செவ்வாய், 6 செப்டம்பர், 2011

108 ஆம்புலன்ஸ் சேவையை அரசே ஏற்று நடத்தக் கோரி மாநிலம் முழுவதும் உண்ணாவிரதம்


108 ஆம்புலன்ஸ் மருத்துவ சேவைத் திட்டம் மத்திய அரசால் அறிமுகம் செய்யப்பட்ட ஒரு பிரபலமான திட்டமாகும். கல்வி, பொதுமருத்துவம் போன்றவை ஒரு மக்கள் நல அரசின் அதிமுக்கிய பணிகளாகும். அதில் பொதுமருத்துவம் சார்ந்த இந்த ஆம்புலன்ஸ் சேவை அரசாங்கத்தால் நடத்தப்படுவதாகவே பெரும்பாலோர் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் இந்த சேவை முழுமையாக அரசால் நடத்தப்படவில்லை. இந்த ஆம்புலன்ஸ் சேவையைப் பயன்படுத்தும் ஒவ்வொருவருக்கும் ஒரு குறிப்பிட்ட தொகையை நிர்ணயித்து அதனை ஜீ.வி.கே. என்ற தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் கொடுத்து தமிழக அரசு  இந்த சேவையை நடத்துகிறது. அந்த நிறுவனம் இந்த சேவையில் பணிபுரியும் கால் சென்டர், மருத்துவ தொழில் நுட்பம், ஆம்புலன்ஸ் ஓட்டுனர் ஆகிய மூன்று பிரிவினைச் சேர்ந்தவர்களுக்கும் எவ்வளவு குறைந்த ஊதியம் கொடுத்து வேலை வாங்க முடியுமோ அவ்வளவு குறைந்த ஊதியத்தினை வழங்கி வேலை வாங்குகிறது. 

