திங்கள், 18 ஜூன், 2012

பங்களாதேஷில் மிகப்பெரிய தொழிலாளர் எழுச்சிகார்மென்ட் தொழிற்சாலைகள் மிகுந்த பங்களாதேசில் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் மிகவும் குறைவு. கடுமையாக சுரண்டப்பட்டு கொண்டிருந்த தொழிலாளர்கள் தொழிற்சங்கமாக உருவெடுத்தனர். பல்வேறு தொழிற்சங்கங்க ள் நிர்வாகம் ,அரசு இரண்டின் அடக்குமுறையை மீறியும் நன்கு செயல்பட்டு வருகின்றன. சமீபத்தில் திரு.அமினுள் இஸ்லாம் என்ற பிரபலமான  தொழிற் சங்க தலைவர் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டார். அதை செய்தது கார்மென்ட் தொழிற்சாலை அதிபர்களின் கூலி படை தான் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.  ஊதிய உயர்வு, பணிநேரக் குறைப்பு, மலிவு விலையில் சாப்பாடு உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக 5 லட்சம் தொழிலாளர்கள் நடத்தும் போராட்டம் தற்போது பந்களாதேஷில் வெடித்துள்ளது. தொழிலாளர்கள் தினமும் 10 மணி நேரம் முதல் 16 மணி நேரம் வரை உடல்நோக உழைக்கின்றனர். வாரத்தில் 6 நாள்கள் வேலைக்கு வந்தால்தான் வார இறுதியில் கூலி என்கின்றனர். இப்படி நீண்ட நேரம் உழைப்பதால் உடல் சோர்ந்து தொழிலாளர்கள் தளர்வடைகின்றனர்.

 வங்கதேசத்தில் தையல் கூலி மிகவும் மலிவு என்பதற்காக உலக அளவில் புகழ்பெற்ற ஆடை தயாரிப்பு நிறுவனங்களான ஜேசி பென்னி, வால்-மார்ட், எச் அண்ட் எம், கோல்'ஸ், மார்க்ஸ் அண்ட் ஸ்பென்சர், கேர்ஃபோர் ஆகிய நிறுவனங்கள் தங்களுடைய தேவைகளுக்கு துணிகளைக் கொடுத்து ஆர்டர்களை அளிக்கின்றன.தலைநகர் டாக்காவுக்கு வெளியே புறநகர்ப் பகுதியில் இந்த ஆலைகள் நிறுவப்பட்டு ஆடைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. வங்கதேசத்திலிருந்து ஏற்றுமதியாகும் பண்டங்களில் இந்தரெடிமேட் ஆடைகள்தான் 80% என்பதிலிருந்து இந்தத் தொழில் எந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்று அறியலாம்.
 இந்தத் தொழிலாளர்கள் அனைவருமே ஒப்பந்த அடிப்படையில்தான் வேலைக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றனர். மிகக்குறைந்த கூலியே தரப்படுவதால் உயரும் விலைவாசிக்கேற்ப வாழ்க்கை நடத்துவது மிகுந்த சிரமம்.  நியாயமான ஊதிய உயர்வை  மறுத்த ஆலை நிர்வாகங்கள், போலீஸ் துணையுடன் போராட்டத்தை முறியடிக்கப் பார்த்தன.  போலீசாரும் தடியடி, கண்ணீர்ப்புகைப் பிரயோகம், வழக்கு என்று எல்லா முறைகளையும் கடைப்பிடித்துப் பார்த்தனர். தொழிலாளர்கள் எதிர்பார்த்தபடி ஊதிய உயர்வும் பிற சலுகைகளும் அளிக்கப்படவில்லை. எனவேதான் காலவரம்பற்ற வேலை நிறுத்தத்தில் துவங்கியுள்ளனர். 

தொழிலாளர்கள் கோரும் 50% ஊதிய உயர்வை தர நிர்வாகங்கள் இதுவரை முன்வரவில்லை கேன்டீனில் வழங்கப்படும் உணவுக்குக் குறைந்த கட்டணம், இதர சலுகைகள் தரவும்  நிர்வாகங்கள் தயாராக இல்லை.
இதற்காக சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களைச் செய்த அவர்களைப் போலீசார் தடியால் அடித்தும் தண்ணீர்   பீரங்கியால் நீரைப் பீய்ச்சி அடித்தும் கண்ணீர்புகைக் குண்டுகளை வீசியும் கலைக்கப் பார்த்தனர். கோபம் அடைந்த தொழிலாளர்கள் ஏராளமான வாகனங்களைக் கொளுத்தினர். தற்போது 300 க்கும் மேற்பட்ட ஆலைகள் மூடப்பட்டுள்ளன. ஆலைகளை திறக்கவும்,  தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவும் தொழிற்சாலை நிர்வாகங்கள் முன்வரவேண்டும் என்று இப்போது போராட்டம் நடைபெற்று வருகிறது. பங்களாதேஷில் நடைபெற்று வரும் கார்மென்ட் தொழிலாளர்களின் எழுச்சி நமக்கு புது நம்பிக்கையை அளிக்கின்றது.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முகப்பு

புதிய பதிவுகள்