சனி, 6 ஆகஸ்ட், 2011

தற்போதைய தொழிலாளர் இயக்கத்தில் கம்யூனிஸ்ட்கள் ஆற்ற வேண்டிய வரலாற்றுக் கடமை

 தொழிலாளர் தம்மைத் தாமே மாற்றிக் கொள்ளாமல் தம்மைச் சுற்றியிருக்கும் உலகை மாற்ற முடியாது என்ற கம்யூனிச ஆசான் காரல் மார்க்சின் கூற்று முன்னெப்போதையும் விடத் தற்போது மிகவும் அர்த்தமுள்ள நிதர்சன உண்மையாக உள்ளது.  பாட்டாளிகள் சமூக மாற்றத்தை நோக்கிய புரட்சிகர இயக்கத்தின் வளர்ச்சிக்கூறு என்றும் கம்யூனிஸ்டுகள் சரியான சமூக மாற்றத்தை நோக்கி தடம் புரளாமல் வழி நடத்துபவர்கள் என்பதை மிகத் தீர்க்கமாக தமது கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் பாட்டாளிகளும், கம்யூனிஸ்டுகளும் என்ற பகுதியில் மாமேதை கார்ல் மார்க்ஸ் எடுத்துரைத்தார். மாமேதை லெனின் அவர்களோ பாட்டாளிகள் தொழிலாளி வர்க்கப் போராட்டத்தின் முன்னணிப் படையாகத் திகழ வேண்டும் என்பதை சொல்லும் செயலுமாக இரஷ்ய மண்ணில் சோ­லிச சமூக கட்டியமைத்ததின் மூலம் உலகத் தொழிலாளி வர்க்கத்திற்கு அவர்தம் வரலாற்றுக் கடமையை உணர்த்தினார்.
ஆளும் முதலாளித்துவ சக்திகளின் சதியாலும், கம்யூனிசப் பதாகையைச் சுமந்து கொண்டு எதிர்ப்புரட்சியை நடத்திக் கொண்டிருக்கும் திருத்தல்வாதச் சக்திகளாலும் உலக அளவிலும் குறிப்பாக இரஷ்யாவிலும் சோசலிச சமூக அமைப்பு வீழ்ச்சியடைந்த பின்பு சமூக மாற்றத்தை நோக்கிய சோசலிசப் புரட்சிப் பாதையின் வீச்சானது உலக அளவில் குறையத் தொடங்கியுள்ளது. ஆனால் இப்பிண்ணடைவைச் சரியான மார்க்சிய வழியில் பார்க்கத் தவறிய கம்யூனிச இயக்கமும் உலக அளவில் வீச்சு குறைய ஆரம்பித்தது. இச்சாதகமானச் சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்ட முதலாளி வர்க்கம் முதலாளித்துவச் சமூக அமைப்பே மனிதகுல வரலாற்றில் முழு வளர்ச்சி பெற்ற சமூக அமைப்பாகும். அச்சமூக அமைப்பில் தோன்றும் கோளாறுகளும், பிண்ணடைவுகளும் இவ்வமைப்பிற்குள்ளே தீர்க்கப்பட முடிந்தவையே என்ற கருத்தை மிகத்தீவிரமாக உலகம் முழுவதிலும் பரப்பத் தொடங்கின. இதில் குறிப்பிட்டு நோக்க வேண்டிய விசயம் என்னவென்றால் மேற்குறிப்பிட்ட கருத்துகள் கம்யூனிச இயக்கங்களிலும் ஊடுருவத் தொடங்கியதுதான்.


