வியாழன், 19 மே, 2011

மேற்கு வங்க இடது முன்னணி படு தோல்வி - பாடம் கற்பித்த மேற்கு வங்க உழைக்கும் மக்கள்

மே 13 ம் தேதி 5  மாநிலங்களுக்கான தேர்தல் முடிவுகள் பல  ஊடகங்களில் நேரடியாக  ஒளிபரப்பாகி கொண்டிருந்தது. அன்று அனைத்து                     தொலைக்காட்சிகளிலும் சிபிஐ, மற்றும் சிபிஎம் கட்சியை சேர்ந்த தோழர்கள் நேரடியான விவாதங்களில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் அனைவருமே இந்தியாவில் நடைபெற்றுவரும் தேர்தல் ஜனநாயகத்தை பற்றி சிலாகித்து பேசிக்கொண்டிருந்தனர் . மேற்கு வங்க தேர்தல் முடிவுகள் வரத்துவங்கியதும் அவர்களின் சுருதி குறைய துவங்கியது. மற்ற மாநிலங்களை விட மேற்கு வங்கத்தில் இடதுசாரிகள் தோல்வியடைந்த செய்தியை ஊடகங்கள் உற்சாகமாக அறிவித்தன. ஏனெனில் அதில் அவர்களின் வர்க்க நலனும் அடங்கியிருக்கிறதல்லவா! உண்மையிலையே சிபிஎம்மோ சிபிஐயோ  உண்மையான கம்யூனிஸ்ட் கட்சிகள் அல்ல என்பது பாமர மக்களுக்கு கூட தெரியும் இருந்த போதும் முதலாளித்துவத்தை விழ்த்த காத்திருக்கும் ஆயிரம்கால்பூதம்  அல்லவா  கம்யூனிசம். கம்யூனிஸ்டுகள்  தோற்றனர் என்பதில் அவர்களுக்கு கண்டிப்பாக சந்தோசம் இருக்கவே செய்யும்  அதனால் தான் மேற்கு வங்கத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகள்  தோல்வியடைந்ததை  முதலாளித்துவ ஊடங்கங்கள் பெருமையுடன் முழங்கின. இவ்வளவு பெரிய தோல்வியை  யாரும் எதிர்பார்க்கவில்லை ,  புத்ததேவ் உட்பட பல அமைச்சர்களும் தோழ்வியை தழுவினர். 34  ஆண்டு கால கம்யூனிச   கோட்டை தூள்தூளானது. மேற்கு வங்க மக்கள் எந்த அளவிற்கு துன்பத்தை அனுபவித்திருக்கின்றனர் என்பது இதன் மூலம் தெளிவாகிறது.

மேற்கு வங்க உழைக்கும்  மக்கள்  படும் துன்பங்கள் மம்தா வந்தாலும் மாறப்போவதில்லை அது இந்த முதலாளித்துவ அமைப்பு முறை இருக்கும் வரை தொடர்ந்து கொண்டே தான்  இருக்கும். ஆட்சிக்கு வந்த இடது முன்னணி அரசு வர்க்க போராட்ட குணத்தை முற்றிலும் இழந்து நாடாளமன்றத்தை பயன்படுத்துகிறோம் என்று கூறி கொண்டு முதலாளித்துவ கட்சிகளை விட வேகமாக நாடளமன்றவாதத்தில் மூழ்கி சீரழிந்தது. மக்கள் இயக்கங்களை அது மருந்துக்கு கூட கையில் எடுக்கவில்லை.

 நிலச்சீர்திருத்தங்களை பெருமையோடு செய்த அந்த அரசே பின்பு நிலத்தை குறைவான விலைக்கு விவசாயிகளிடம் இருந்து  பறித்து டாட்டவிற்கு கொடுத்தது, போராடிய விவசாயிகளை சுட்டு கொன்றது. தொழிலாளர் போராட்டங்களில் காவல் துறையை பயன்படுத்துவதில்லை என்று தீர்மானம் போட்ட மேற்குவங்க அரசு உரிமைகளுக்காக போராடிய தொழிலாளர்கள் மீது காவல் துறை வன்முறையை ஏவி விட்டது. ஆரம்பத்தில் அரசின் முற்போக்கான திட்டங்களுக்காக அரசு இயந்திரத்திற்கு தன்னலமற்று  உதவிய கட்சி தொண்டர்கள் நாளைடைவில் ஊழல் நிரைந்த அரசு இயந்திரத்தின் பங்கும் பகுதியுமாக வில்லன்களாக உருவெடுத்தனர், அந்நிய முதலீடுகளை மேற்கு வங்கத்தில்  திறத்து விட்டது. அரசின் தொழிலாளர் விரோத போக்கை எதிர்த்து போராடியவர்களை இரும்பு கரம் கொண்டு ஒடுக்கியது.


முதலாளிகளுக்கு சிறந்த சேவகனாக பணியாற்றியது மேற்கு வங்க இடது முன்னணி அரசு, உழைக்கும் மக்கள் மீது அடக்கு முறையையும்  ,வன்முறையும் ஏவிவிட்டது. சாதாரண மக்கள் அரசின் அடக்குமுறையோடு கம்யூனிஸ்ட் கட்சி பிரதிநிதிகளின் வன்முறையையும் எதிர்கொள்ளும்படியாகியது. பல அமைச்சர்கள் தங்களை வளப்படுத்திகொண்டார்கள். மக்கள் வறுமையில் வாடினர். இவ்வளவும் சேர்ந்து தான் அந்த மக்களை இடது முன்னணிக்கு எதிராக திருப்பியுள்ளது. எந்தவிதத்திலும் திருத்த முடியாத, சீரழிவின் ஒட்டுமொத்த கூடாரமாக சிபிஐயும் , சிபிஎம்மும் மாறிவிட்டன. இந்தியாவெங்கும் முதலாளிகளுக்கு திறம்பட சேவை செய்து தொழிலாளி வர்க்க விரோதியாக நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வரும் இந்த கம்யூனிச போலிகளால் உழைக்கும் வர்க்கத்திற்கு யாதொரு நன்மையும் ஏற்படப்போவதில்லை. ஆகவே உழைக்கும் மக்களே போலிகளை கண்டு ஏமாறாதீர்கள்.


2 கருத்துகள்:

  1. தோழ்வின்னு சொல்லபட்ட இடங்கள் தோல்வின்னு சொல்லி இருக்கனும் எழுத்துபிழைகள் கவனிக்கவும்

    பதிலளிநீக்கு
  2. எழுத்து பிழை நீக்கப்பட்டது சுட்டி காட்டிய தோழருக்கு நன்றி

    பதிலளிநீக்கு

முகப்பு

புதிய பதிவுகள்