வியாழன், 12 ஏப்ரல், 2012

மையில நனச்சு பேப்பரில் அடிச்சால் மறுத்துப் பேச ஆளில்லை


மையில நனச்சு பேப்பரில் அடிச்சால் 
மறுத்துப் பேச ஆளில்லை; அதனைச் செய்யும் 
அச்சகத் தொழிலாளரின் பிரச்னைகளை 
நினைத்துப் பார்க்க அமைப்பில்லை 
என்ற நிலையை மாற்ற அணிதிரள்வோம்
 வாழ்க்கைச் செலவினங்கள் விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்தாலும் சம்பளம் மட்டும் சிறிதளவு கூட உயராத பல தொழில்கள் நமது நாட்டில் உள்ளன. அவற்றில் ஒன்று அச்சுத் தொழிலாகும். “உலகம் இதுலே அடங்குது உண்மையும் பொய்யும் விளங்குது, கலகம் வருது; தீருது; அச்சுக் கலையால் உலகம் மாறுது” என்று பாடினார் கவிஞர் மருதகாசி. அவ்வாறு உலகையே மாற்றிய அச்சுக் கலைத்துறையில் பணிபுரிவோரின் ஊதியங்கள் சராசரியாக  மாதம் ரூபாய் 5000/ என்னும் அளவிற்கே உள்ளன.


 முன்பாவது ஓவியர்கள், அச்சுக் கோர்ப்போர் எனப் பலவகைத் தொழிலாளர்கள் அத்துறையில் பணிபுரிந்தனர். அவர்கள் அனைவருக்கும் ஊதியம் கொடுத்து அச்சகம் நடத்தும் போது பெரிய வருவாய் எதுவும் கிட்டாது; அந்நிலையில் கிட்டும் வருவாய்க்குத் தகுந்த விதத்தில் தானே ஊதியம் வழங்க முடியும் என்ற வாதத்தை அச்சக முதலாளிகள் முன் வைப்பதற்கு வாய்ப்பிருந்தது. தற்போது கணிணி மயம் ஏற்பட்ட பின்னர் அவ்வாறு பலரகத் தொழிலாளர் இருப்பதற்குத் தேவையே இல்லை என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. எத்தகைய பிரசுர வடிவமைப்பையும் கணிணி கற்ற ஓரிருவரைக் கொண்டே செய்து விடலாம் என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. இருந்தாலும் சம்பள உயர்வு என்பதை மட்டும் அச்சக முதலாளிகள் எண்ணிப் பார்ப்பதே இல்லை. நவீன மயத்தின் பலன்கள் அனைத்தையும் தாங்களே ஆதாயமாக அடைய வேண்டுமென அவர்கள் விரும்புகின்றனர்.

 வேலை தெரிந்தவர்கள் குறைவாக இருக்கும் எந்தத் தொழிலிலும் அவர்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் பேரம் பேசும் உரிமையும் அதன் மூலம் கூடுதல் ஊதியம் பெறும் வாய்ப்பும் அதிகம் இருக்கவே செய்யும். ஆனால் அச்சுத் தொழிலில் வேலை தெரிந்தோர் அத்தனை கூடுதல் எண்ணிக்கையில் இல்லாதிருந்தாலும் அவர்களால் கூடுதல் ஊதியம் பெற முடிவதில்லை. அதற்கான காரணம் ஒருபுறம் அவர்களுக்காக வாதிடுவதற்கு அமைப்பு இல்லாததும் மறுபுறம் தங்களது ஆட்தேவையை கூடுதல் முன்பணம் கொடுத்துத் தொழிலாளரை தக்க வைத்து அவர்களிடம் ஓவர்டைம் வேலை வாங்கி அச்சக முதலாளிகள் நிறைவேற்றிக் கொள்வதும் ஆகும். கைநீட்டிக் காசு வாங்கி விட்டோம்; அவர்கள் கூறுவது அனைத்தையும் செய்துதானே தீரவேண்டும் என்ற தார்மீக உணர்வு அச்சகத் தொழிலாளரை இவ்விசயத்தில் கட்டிப் போட்டு விடுகிறது. அதிக எண்ணிக்கையில் தொழிலாளர் வேலை செய்யும் அச்சகங்கள் மிகவும் குறைவு. அதனால் ஒவ்வொரு தொழிலாளரைப் பற்றியும் தனிநபர் ரீதியாக நன்கு தெரிந்து வைத்துக் கொண்டு குடும்ப உறவு போல் தொழில் உறவை நினைக்கும் மனநிலையை அவர்களிடம் ஏற்படுத்தி செண்டிமெண்டுகளைப் பயன்படுத்தி ஏமாற்றிச் சுரண்டும் போக்கும் இத்தொழிலில் தலை விரித்தாடுகிறது.

 சம்பள விகிதங்கள் தரைமட்டமாக இருப்பதால் மாலை வேளைகளிலும் வேறு அச்சகங்களுக்குச் சென்று பிளேட் போட்டுக் கொடுப்பது போன்ற வேலைகளைச் செய்து அதன்மூலம் ஏதாவது சம்பாதித்தாக வேண்டும் என்ற கட்டாயத்தில் பெரும்பான்மை அச்சகத் தொழிலாளர் உள்ளனர். அதனால் அவர்கள் தங்களது வாழ்க்கைச் சூழ்நிலையை நினைத்துப் பார்க்க முடியாதவர்களாகவும், தங்களது பிரச்னைகளுக்குத் தீர்வுகாண உகந்த வழி எது என எண்ணிப் பார்க்க முடியாதவர்களாகவும் உள்ளனர். அவர்கள் அமைப்பு ரீதியாக ஒன்று படுவதில் ஒரு மிகப்பெரும் சிக்கலை இச்சூழ்நிலை தோற்றுவிக்கிறது.