 ஆனால் முதலாளி‡தொழிலாளி என மிகக் கூர்மையடைந்த வர்க்க முரண்பாட்டைக் கொண்ட முதலாளித்துவச் சமூக அமைப்பானது முன்னைவிட தீவிரமான நெருக்கடிகளை அடுத்தடுத்து சந்திக்கும் என்று தீர்க்கமாக உலகிற்கு எடுத்துரைத்த மார்க்சியமே சமூக மாற்றம் குறித்த சரியான புரிதலுடைய தத்துவம் என்பது தற்போதைய முதலாளித்துவ உலகையே ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் தற்போதைய பொருளாதார நெருக்கடி உலகிற்குப் பறை சாற்றிக் கொண்டுள்ளது. மேலைநாடுளில் வாழ்கைச் சம்பளம் கொடுத்து இதுவரை தொழிலாளி வர்க்கத்தை மதிமயக்கி வைத்திருந்த முதலாளி வர்க்கத்தின் செல்லுபடியாகாத சமூகத்தன்மை இம்மாபெரும் பொருளாதார நெருக்கடி மூலம் அம்பலப்பட்டு போயுள்ளது.
மதவாதத்தை ஆயுதமாகத் தரித்துக் கொண்டிருந்த வளைகுடா நாடுகளிலும் இப்பொருளாதார நெருக்கடியின் வீச்சு சமூக இயக்கங்களாக மாறிக் கொண்டுள்ளது.  வடக்கே கூர்காவுன் மாருதித் தொழிற்சாலை தொடங்கி தெற்கே சென்னையில் ஹூண்டாய் தொழிற்சாலை வரை தொழிலாளர் இயக்கங்களும், ஊறிப்போன ஊழலுக்கெதிரான சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே அவர்களால் துவங்கப் பட்டுள்ள சமூக இயக்கங்களும் இந்தியாவிலும் இப்பொருளாதார நெருக்கடியின் பின்விளைவாகவே நடைபெற்றுக் கொண்டுள்ளன.


 சமூகப் பார்வையானது மாறாத்தன்மை கொண்டதல்ல, மாறாக அது இயக்கவியல் பொருள்முதல்வாத அடிப்படையிலானது. மார்க்சியம் உலக கம்யூனிச இயக்கத்திற்கு போதித்ததும் இவ்வியக்கவியல் பொருள்முதல்வாதத்தைத்தான். உலக அளவில் சோசலிச முகாம் வீழ்ச்சியடைந்த பின்பு முதலாளித்துவமானது இழப்பதற்கு எதுவுமில்லாத தொழிலாளி வர்க்கத்தை அவர்கள் கண்டிப்பாக இழக்க வேண்டிய குணாம்சங்களான முதலாளித்துவ குணாம்சங்களை தொழிலாளர் மனதில் வெற்றிகரமாக உருவாக்கியுள்ளது. எனவேதான் தொழிலாளர் தம்மைத்தாமே திருத்திக் கொள்ளாமல் தம்மைச் சுற்றியிருக்கும் உலகை மாற்ற முடியாது என்ற மார்க்சிய கூற்று தற்போது மிகவும் அர்த்தமுள்ளதாக மாறிப்போயுள்ளதில் வியப்பேதுமில்லை.


 ஆனால் நெருக்கடிச் சூழ்ந்த முதலாளித்துவச் சமூகத்தில் தன்னிச்சையாகவே தொழிலாளர் இயக்கங்கங்கள் தோன்றவே செய்யும். அவ்வியக்கங்களை வழிநடத்தும் கம்யூனிஸ்ட் இயக்கங்களும் மார்க்சிய இயக்கவியல் பொருள்முதல்வாத அடிப்படையில் தொழிலாளர் இயக்கங்களை அணுக வேண்டும். அதே சமயத்தில் தொழிலாளர் அமைப்புகளை கம்யூனிசப் பாடசாலைகளாக நடத்த வேண்டிய உண்மையான கம்யூனிஸ்ட் கட்சிகளோ தொழிலாளர் மத்தியில் முதலாளித்துவ சதியால் உருவாகி வளர்ந்து வரும் முதலாளித்துவக் கலாச்சாரச் சீர்கேடுகளைக் கழைய முன்னைவிடத் திரமான வகையில் புரட்சிகரச் சமூக மாற்ற இயக்கத்தை முன்னெடுத்து செல்லப் போராட வேண்டும். சமூகம் தன்மேல் சுமத்தியுள்ள வரலாற்றுக் கடமையை முன்னைவிடச் சீரிய முறையில் நிறைவேற்றப் பாடுபட வேண்டும்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முகப்பு

புதிய பதிவுகள்