விண்ணை முட்டும் அளவிற்கு அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும், ஒவ்வொருவர் ஊதியத்திலும் மிகப்பெரும் பங்கினை அவர்கள் பிள்ளைகளுக்கு வழங்கும் கல்வியும் விழுங்கும் இன்றைய நிலையில் மேலே கூறிய மூன்று பிரிவிலும் பணிபுரியும் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு மாதம் ஒன்றிற்கு 6000 முதல் 7000 வரை மட்டுமே அந்த நிறுவனம் ஊதியம் வழங்குகிறது. உலகெங்கிலும் 8 மணிநேர வேலை என்பது அங்கீகரிக்கப்பட்டுள்ள வேளையில் எவ்வகைக் கூடுதல் ஊதியமும் இன்றி மேலே கூறிய சம்பளத்திற்கு ஒரு நாளைக்கு 12 மணிநேரம் இந்த ஊழியர்கள் வேலை செய்ய வேண்டியுள்ளது. 
மாநிலம் முழுவதும் அரசு மற்றும் பிற துறைகளில் பணிபுரிபவர்களுக்கு ஆண்டுதோறும் அரசு விடுமுறை தினங்களாக பல தினங்கள் அறிவிக்கப்படுகின்றன. ஆனால் அந்த நாட்களில் கூட 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வேலை செய்ய வற்புறுத்தப்படுகின்றனர். இது அத்தியாவசிய சேவை என்பதால் அவ்வாறு வேலை செய்யவதற்கான அவசியமும் தேவையும் சில சமயங்களில் உருவாவது இயல்பே என்றாலும் அதுபோன்ற சமயங்களில் அரசு விடுமுறை தினங்களில் வேலை செய்பவர்களுக்கு இரட்டிப்பு ஊதியமோ அல்லது அந்த நாளில் வேலை செய்ததற்குப் பதிலாக வேறொரு நாள் விடுப்போ வழங்கப்படுவதே வழக்கம். ஆனால் அந்த நடைமுறை இந்த ஜீ.வி.கே. நிறுவனத்தால் கடைப்பிடிக்கப் படுவதில்லை. கூடுதல் ஊதியமும் வேறொரு நாள் விடுப்பும் இல்லாமல் எந்தவகை நியாயமும் இன்றி இங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் அரசு விடுமுறை தினங்களிலும் வேலை செய்ய நிர்ப்பந்திக்கப் படுகின்றனர். 
இது ஒரு உயிர்காக்கும் பணி. அதனால் தான் ஆம்புலன்ஸ்கள் வேகமாகச் செல்ல வழிகொடுக்க வேண்டும் என்பதற்காக ஊர்திக்கு மேலே சிவப்பு விளக்கும் ஒலி எழுப்பும் கருவியும் பொருத்த அனுமதித்துள்ளனர். ஆனால் இந்த ஜீ.வி.கே. நிறுவனமோ உயிர்காக்கும் பொறுப்பைப் பெரிதாகக் கருதாமல் 50 கிலோமீட்டர் வேகத்திற்கு மேல் ஊர்தியை ஓட்டக்கூடாது என்று எரிபொருள் சிக்கனத்தை மனதிற்கொண்டு ஓட்டுனர்களுக்கு உத்தரவிடுகிறது. அதனால் உயிர்காக்கும் பணியினை உரிய விதத்தில் செய்யவியலாத நிலையில் இத்திட்டத்தில் பணிபுரியும் ஓட்டுனர்கள் உள்ளனர். தனது செலவினங்களைக் குறைப்பதற்காக காலாவதியான டயர்களைக் கூட இத்திட்டத்திற்காகப் பயன்படுத்தப்படும் ஆம்புலன்ஸ் ஊர்திகளில் இதன் நிர்வாகம் பொருத்துகிறது. அதனால் ஆங்காங்கே டயர் பழுதடைந்து நோயாளிகளை உரிய சமயத்தில் மருத்துவமனைகளில் கொண்டு சென்று சேர்க்க முடியாத நிலையும் ஏற்படுகிறது. 
மருத்துவத் துறையின் மிகமையமான கருத்தே சுத்தத்தை உரிய முறையில் பராமரிப்பது தான். ஆனால் பிரசவத்திற்காக வரும் கர்ப்பிணிப் பெண்களையும், விபத்துக்களால் பாதிக்கப்படுவோர் உட்பட பல தரப்பு நோயாளிகளையும் அடிக்கடி மாற்றி மாற்றி ஏற்றிச் செல்லும் இந்த ஊர்திகள் உரிய முறைகளில் உரிய கால இடைவெளிகளில் சுத்தம் செய்யப்படுவதில்லை. அந்தச் செலவையும் கூட சிக்கனப்படுத்த இந்த ஜீ.வி.கே. நிர்வாகம் விரும்புகிறது. இவ்வாறு உரிய ஊதியம், வேலைச் சூழ்நிலை இன்றி அவதியுறும் இத்திட்டத்தில் வேலை செய்வோர் தங்களது பிரச்னைகளை உரிய அமைப்புகளிடம் கொண்டு சென்றால் கூட அவர்கள் மீது பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படுகின்றன. சங்கம் அமைப்பதற்கு முன்பு வேலை நீக்க உத்தரவுகள் கூட யாருக்கும் எழுத்து மூலமாக வழங்கப்படாதிருந்ததது. இந்த நிலை சங்கம் அமைத்ததற்குப் பின்பு சற்று மாறி எழுத்து மூலமாக தற்காலிகப் பணிநீக்க உத்தரவுகளும் குற்றச்சாட்டுக் குறிப்பாணைகளும் எடுத்ததற்கெல்லாம் வழங்கப்படுகின்றன. 
ஊழியர்களைப் பிரித்தாள்வதற்காக தங்களுக்குச் சாதகமான ஒரு பிரிவு தொழிலாளருக்குப் பாரபட்சமாக நல்ல ஊழியர்கள் என்று தரப்படுத்துதலும் மற்றவர்களை ஏதாவது இட்டுக்கட்டப்பட்ட குற்றச்சாட்டுகளைக் கூறி வேலைத்தரம் குன்றியவர்களாக அறிவிப்பதும் மிகச் சாதாரணமாக நடைபெற்றுக் கொண்டுள்ளது.
இவ்வாறு மக்கள் நல அரசின் ஒரு மிகமுக்கியப் பணி தனியார் வசம் ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்படுவதால் ஒப்பந்தத்திற்கு எடுத்துள்ள ஜீ.வி.கே. நிறுவனம் இந்தப் பொதுசுகாதாரப் பணியினை அதிகபட்ச லாபம் சம்பாதிக்கும் மனநிலையோடு நடத்தி அதனால் நோயாளிகளுக்குக் கிட்டும் சேவையிலும் இப்பணியின் அச்சாணியாக செயல்படும் ஊழியர்களின் ஊதியம், உரிமைகள், வேலைச் சூழ்நிலை ஆகியவற்றிலும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. ஜீ.வி.கே. நிறுவனத்தின் மத்திய நிர்வாகம் இப்படிப்பட்ட மருத்துவ சேவைக்குப் பொருந்தி வராத மோசமான லாப நோக்குடன் செயல்படும் வேளையில் அதன் கீழ்மட்ட நிர்வாகிகள் பல முறைகேடுகளில் ஈடுபடுகின்றனர். அதாவது வேலை நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்குக் கூட பலகாலம் அவர்கள் வேலையில் இருப்பதாகக் காட்டி ஊதியம் பெற்று அதனைக் கையாடல் செய்கின்றனர். அது மட்டுமின்றி தாங்கள் இருந்த இடத்தைவிட்டு எங்கும் நகராமல் இருந்து கொண்டே பல இடங்களுக்குச் சோதனையிடச் சென்றதாகப் பொய்யாகக் கூறி படியும் அலவன்ஸ்களும் பெறுகின்றனர். 
மக்களுக்குத் தேவையான மருத்துவ சேவையை உரிய முறையில் செய்வதற்குத் தடையாக உள்ள இந்தப் போக்குகளைக்  களையவேண்டித் தனித்தனியாக நிர்வாகத்திடம் தொழிலாளர்களாகிய நாங்கள் கேட்டால் நிர்வாகம் வேலை நீக்கம் போன்ற அதீத நடவடிக்கைகளுக்குச் செல்கிறது என்பதால் நாங்கள் ஒருங்கிணைந்து 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் என்ற சங்கத்தை ஆரம்பித்து எங்களுடைய குறைகளை ஒரு மனுவாகத் தயாரித்து மாவட்ட ஆட்சியர்களிடம் வழங்கியுள்ளோம். அதுதவிர மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கும் மனுச் செய்துள்ளோம். அதன் பின்னரும் கூட நிர்வாகத்தின் போக்கில் எந்தவித மாற்றமும் இல்லாததால் இந்த மருத்துவ சேவையின் பயனாளிகள் என்ற ரீதியில் பரந்துபட்ட மக்களாகிய உங்களிடம் நாங்கள் தற்போது வந்துள்ளோம். எங்களது மிகமுக்கியக் கோரிக்கை ஒரு மக்கள் நல அரசின் முக்கியப் பணி என்ற ரீதியில் இந்த பணி அரசால் மட்டுமே உரிய முறையில் நடத்தப்பட முடியும் என்பதால் இப்பணியினை அரசே ஏற்கவேண்டும் என்பதாகும். லாப நோக்குடன் செயல்படும் எந்தத் தனியார் நிறுவனமும் மருத்துவச் சேவையினை உரிய முறையில் செய்ய முடியாது என்பதால் இந்தக் கோரிக்கையை மிக முக்கியமாக நாங்கள் வலியுறுத்துகிறோம். அதற்காக நாங்கள் சேவைக்குப் பங்கம் ஏற்படாத விதத்தில் நடத்தும் அனைத்து அறப்போர்களிலும் எங்களுக்கு உறுதுணையாக நின்று உங்களுக்கான எங்களது சேவை உரிய முறையில் நடைபெற உதவுமாறு வேண்டிக் கொள்கிறோம். 

