காட்டி அக்கொடுமையான மனித விரோதச் செயலை மறைக்க முயன்று கொண்டுள்ளார். அதே சமயம் ‘கருமமே கண்ணாயினன்’ என்ற கூற்றிற்கிணங்க தன் முதலளித்துவச் சேவையானது குஜராத் மாநிலத்திற்காக மட்டுமல்ல, இந்திய தேசம் முழுவதும் பரவ வேண்டும் என்ற மிகப்பெரிய அபிலாசையுடன் இவ்உண்ணாவிரதத்தை நடத்திக் கொண்டுள்ளார். ‘சூழ்நிலை காரணமாக தவறேனும் செய்திருந்தால் அதை உணர்ந்து அவற்றிலிருந்து படிப்பினை எடுத்துக் கொண்டு இந்நாட்டின் மக்கள் ஒவ்வொருவருக்காவும் உழைப்பதே தன் இலட்சியம்’, அதன் அடிப்படையிலேயே இவ்உண்ணாவிரதத்தை தாம் மேற்கொண்டுள்ளதாகவும் கூறி தம்முடைய கலங்கப்பட்ட முகவிலாசத்தை சரி செய்ய முயற்சித்துக் கொண்டுள்ளார்.

மிகப்பெரும்வாரியான இந்திய ஏழை, எளிய, உழைக்கும் மக்களே! மத, இன வெறிவாதம் கொண்ட வஞ்சினப்புலி பசும்தோல் போர்த்தியள்ளது. மதவெறி கொண்ட சாத்தான் முதலாளி வர்க்கம் மற்றும் அதன் ஊடகம் ஆகியவற்றின் துணையோடு வேதம் ஓதத் துவங்கியுள்ளது. மனித நினைவு குறுகியது; பொதுமக்களின் பொது நினைவோ மிகக்குறுகியது என்ற கூற்றை மீண்டும் ஒருமுறை மெய்யாக்கிவிடாதீர்கள். விழித்தெழுங்கள். பதவி வெறி கொண்டு அரங்கேற்றப்படும் குஜராத் முதல்வர் திருவாளர் மோடி அவர்களின் இவ்வேசதாரித்தனத்தை இனம் காணுங்கள். அம்பலப்படுத்துங்கள்.   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முகப்பு

புதிய பதிவுகள்