 மேலும் பெரிய பெரிய ‘இடது சாரிக் கட்சிகள்’ கூட அச்சகத் தொழிலாளருக்கென அமைப்புகளை ஏற்படுத்த முன்வருவதில்லை. அக்கட்சிகள் பலவற்றின் அடிப்படை அரசியல் வழி சிறு முதலாளிகளை நேச சக்திகள் எனக் கருதுவதால் அச்சிறு முதலாளிகளைப் பாதிக்கும் தொழிற்சங்க அமைப்புகளை உருவாக்க அவை முன்வருவதில்லை. சிறு முதலாளிகளின் சிரமங்கள் அவர்களது கண்களுக்குப் பளிச்செனத் தெரிவது போல் அச்சகத் தொழிலாளரின் தாங்கொண்ணா வாழ்க்கைப் பிரச்னைகள் அவர்களது கண்களுக்குத் தெரிவதில்லை.

 இந்நிலையில் அத்தியாவசியப் பொருட்களின் தொடர்ச்சியான விலை உயர்வோடு அரசு தற்போது சுமத்தியுள்ள பேருந்துக் கட்டணமும் பால் விலை உயர்வும் மிகக் குறைந்த ஊதியம் பெறும் அச்சு மற்றும் பைண்டிங் தொழிலாளரை வாட்டி வதைத்துக் கொண்டுள்ளன. அரசு அறிவித்துள்ள மின் கட்டண உயர்வு அடுத்துவரும் மாதங்களில் அவர்களை நிலைகுலைக்கக் காத்திருக்கிறது. மருத்துவச் செலவு கூடிக்கொண்டே போகிறது. குடும்பத்திற்கு தரமான மருத்துவ வசதி பெற அச்சகத் தொழிலாளருக்கு இ.எஸ்.ஐ. வசதி கிடையாது. இத்துடன் ஓரளவேனும் தரமான கல்வியைத் தங்கள் பிள்ளைகளுக்குத் தரவேண்டும் என்றால் அதற்கும் அவர்கள் ஒரு பெரும் தொகையைச் செலவிட வேண்டிய கட்டாயம் உள்ளது.

 இந்நிலையிலும் கூட ஒன்றுபட்டு ஒரு அமைப்பினை உருவாக்கி சம்பள உயர்வு போன்ற தங்களது அத்தியாவசியக் கோரிக்கைகளை வலியுறுத்தாது இருந்தால் நாகரீக சமூகம் வேண்டும் குறைந்தபட்ச வாழ்க்கையைக் கூட நடத்த முடியாதவர்களாக அச்சுத் தொழிலாளர்கள் ஆகிவிடுவர். கண் கெட்டபின் யாரும் சூரிய நமஸ்காரம் செய்ய முடியாது. அதனை உணர்ந்து மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த அச்சுத் தொழிலாளரின் முன்னணி ஊழியர்கள் கடந்த பல மாத காலமாக அரும்பாடுபட்டு விரவியும் சிதறியும் கிடக்கும் அச்சுத் தொழிலாளரை ஒருங்கு திரட்டியதின் பலனாக சங்கம் ஒன்று மலர்ந்துள்ளது. அதனைப் பதிவு செய்யும் பணி தற்போது வேகமாக நடைபெற்றுக் கொண்டுள்ளது. அம்முயற்சிக்கு முழு ஒத்துழைப்புத் தந்து இன்னும் சங்கத்தில் இணையாதிருக்கும் தொழிலாளரை இணையக் கேட்டுக் கொள்வதோடு தொழிலாளி வர்க்கத்தின் ஒரு பகுதியான அச்சுத் தொழிலாளர்கள் மாமேதை மார்க்ஸ் கனவுகண்ட தொழிற்சங்கமாக அணிதிரண்டிருப்பதை வாழ்த்தி வரவேற்று அம்முயற்சிக்கு உதவிக்கரம் நீட்டுமாறு கரத்தாலும் கருத்தாலும் பாடுபடும் உழைக்கும் மக்களை வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கிறோம்.
---------------------------------------------------------------------------------
அச்சகத் தொழிலாளர் கோரிக்கை விளக்கக் கருத்தரங்கம்

நாள் : 29.04.2012, ஞாயிறு மாலை 4 மணியளவில்

இடம் : மகாலட்சுமி திருமண மண்டபம்,
தியாகி பாலு 2-வது தெரு, 50 அடி ரோடு, செல்லூர்

சிறப்புரை:
தோழர் அ.ஆனந்தன்,
சி.ஓ.ஐ.டி.யு., தென் இந்தியப் பொதுச் செயலாளர்.

மதுரை மாவட்ட அச்சகத் தொழிலாளர் சங்கம்
1/3 அஹிம்சாபுரம், 8வது தெரு(விசாலம்) செல்லூர், மதுரை-௨

தொடர்பிற்கு:

R.பெருமாள், செயலாளர். செல்: 934283358.
T.சிவக்குமார், துணைப் செயலாளர். செல்: 9443080634.
M.பால முருகன், அமைப்புச் செயலாளர். செல்: 9843206808.
A.நாகராஜன், பொருளாளர். செல்: 9629372771.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முகப்பு

புதிய பதிவுகள்