தமிழக அரசே!
  •  108 ஆம்புலன்ஸ் சேவையை ஏற்று நடத்து.
  • அரசுத் துறையில் பணிபுரிபவர்கள் பெறும் விகிதத்தில் சம்பளம் மற்றும் சலுகைகள் வழங்கு.
ஜீ.வி.கே. நிர்வாகமே
  • கன்னியாகுமரி மாவட்டத்தில் 14 ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள தற்காலிகப் பணிநீக்க உத்தரவினை திரும்பப் பெறு
  • தன்னிச்சையாகப் பழிவாங்கும்  நோக்குடன் இடமாற்ற உத்தரவுகள் வழங்குவதையும் உள்நோக்குடன் குற்றச்சாட்டுக் குறிப்பாணைகள் வழங்கும் போக்கினையும்  கைவிடு
  • 8 மணிநேரத்திற்கு அதிகமாகச் செய்யும் வேலைக்கு ஓவர்டைம் ஊதியம் வழங்கு.
  • அரசு விடுமுறை நாட்களில் வேலை செய்பவர்களுக்கு இரட்டைச் சம்பளமோ அல்லது மாற்று விடுப்போ வழங்கு.
  • தன்னிச்சையாகக் கடந்த காலங்களில் வேலை நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளரைப் பணித்தொடர்ச்சியுடன் மீண்டும் வேலைக்கு எடு.
  • வாகனத்தைத் தூய்மையாகவும் உரியமுறையிலும் பராமரிப்பதற்கும், ஊழியர்கள் ஓய்வு நேரத்தில் தங்கவும் உரிய ஏற்பாடுகள் செய்.

---------------------------------------------------------------------------------------------------------------------
மாநிலம் முழுவதும் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களின் உண்ணாவிரதம்
08.09.2011 (வியாழன்), காலை 10 மணிமுதல் மாலை 6 மணிவரை
---------------------------------------------------------------------------------------------------------------------
தொடர்புக்கு: 
தோழர் கு.கதிரேசன், அமைப்புச் செயலாளர்
108ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம்(108AWU),தமிழ்நாடு.
(இணைப்பு சி.ஓ.ஐ.டி.யு.) 
அலைபேசி: 9843464246


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முகப்பு

புதிய பதிவுகள்